September 18, 2021

சூரிய வெப்பத்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏன்?

நடப்பு ஆண்டில், இந்தியா முழுவதும் வெப்ப அலைகளின் பாதிப்பால் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவு பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,700-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் மே 21-ஆம் தேதியில் இருந்து நேற்றுவரை வெப்ப அலைகளுக்கு சுமார் 2,600 பேர் இறந்து போயுள்ளதாக “ஈநாடு’ நாளிதழ் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
india heat 1
அரசின் கணக்கெடுப்பிலும் சரி, ஈநாடு நாளிதழின் கணக்கெடுப்பிலும் சரி, வெப்ப அலைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து இறப்பவர்களைத்தான் கணக்கில் சேர்க்கிறார்கள்.
ஆனால், கொடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்தினால் இதயம், சிறுநீரகம் போன்றவை பழுதடைந்தும், நீரிழப்பின் பாதிப்பால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தக் கணக்கெடுப்புகளில் சேர்க்கப்படுவதில்லை. அந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டால், இறந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் 2010-இல் வெப்ப அலைகளால் 50 பேர் மட்டுமே இறந்ததாக அரசின் புள்ளிவிவரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 1,344 பேர் வெப்ப அலைகளின் நேரடியான, மறைமுகமான தாக்கத்துக்கு உள்ளாகி இறந்தது ‘டப்ர்ள் ஞய்ங்’ என்ற இதழுக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.

வெப்ப அலைகளை மூன்று நிபந்தனைகளின் கீழாக வரவிலக்கணப்படுத்தலாம். ஓர் இடத்தில், குறிப்பிட்ட ஒரு நாளில், நீண்ட கால வெப்ப நிலையின் சராசரியை விட 5 அல்லது 6 பாகைகள் (டிகிரி) வெப்பநிலை அதிகமாக இருந்தால் அந்த நிலையை “வெப்ப அலைகள்’ என்பார்கள். இந்த நிலை 40 பாகை செல்சியஸுக்கு குறைவாகப் பொருந்தும்.

சராசரி வெப்ப நிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தால் அந்த நிலையை “வெப்ப அலைகள்’ என்பார்கள். இதைவிட சூழலின் வெப்பநிலை 45 பாகை செல்சியஸýக்கும் அதிகமாக இருந்தால் அந்த நிலையையும் “வெப்ப அலைகள்’ என்றே சொல்வார்கள்.

“வெப்ப அலைகளின் பாதிப்பால் இறப்பு ஏற்பட பிரதான காரணம் நீரிழப்பாகும். வெப்ப அலைகள் போன்ற உயர் வெப்ப நிலையில், அதிக நீரிழப்பு ஏற்பட்டு உடலிலுள்ள நீரின் அளவு கணிசமாகக் குறைவடையும். இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் இதனால் பாதிக்கப்படும்.

அதிகரிக்கும் வெப்ப நிலையால் குருதியின் கெட்டிப்படும் தன்மை அதிகரித்து மூளையில் அடைப்புகள் ஏற்படும். வெப்ப அலைகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே, வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு மயக்கமடைபவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்கிறார் நரம்பியல் நிபுணர் டாக்டர் முருகன்.

“வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி நீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்களிலும், குழந்தைகளிலும்தான் நீரிழப்பின் அளவு அதிகமாக இருக்கும். அதிக அளவு தாகம் எடுக்கும், மயக்கம் வருவது போல இருக்கும், படபடப்பு வரும், உடலில் நீர் இல்லாததால் வியர்வை வெளியேறாது.

காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்வதைக் கூடிய அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் தண்ணீர் பாட்டில் ஒன்றைக் கை வசம் வைத்திருப்பது நன்று.

நிறைய தாகம் எடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் நீர் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நலம்’ என்கிறார் டாக்டர் திலீபன்.

வெப்ப அலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முறையான செயல்திட்டம், இந்தியாவில் முதன் முறையாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயல்திட்டம் மூன்று படிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்கு வெப்ப அலைகளின் பாதிப்பு சம்பந்தமாக அறிவூட்டுதல் முதல் படிமுறை.

இரண்டாவதாக, ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் முன்கூட்டியே பெற்று அதை எஸ்.எம்.எஸ், மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவும், ஒலிபெருக்கிகள், துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் மூலமாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். இதனால், வெயிலுக்குத் தகுந்தவாறு தமது நடவடிக்கைகளை மக்கள் திட்டமிட்டுக் கொள்வது இலகுவாக உள்ளது.

மூன்றாவதாக, வெப்ப அலைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவு நலன்புரி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கே, அதிக அளவு சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப அலைகளின் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் ஆமதாபாத் நகராட்சியில், இந்த செயல்திட்டத்தால் வெப்ப அலைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் கணிசமாகக் குறைந்துள்ளது.

“தமிழ்நாட்டில் இதே போன்றதொரு செயல்திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளோம்’ என நம்பிக்கை தருகிறார் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் தகவல், கல்வி, தொடர்பு நிறுவகத்தின் இயக்குநரான நான்சி அனபெல்.

“தாவரங்கள், விலங்குகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான செயல்திட்டங்களைப் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். மனிதர்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான செயல்திட்டம் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கிராம அறிவு மையங்கள் மூலமாக வெப்ப அலைகளின் அன்றைய நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களை விழிப்புணர்வில் வைத்திருக்கிறோம்’ என்கிறார் நான்சி.

வெப்ப அலைகளால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் இன்றைய காலத்தில், இதுபோன்ற செயல்திட்டம் மிக மிக அவசியமானதொன்றாகும்.

அருளினியன்