September 20, 2021

சுவாமி தயானந்த சரஸ்வதி மகா சமாதி அடைந்தார்

கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனரும், உலக பிரசித்தி பெற்ற வேதாந்த ஞானியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி புதன்கிழமை இரவு 10.20 மணி யளவில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் மகா சமாதி அடைந்தார். கடந்த சில மாதங்களாக நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கோவை, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு ரிஷிகேஷ் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், அவர் புதன்கிழமை இரவு மகா சமாதி அடைந்தார்.
dhaya samy
பிரதமர் மோடியின் ஆன்மிக குருவாகத் திகழ்ந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இவரை பிரதமர் மோடி ரிஷிகேஷில் அண்மையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இறுதிச் சடங்கு ரிஷிகேஷில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்தில் புதன்கிழமை நள்ளிரவு முதலே, சுவாமியின் பக்தர்கள் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாழ்க்கைக் குறிப்பு: சுவாமி தயானந்த சரஸ்வதி 1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் பிறந்தார். 1962-ஆம் ஆண்டு சுவாமி சின்மயானந்தரிடம் சன்னியாசம் பெற்ற இவர், 1990-இல் கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை நிறுவினார்.

தவிர, ரிஷிகேஷ், நாகபுரி மற்றும் அமெரிக்காவில் உள்ள செய்லர்ஸ்பர்க் ஆகிய இடங்களிலும் ஆசிரமங்களை நிறுவி வேதாந்தத்தைக் கற்றுக் கொடுத்தார். இங்கு பயின்ற 200-க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தத்தைப் போதித்து வருகின்றனர். ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவ, நாடு முழுவதும் 120 இடங்களில் “எய்ம் பார் சேவா’ என்ற பெயரில் இலவச விடுதிகளை 2000-ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வந்தார்.

மேலும், ஆன்மிகம், கலை, கலாசாரம், சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.