October 22, 2021

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா கப்பல் சேவை!

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா கப்பல் சேவை இயக்கப்படும் திட்டம் பரிசீலனை யில் உள்ளதாக, மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கன்னியாகுமரியில் சனிக் கிழமை தெரிவித்தார்.
url

ship jan 10
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, கன்னியாகுமரியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி, இந்த மாவட்டத்தை ஆய்வு செய்யும்பொருட்டு மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கன்னியாகுமரிக்கு வந்தார்.அரசு விருந்தினர் மாளிகையில் அவரை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா. “கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத் தலம் என்பதால் இந்த மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளான வட்டக்கோட்டை, சொத்தவிளை, முட்டம், சங்குத்துறை, திக்குறிச்சி ஆகிய பகுதிகளை மேலும் அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஏற்கெனவே ரூ. 117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்பது சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஒரு விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமான நிலையம் அமைய வேண்டுமென்றால் 150 கி.மீ. இடைவெளி தேவை என்பது விதிமுறை. ஆனால். இந்த விதிமுறைகளை தளர்த்தி கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் பரிசீலிக்கப்படும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா கப்பல் சேவை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை உள்ளது. அதுதொடர்பான திட்டம் பரிசீலனையில் உள்ளது.கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்” என்றார் அவர்.