September 21, 2021

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி விவகாரம்!

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பயிற்சிக்கு வந்த சட்டக் கல்லூரி மாணவியை ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு.மாணவி போலீசில் புகார் கொடுக்கவில்லை. வலை தளத்தில் குறிப்பிட்டார். அதை அரசு வக்கீல் சுப்ரீம் கோர்ட் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதை விசாரிக்க மூன்று நீதிபதிகள் குழுவை தலைமை நீதிபதி நியமித்தார். அதில் கங்குலியும் மாணவியும் தனித்தனியே வாக்குமூலம் கொடுத்தனர். விசாரணை அறிக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்டது.
Edit ganguly owl 17
கங்குலி தவறாக நடந்தார் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எனினும், அவர் இப்போது நீதிபதியாக இல்லாததால் கோர்ட் நடவடிக்கை எடுக்காது என தலைமை நீதிபதி அறிவித்தார்.மகளிர் அமைப்புகள் ஏற்கவில்லை.

மத்திய அரசும் ஏற்கவில்லை. மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. அவரை நியமனம் செய்ய சிபாரிசு செய்த முதல்வர் மம்தாவே அவரை நீக்குமாறு ஜனாதிபதிக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்.

கங்குலி விலகவும் இல்லை; அவர் மேல் நடவடிக்கையும் இல்லை என்ற நிலையில், மாணவி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முன்பு கொடுத்த வாக்குமூலத்தை மத்திய அரசின் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டுள்ளார். இனி சுப்ரீம் கோர்ட்டும் கங்குலியும் என்ன செய்ய போகிறார்கள் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கேட்கிறார்.

கங்குலியோ,ஒரு ரகசிய ஆவணத்தை எப்படி வெளியிடப் போயிற்று? என சட்டப் பிரச்னை எழுப்ப முயல்கிறார். அவர் செய்தது பெரிய குற்றம் இல்லை என்று சித்தரிக்க தீவிரமான முயற்சிகள் நடக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்கவே வாக்குமூலத்தை பகிரங்கப்படுத்தியதாக இந்திரா கூறுகிறார்.

மாணவியின் ஒப்புதலுடனே இதை செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.படிப்பறிவு இல்லாதவர்களே பெண்களிடம் தவறாக நடப்பதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். ‘அனைத்து பிரஜைகளின் ஒழுக்கத்துக்கும் வழிகாட்டும் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியவரே தவறு செய்யவும், அது இருட்டடிப்பு செய்யப்படவும், அவர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பவும் வழி ஏற்படுத்தப்பட்டால் இந்த நாட்டுக்கு விமோசனமே இல்லை என்று எண்ணற்ற பெண்கள் அஞ்சுகின்றனர்.

அந்த குமுறலின் எதிரொலியாக மாணவியின் வாக்குமூலத்தில் சில பகுதிகள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. (உரையாடல் குறியீடுகள் வசதிக்காக மட்டும்.)

டிசம்பர் 24 இரவு 8 மணி. லி மெரிடியன் ஹோட்டலில் கங்குலி தங்கியிருந்தார். அங்கு வந்து தன்னை சந்திக்குமாக சொன்னார். போனேன். அவர் அறையில் வேறு இரண்டு ஆட்களும் இருந்தார்கள். ஒருவர் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை சேர்ந்தவர்; அவருடன் இருந்த பெண் ஒரு ஸ்டெனோகிராபர் என்று கங்குலி சொன்னார்.

‘இவர்களுடைய கேஸ் ரிப்போர்ட் நாளை காலையில் தாக்கல் செய்தாக வேண்டும். அதனால் நீ இங்கேயே தங்கி ரிப்போர்ட்டை முடித்துக் கொடு. ராத்திரி முழுவதும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. வேலை முடிய வேண்டும்’ என்று கங்குலி என்னிடம் சொன்னார்.

‘ஸாரி, என்னால் ராத்திரி இங்கே தங்க முடியாது. வேலையை சீக்கிரம் முடித்துக் கொடுத்துவிட்டு ஹாஸ்டலுக்கு போய்விடுகிறேன்’ என்று சொன்னேன்.கங்குலி நான் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ‘ஒரு ராத்திரி தங்குவதால் என்ன வந்துவிட போகிறது’ என்றார். நான் திரும்பத் திரும்ப அங்கே தங்க மாட்டேன் என்பதை உறுதியாக சொன்னேன்.

