October 19, 2021

சுற்றுச்சூழல்: இந்தியாவுக்கு 155-வது இடம்!

இந்த ஆண்டுக்கான “உலக சுற்றுச்சூழல் குறியீடு, 2014′, அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.உலகிலுள்ள 178 நாடுகளின் சுற்றுச்சூழல் தன்மையை ஆராய்ந்த இந்த மையம் நல்ல தரமான சுத்தத்துடன் விளங்கும் சுற்றுச்சூழல் கொண்ட நாடுகளை முதலில் அட்டவணையிட்டு வரிசைப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவிற்கு 155ஆவது இடம். நம் நாட்டின் சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமான நிலைமையை அடைந்துள்ளது என்பதை இந்த வரிசை எண் வெளிப்படுத்துகிறது.இந்த அட்டவணைப்படி மிகவும் சுத்தமான சுற்றுச்சூழல் உள்ள முதல் ஐந்து நாடுகள்: சுவிட்சர்லாந்து, லக்சம்பெர்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செக்கோஸ்லோவேகியா. அது போல, மிகவும் அசுத்தமான சுற்றுச்சூழலைக் கொண்ட நாடுகள் சோமாலியா, மாலி, ஹைட்டி, லெசோத்தோ, ஆஃப்கானிஸ்தான்.
environment in india feb 15
மிகச் சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்ட நாடுகள் வளர்ந்துவிட்ட பொருளாதாரத்தையும், நேர்மையான அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பையும் உள்ளடக்கிய நாடுகள் என்பது தெளிவாகப் புரியும்.அதுபோலவே மிகவும் மோசமான சுற்றுச் சூழலைக் கொண்ட நாடுகள் ஏழ்மையையும் கட்டுப்பாடற்ற நிர்வாகத்தைக் கொண்ட பின்தங்கிய நாடுகள் என்பதும் புரியும்.

பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் எப்படி கணிக்கப்படுகிறது என்பதை யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் விளக்கியுள்ளது. காற்றின் சுத்தம், நீரின் சுத்தம் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை அலசி, சம்பந்தப்பட்ட நாட்டின் சுத்தத் தன்மையை கணிக்கிறது.

ஆக, ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் மிக மோசமாக இருக்கிறது என மிகவும் தேறிய விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சியை நடத்தி ஒரு நிறுவனம் அறிவித்தபின், அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு அந்த நாடு, காற்று, நீர் மற்றும் கழிவுப் பொருள்களை அகற்றுதல் ஆகியவற்றை சரியான நிர்வாக நடைமுறைகளைக் கையாண்டு, சரிசெய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

ஆனால், 2010ஆம் ஆண்டில் இதே யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி இந்தியாவிற்கு வழங்கிய குறியீடு 123. சரியாக 4 ஆண்டுகள் கழித்து மறுபடியும் ஆராயும்போது நமது நாட்டின் குறியீடு 155 என மேலும் மோசமாகியுள்ளது. இதே காலகட்டத்தில் சீனா சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறது.

யேல் பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சியை நடத்துபவர்களுள் முதன்மையானவர் ஏங்கெல் சூ எனும் பேராசிரியர். அவர் கூற்றுப்படி பொருளாதார முன்னேற்றத்தில் “பிரிக்ஸ்’ எனப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகியன மற்ற நாடுகள்.இவற்றில் இந்தியாவைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க தேவையான நிர்வாக விதிமுறைகள் அரசினால் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என கூறுகிறார் ஏங்கெல்.

ஒரு நாட்டில் நகர்ப்புற வளர்ச்சி மிக அதிக அளவில் நடைபெறும்போது, திட மற்றும் நீர்க்கழிவுகள் அதிகமாக உருவாகும். கட்டட வேலைகள், நவநாகரிகமான வாழ்க்கை முறை, அதிக எண்ணிக்கையில் மோட்டார் வாகனங்கள், ரயில் மற்றும் ஆகாய விமானங்கள் உபயோகிக்கும்போது உருவாகும் புகை மண்டலங்கள், தொழிற்சாலைகளில் வெளியாகும் கரும் புகை, கழிவுநீர் ஆகியன சுற்றுச்சூழலை பாதிக்கும்.

இந்தக் கழிவுகளில் உருவாகும் திடக் கழிவுகள் காற்றில் கலந்து அதை சுவாசிக்கும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும். காற்றில் மிதக்கும் கழிவுகளை நுண் நோக்கி எனப்படும் மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் அளந்து பார்க்கிறது நவீன விஞ்ஞான ஆராய்ச்சி.

ஒரு மீட்டர் தடிமன் கொண்ட ஒரு பொருளை ஒரு கோடி அளவிற்கு சிறியதாக உடைத்து சிதறினால் அந்த தனித் துகள்கள் நம் கண்களுக்கு தெரியாது. ஆனால் மைக்ரோஸ்கோப்பில் கண்டுபிடித்து விடலாம். இதன் அளவை “பி.எம்.10′ எனக் கூறுகிறார்கள்.

இந்த “பி.எம்.10′ எனும் துகள்கள் சீனாவில் 2010ஆம் ஆண்டு எத்தனை கன மீட்டர் சுற்றுச்சூழல் காற்றில் இருந்ததோ அது நான்கு ஆண்டுகளில் 40 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது என்பதை 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் நம் நாட்டில் இதே காலகட்டத்தில், அதாவது 2010 முதல் 2014 வரையில் இந்த “பி.எம்.10′ கழிவுத் துகள்கள் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

நம்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நிர்வாகம் தவறிவிட்டது என்பதையும் அதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை என்பதையும் இந்த ஒரு கணக்கெடுப்பிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற துகள்கள் கலந்த காற்றினை சுவாசிப்பதால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்களை இதுதான் காரணம் என்று தெரியாமல் மருத்துவர்கள் மருந்து கொடுத்து குணமாக்க முயற்சிக்கிறார்கள். தவறான மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக அம்மக்கள் வேறு சில நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் பற்றிய ஆராய்ச்சியை நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனமான “விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ தில்லியில் இயங்குகிறது. இதன் துணை இயக்குநரான அனுமிதா ராய் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளார். அவர் கூறுகிறார்: “சீனாவில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றப்படுகின்றன. காற்றின் சுத்தம் பாதிக்கப்படாமல் இருக்க அந்நாட்டில் விற்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு ஆண்டுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கார்கள்தான் தனியாருக்கு விற்கப்பட வேண்டும் என 2014ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டுள்ளது’.

மேலும், இந்த ஆண்டு முடிவில் சீனாவின் காற்றுச் சூழ்நிலையை ஆராய்ந்து “பி.எம்.10′ துகள்கள் எண்ணிக்கை குறையவில்லை என்றால், தனியார் உபயோகிக்கும் கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரமாக அடுத்த ஆண்டு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் அறிவிப்புடன் நிற்காமல் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி ஒரு நகரின் பல பகுதிகளையும் பிரித்து ஒவ்வொன்றின் காற்றோட்டத்தையும் கண்காணித்து கழிவுத் துகள்களை ஆராயும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும்.

ஒரு பகுதியில் காற்றில் நிறைய கழிவுத் துகள்கள் இருந்தால் அந்த நகரின் நிர்வாகமே, குறிப்பிட்ட பகுதிக்கு புகை வெளியிடும் வாகனங்கள் செல்லாதபடி தடுத்து விடுகிறது. காற்றின் சுத்தம் சரியான பின்தான் கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்ற நிர்வாகச் சூழ்நிலை சீனாவில் நிலவுகிறது. இன்றைய நிலைமையில் காற்றின் சுத்தத்தில் 178 நாடுகளில் 155ஆவது எண் வரிசையில் நாம் பின்தங்கியிருக்கும்போது, நம்மைவிட பொருளாதாரம், கல்வி, பொது சுகாதாரம், விஞ்ஞானிகளின் எண்ணிக்கை போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ள பாகிஸ்தானில் காற்றின் சுத்தம் நன்றாக உள்ளது என்பதை அந்நாடு 148ஆவது எண்ணில் இருப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

அதைவிடவும் நமது அண்டை நாடான இலங்கை மிகவும் சுத்தமான காற்றுச் சூழ்நிலையைக் கொண்டுள்ள நாடாக பட்டியலில் 69ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிறைய தொழிற்சாலைகளும் கனரக வாகனங்களும், ரயில்களும், விமானப் போக்குவரத்துகளும் இல்லை என்ற காரணத்தினால் அங்கே சுற்றுச்சூழல் பாதிப்புகளும் குறைவு என சிலர் வாதிடுகின்றனர்.அதிக முன்னேற்றமும் தரமான வாழ்க்கையும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் அரசு நிர்வாகம், அதன் பின்விளைவிலான பாதிப்பைத் தடுக்காமலிருப்பதைவிடவும் முன்னேற்றம் அடையாமல் இருப்பது பரவாயில்லை என தோன்றுகிறது.

2004ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள ஒரு சிறிய ஊரிலிருந்த ஒரு பொதுக் கழிப்பிடத்தைப் பார்வையிட நேர்ந்தது. குடிசைப் பகுதியான தமிழர்கள் வசிக்கும் அப்பகுதியில்கூட பொதுக் கழிப்பிடம் மிகுந்த நேர்த்தியுடனும் தண்ணீர் வசதியுடனும் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.பொருளாதார முன்னேற்றத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருவதல்ல. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுவதே முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது.எது எப்படியாயினும் கட்டுப்பாட்டுடன் சுற்றுச்சூழல் பாதிப்பை நிர்வாகம் தடுக்காதது நிறைய மக்களின் கவனத்திற்கு வராத ஒரு சுகாதார கேடு என்பதுதான் உண்மை!

என். முருகன்