October 16, 2021

சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்!

நேற்று தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்ந்தேடுப்புக்கான தேதியையும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குள் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டதை, தொலைக் காட்ட்சிகளின் விவாத மேடைகள் மூலம் தெரிந்தது..

மற்ற நேரங்களில் நடக்கும் தேர்தல் காட்சியை விட இந்த தேர்தல் சற்று விறுவிறுப்பானது. காரணம், இந்தத் தேர்தல் மே மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன் மாதிரி வடிவமாக இருக்கும். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர் மேலும் தங்களின் சக்தியை கூட்டிக் கொள்வர், தோற்றவர் நிச்சயம் வேறு ஒரு வியூகம் எடுத்து களம் காண்பர்.
india assembly elections 2013-2014
இனி நிகழ்வுகளை அலசுவோம்:

1. ஏற்காடு தேர்தல்:

முன்பெல்லாம் இடைத்தேர்தல் என்பது ஒரு காலக் கண்ணாடியாக இருந்தது. ஆட்சியாளர்களின் மீதுள்ள அதிருப்திகளை இடைத் தேர்தல்கள் பிரதிபலித்தன. அத்தகைய ஜனநாயகக் கண்ணாடிகள் உடைக்கப் பட்டு, எதை வேண்டுமாலும் பிரதிபலிக்கும் மாயக் கண்ணாடியை வாங்கி வைக்கும் முயற்சிதான் தற்போது இடைத் தேர்தல் எனும் ஒரு கண்மூடி வித்தை.

ஏற்கனவே திமுக இதில் போட்டியிட அதிகம் விருப்பம் தெரிவிக்காத நிலையில் கேக் வாக் எனும் வெற்றியை அதிமுக பெறும். இதில் கருத்து சொல்ல ஒன்றுமே இல்லை. ஒருவேளை திமுக கடைசி நிமிடத்தில் தீர்மானித்து போட்டியிட விரும்பினாலும், அரசின் அத்தனை இயந்திரங்களும் ஏற்காடு மலையில் முகாமிட்டு அதிமுகவை ஜெயிக்க வைக்கும்.

2. ராஜஸ்தான் சட்டமன்றம்:

ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் அந்தக் கட்சியின் உறுப்பினர் பெண்களுக்கு எதிராக செய்த கொடுமை என்று பல விஷயங்களில் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதை விட வாய்ப்பே இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். வசுந்தரா ராஜேவின் கடந்த கால ஆட்சி அத்தனை திருப்தியாக இல்லை எனினும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு மாற்று பாஜக ஒன்றே எனும் நிலையில், வசுந்தரா ராஜே நிச்சயம் முன்னணியில் இருக்கிறார். இதில் கூடுதல் தகவல், இவர் அறுதிப் பெரும்பான்மை பலம் பெறுவார் என்று பல கணக்கெடுப்புகளும் தெரிவிக்கின்றன.

3.சட்டிஸ்கர்:

ஆளும் பாஜகவிற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. முதல்வர் ரமண்சிங் தலைமையில் மாநிலம் ஓரளவிற்கு அமைதிப் பூங்காவாக உள்ளது என்பதும் ரமண்சிங் மிக எளிமையானவர் மற்றும் அனைவராலும் அணுக முடியும் எனும் நம்பிக்கையை விதைத்துள்ளவர் என்பதால், இவருக்கு வெற்றிக் கனி என்பது மிகச் சுலபமாக இருக்கிறது என்கிறது கருத்துக் கணிப்பு.

4 .மத்தியப் பிரதேசம்:

மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் அதித்யா சிந்தியா எனும் 24 வயது மகனை முன் நிறுத்திக் களம் காண்கிறது காங்கிரஸ். ஏற்கனவே இருந்த பழைய முதல்வர் திக் விஜய் சிங் இவருக்கு துணை இருப்பார் என்று காங்கிரஸ் பக்கம் இருந்து தகவல்கள் வருகிறது. திக் விஜய் சிங் என்பவரது அரசியல் பேச்சுக்கள் காங்கிரஸ் காரர்களுக்கே எரிச்சலாக இருக்கும் போது, ராகுல் ஆதரவு பெற்ற இந்த இளம் சிந்தியா எப்படி திக் விஜயைக் கொண்டு ஆளும் பாஜகவைக் களம் காணப் போகிறார் என்று தெரியவில்லை.

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் என்பரை மோடிக்கு இணையாக வளர்ச்சிப் பணிகளில் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். உமா பாரதி போன்ற பழைய எதிரிகள் கட்சிக்கு உள்ளேயே இருந்தாலும், சௌகான் ஒரு 7 இடங்களை மட்டுமே இழந்து மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.