அவர் அதை கண்டுகொள்ளாமல், ‘இவளுக்கு ஒரு ரூம் போட முடியுமா என்று ரிசப்ஷனை கேட்டுப்பார்’ என்று கால்பந்து சம்மேளன ஆளிடம் சொன்னார்.அந்த ஆள் தயக்கத்துடன், ‘சார், உங்களை தவிர யாருக்கும் இங்கே ரூம் போட்டுக் கொடுக்க எங்களுக்கு பெர்மிஷன் இல்லை…’ என்று இழுத்தார்.’அதனாலென்ன. இப்போது நான் சொல்கிறேன் அல்லவா? நீ உங்கள் மேலதிகாரியை கேட்டு ரூம் போட ஏற்பாடு செய்’ என்று கங்குலி உறுதியாக சொன்னார். அதை கேட்டதும் அந்த ஆளும் பெண்ணும் ரூமில் இருந்து வெளியே போனார்கள்.

எனக்கு என்னவோ போலிருந்தது. ‘சார், இந்த ஹோட்டலில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. நெட்டில் தேடி பல விஷயங்களை தொகுக்க வேண்டியிருக்கும். கனெக்ஷன் இல்லாமல் அந்த வேலை நடக்காது. அதனால் நான் இங்கே தங்க வேண்டிய அவசியமே இல்லை’ என்று வேறு மாதிரி சொல்லிப் பார்த்தேன்.கங்குலி அதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

பேச்சை மாற்றி, ‘நாளைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை. இன்று இரவு நீங்களெல்லாம் சர்ச்சுக்கு போவீர்கள். இந்த வேலையால் அது தடைபடுகிறது என்று உனக்கு என் மேல் கோபமாக இருக்கலாம். அப்படி இருந்தால் ஸாரி கேட்டுக் கொள்கிறேன். பை தி வே, கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் கிறிஸ்துவ குடும்பங்களில் ஒயின் குடிப்பது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது நிஜம்தானா?’ என்று கேட்டார்.

இதெல்லாம் எதற்கு கேட்கிறார் என்ற புதிர் விலகாமல் மெல்ல தலையசைத்து ஆமாம் என்று சொன்னேன்.இதற்காகவே காத்திருந்தவர் போல, உடனே ஒரு ஒயின் பாட்டிலை எடுத்து காட்டிய கங்குலி, ‘இது இந்த ஹோட்டலில் காம்ப்லிமென்டாக கொடுத்தது. நீ ஒன்று செய். நாள் பூராவும் வேலை செய்ததில் டயர்டாகி இருப்பாய். போ, என் பெட்ரூமுக்கு போய் இதை கொஞ்சம் சாப் பிட்டு ரிலாக்ஸ் பண்ணு..’ என்று கூறி, ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டினார்.

எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவருடைய பெட்ரூமுக்கு போகச் சொல்கிறாரே, ஒயின் குடித்து ரிலாக்ஸ் பண்ண சொல்கிறாரே என்று நிலைகுலைந்து போனேன். ‘வேண்டாம் சார். இதெல்லாம் எனக்கு தேவையில்லை. வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக முடித்துக் கொடுத்துவிட்டு என் ஹாஸ்டல் ரூமுக்கு திரும்ப வேண்டும். அதுதான் முக்கியம்’ என்று அவருக்கு பதில் சொன்னேன்.அவர் அது காதில் விழுந்ததாக காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு கையில் ஒயின் பாட்டிலை வைத்திருந்தவர், இன்னொரு கையால் ஒரு ஒயின் கிளாஸ் எடுத்து என்னிடம் நீட்டினார். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கொல்கத்தாவில் இந்த மனிதரிடம் ஆறு மாதம் ரிசர்ச் அசிஸ்டென்டாக வேலை பார்த்தபோது இப்படியெல்லாம் அவருடன் நெருங்கவோ தனியாக இருக்கும் விதமாகவோ சந்தர்ப்பங்களே ஏற்பட்டதில்லை. அதை நினைத்துக் கொண்டே, வேறு வழி தோன்றாமல், அவர் நீட்டிய கிளாஸை வாங்கிக் கொண்டேன்.

அப்போதே என் மனதில் கலக்கம் படிய ஆரம்பித்தது. சீக்கிரம் அந்த ரூமை விட்டு வெளியே போய்விட வேண்டும் என்று நினைத்தேன். வேகமாக லேப்டாப் கம்ப்யூட்டரில் டைப் செய்ய ஆரம்பித்தேன். கங்குலி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். என்னிடம்தான் பேசுகிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார் என்று கவனிக்கும் ஆர்வமெல்லாம் இல்லை. டைப்பிங்கை முடிப்போம் என்று வேகமாக வேலை செய்துகொண்டிருந்தேன்.

‘வேலை முடிந்த உடனே நான் விடுதிக்கு போக வேண்டும். நேரமாகிவிட்டதால் கார் கிடைப்பது கஷ்டமாகி விடக்கூடும். நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள்’ என்று அவரிடம் சொன்னேன். போனை எடுத்து கால் போட்டவர், எனக்கு அதே ஹோட்டலில் ஒரு ரூம் போடுமாறு மறுமுனையில் பேசியவரிடம் கூறினார். ