September 25, 2021

சூர்யாவின் மாசு படத்திற்கு வரி விலக்குக் கிடைக்காததற்குக் காரணம் – ஈழம்? புது சர்ச்சை!

கிட்டத்தட்ட பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒரு படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கிறது என்றால், அந்தப் பலனை மக்கள்தான் அனுபவித்து வந்தார்கள். வரிவிலக்கு கொடுக்கப்பட்ட படத்தின் டிக்கெட்டுகள் பாதி விலைக்கு கவுண்டரில் விற்கப்படும். இது வரி விலக்கு பெற்ற படம் என்று ஸ்பெஷலாக விளம்பரம் செய்து மக்களை கவருவார்கள். இன்றைய இயக்குநர்,நடிகர்களில் பலரும் பொடியனாய் இருக்கும்போது ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற படத்தை இப்படி வரிவிலக்கில்தான் போய் பார்த்திருப்பதை மறந்திருக்க மாட்டார்கள்.ஆனால் இன்று 15 கோடி 30 கோடி என்று சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் நடிக்கும் சினிமாக்களுக்கு அரசு வரிவிலக்கு தரவில்லை என்று சோக கீதம் பாடும் அதிகரித்து வருகிறது.
maasu jun 3
இதையொட்டி நந்தனத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.ஜே.சரவணன் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு மனுவில்,”தமிழ் பெயர்கள் கொண்ட திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடிவு செய்து கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலையில் அரசு ஆணை வெளியிட்டது.இதன் பிறகு தமிழ் மொழி, கலாசாரம் ஆகியவற்றை வளர்க்கும் விதமான திரைப்படங்கள், யு தணிக்கை சான்றிதழ், அதிக வன்முறை சம்பவங்கள் இல்லாத படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு மீண்டும் அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் வணிக வரித் துறை திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு, பார்வையாளர் களிடமிருந்து வரியுடன் சேர்த்து அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலித்தால் அது சட்டத்தை மீறியதாகும் எனத் தெரிவித்தது. ஆனாலும் இவ்வரி விலக்குதிரையரங்க உரிமையாளர்கள் பயன் பெறும் வகையில் உள்ளது. எனவே, வணிக வரித் துறை கடந்த ஆண்டு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. அது இன்னும் விசாரணையில் உள்ளது.

இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் மாசு என்கிற மாசிலாமணி. முதலில் மாஸ் என பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு வரிவிலக்கில் பிரச்னை ஏற்படலாம் என்ற எண்ணத்தில் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. படத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான வசனம் இருந்ததால் வரிவிலக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சினேகன் கூறியபோது,

‘மாசு படத்துக்கு வரிவிலக்கு கிடையாது. பட உரிமையை சன் டிவிக்கு கொடுத்ததால் தான் மறுக்கப்பட்டது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.அது கிடையாது. மாசு படத்தின் ஒரு இடத்தில், நீ ஈழத் தமிழ் பேசுகிறவனா, உன்னை உதைக்கணும் என்று வசனம் வருகிறது. அதைக் கோடிட்டு ஒரு தமிழ் துறையைச் சார்ந்த அதிகாரி எழுதியிருக்கிறார், ஈழத் தமிழையும் ஈழத் தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று. இப்படிப்பட்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதற்கு நிறைய அதிகாரிகள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். இதே படக்குழு அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். ஆனால் முடியாது என்று சொல்லியிருக்கிறார் என்றார்.

அதுபோல் இதில் ஈழத்தமிழ் பேசும் சூர்யாவிடம் ’நீ சிலோனா’ என வில்லன் கேட்பதும் அதற்கு பதிலடியாக ’தமிழின்டா நான் சொந்த மன்ணை பறி கொடுத்துட்டு தனக்கு ஒரு அடையாமில்லாம இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிற அவனோட வலி என்னவென்று தெரியுமா உனக்கு’ என சூர்யா பேசுவது போன்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்,”ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வசனங்களோ காட்சிகளோ அந்தப் படத்தில் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மலேசியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர். படத்தை பார்த்த ஈழத் தமிழர்கள் யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழர்கள்தான்” என்றார்.