5 .புது டில்லி:

மிகவும் ஆர்வமுடன் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் முடிவு டெல்லி என்றால் வியப்பில்லை. காரணம் அத்தனை சிக்கல் இருக்கிறது அதில். கடந்த முறை தேர்தலில் முத்தரப்பு போட்டி இல்லை. ஆனால் இம்முறை அசாரே குழுவில் இருந்து பிரிந்து அரசியல் ஆர்வத்துடன் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி மூட்ராவது அணியாகப் போட்டி போடுகிறது. வெங்காய விலை உயர்ந்தபோது பாஜக ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து 1998 இல் முதல்வர் பதவியைப் பிடித்த ஷீலா தீட்சித் இந்த முறை அதே வெங்காய விலை உயர்வால் வீழ்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். பாஜக தரப்பில் இருந்து போட்டியிடும் விஜய் கோயல் புதியவர் என்பதால் ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் ஷீலா போன்ற திறமையான ஒரு நிர்வாகி அளவிற்கு கோயல் இருப்பாரா என்பது சந்தேகமே.

இதே சந்தேகம்தான் டில்லி வாழ் மக்களுக்கும். ஆகவே இருக்கும் 70 தொகுதிகளில் 30 காங்கிரசும் 30 பாஜகவும் 7 ஆம் ஆத்மியும் பாக்கி ஏனையோரும் என்றும் கருத்துக் கணிப்பு வந்துள்ளது. ஆகவே ஆம் ஆத்மியின் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது எனும் நிலைமை அதன் கட்சி நிர்வாகி அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மிகச் சாதகமாக உள்ளது. இந்த சாதக நிலையை சரியாகப் பயன் படுத்தினால், அடுத்த முறை அரவிந்த் டில்லிக்கு ராஜாவானாலும் ஆகலாம். அல்லது தனது கட்சியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்று எப்போது எம் எல் ஏக்கள் விலைக்கு வேண்டுமோ அப்போதெல்லாம் விற்று காசு பார்க்கலாம்..

டில்லி களம் பாஜகவும் ஆம் ஆத்மியும் சேர்ந்து அரசு உண்டாக்கும் எனும் பரவலான பேச்சை அரசியல் களத்தில் கேட்க முடிகிறது.

ஆனால் மிகப் பெரும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

ஏறக்குறைய இந்தத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ள பாஜகதான் நாளைய பாராளுமன்றத்திலும் வெற்றி பெறுமா என்பதே!

சில பதில் இல்லாத கேள்விகள் கீழே தரப்பட்டுள்ளன:

1. மோடி என்பவர் உண்மையில் இந்தியா குறித்த தீர்க்க தரிசனம் உள்ளவர் என்றால் அவர் இந்தியாவை எவ்வாறு வழி நடத்திச் செல்வார் என்பது குறித்த திட்டவட்டமான செயல்பாடுகள் இதுவரை வெளியிடவில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒன்று குஜராத் மாநிலம் நன்றாக செயல் படுகிறது, ஆகவே இந்தியாவும் அது போலவே இருக்கும் என்று கணிக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டார் தேசிய அளவில் அதை செய்ய முடியுமா என்று எழும் சந்தேகங்களுக்கு இன்று வரை அவர் தரப்பில் இருந்து விடை சொல்லவில்லை.

– ராகுல் காந்தியின் சமீப நடவடிக்கைகள் பலருக்கு வியப்பைத் தந்துள்ளது. தனது கட்சிக்கு எதிராகவே பொது மேடையில் விமர்சனம் செய்தவது என்பது யாரும் எதிர்பாராத ஒன்று. இதன் பின்னணியில் என்ன இருக்கிறது? தன்னை மட்டும் மிஸ்டர் கிளீன் என்று நிலை நிறுத்தி மன்மோகனையும், சோனியாவையும் பின்னால் தள்ளி வைத்து விட்டு களம் காணப் போகிறாரா? இதற்கு இடையில் அவரின் ஐரோப்பாவைச் சேர்ந்த பெண் நண்பரை திருமணம் செய்வதும் ஒத்திப் போடப் பட்டுள்ளது. அது தேர்தலுக்கு முன் நடந்தால், வெளி நாட்டுப் பெண்ணை மணந்தார் எனும் ஒரு விஷயம் மிகவும் பெரிதாகப் பேசப் பட்டு அது காங்கிரசின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் கருதி இருக்கலாம்.

– பாஜகவின் உட்கட்சிப் பூசல்கள் இன்னமும் முடிவிற்கு வந்தமாதிரி தெரியவில்லை. ஆகவே கடைசி நிமிட ஆன்டி கிளைமாக்ஸ் காட்சிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

– வலு இழந்து கொண்டு வரும் லாலுவின் கட்சி, முலயாமின் கட்சி என்று இவர்களுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்து கொள்ள போகிறதா என்பதும் ஒரு காரணக் குறியீடு……

ஆனாலும் என்ன? ஐந்து வருடம் மக்களைக் குழப்பி, பல சட்டங்களை திருத்தி அவர்கள் மீது புகுத்திய இந்த அரசியல்வாதிகள் கொஞ்சநாள் குழம்பிக்கொண்டும் அடித்துக் கொண்டும் தங்களின் இரத்த அழுத்தத்தை உயர்த்திக் கொண்டும் கொஞ்சமாவது ஜனங்களுக்கு கோமாளி வித்தை காட்டட்டுமே எனும் நினைப்பில்தான் பொது மக்கள் இருக்கிறார்கள்…

ஸ்டெல்லா நாராயணராவ்