September 18, 2021

சூரியனையே ‘கூறு’ போட்டு விற்றுவரும் ஸ்பெயின் லேடி!

உங்கள் நகருக்கு வெகு அருகில் என்று பொய் சொல்லி விளைநிலங்கள் எல்லாம் பிளாட் போட்டு விற்கப்படுவது தெரியும். ஆனால் சூரியனையே பிளாட் போட்டு ஒரு பெண் விற்றுள்ளார். ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் இதற்காக விளம்பரம் செய்து சுமார் 700 ப்ளாட்களையும் அவர் விற்றுள்ளார். அதே சமயம் தனக்கு சேர வேண்டிய பணத்தைத் தராமல் இ-பே நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்சியா பகுதியைச் சேர்ந்த 54 வயதாகும் மரியா டுரான் என்ற அந்தப் பெண், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சூரியன் தனக்குச் சொந்தமானது என்று கூறி இந்த விற்பனையை செய்துள்ளார்.
sun sale lady
சூரியன் தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து சூரியனை பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு யூரோ என்ற அடிப்படையில், பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் விளம்பரம் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய இந்த விற்பனையை தெரிந்துக் கொண்ட இ-பே, சூரியனில் பிளாட் போட்டு விற்கும் அந்த பெண்ணின் விளம்பரத்தை தடை செய்தது. மேலும் அவருடைய கணக்கையும் செயல்படுத்த முடியாதபடி முடக்கியது.

“இதுவரை எனது விளம்பரத்தைப் பார்த்து 700 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் செலுத்திய பணத்தை இ-பே நிறுவனம் எனக்குத் தராமல் மோசடி செய்துள்ளது. விளம்பரத்தைத் தொடர்ந்து வெளியிட அனுமதிக்க வேண்டும். மேலும் இதுவரை செலுத்தப்பட்ட தொகையையும் இ-பே செலுத்த வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் மரியா வழக்குத் தொடர்ந்தார். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. விளம்பரம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவை அந்தப் பெண் மீறியுள்ளார். எப்படி அவருடைய விளம்பரத்தை நிறுத்தலாம் என்று விளக்கம் அளிக்கும்படி இ-பே நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையில் சமரசம் செய்து கொள்ள இ-பே முன்வந்ததாகவும், அதை ஏற்க மறுத்ததாகவும் மரியா கூறியுள்ளார். தனக்கென தனி இணைய தளம் தொடங்கி, தனக்கு சொந்தமான சூரியனில் போட்டுள்ள பிளாட்களை தொடர்ந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சட்டத்தின்படி எந்த ஒரு கோளையும், நட்சத்திரத்தையும் (சூரியன் ஒரு நட்சத்திரம்) எந்த ஒரு நாடும் உரிமை கோர முடியாது. “ஒரு நாடுதான் நட்சத்திரங்களுக்கு உரிமை கோர முடியாது. இதுகூடவா எனக்குத் தெரியாது. ஆனால் நான் தனி மனுஷி. எனக்கு உரிமையுள்ளது. அதனால் சூரியன் எனக்குத்தான் சொந்தம்” என்கிறார் மரியா.