September 24, 2021

சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்; அரசுக்கு, திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட தமிழக அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
trupathi kovil
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி சென்னை தியாகராயநகர் திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்தார். அவர் அங்குள்ள கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தியாகராயநகர் திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது. தற்போது வாரந்தோறும் 7,500 லட்டு பிரசாதம் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். விரைவில் லட்டு விற்பனை 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது வாரம் 16 ஆயிரம் லட்டுகள் விற்கப்படும்.

திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது. அங்கேயும் லட்டு தட்டுப்பாடு இருக்கிறது. அங்கு தினமும் 3 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி மெதுவாக நடப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அங்கு சென்று பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையிலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். தமிழக அரசு இடம் தந்தால், அதனை விலைக்கு வாங்கி கோவில் கட்டுவதற்கான பணிகளை தேவஸ்தானம் மேற்கொள்ளும்” என்று அவர் கூறினார்.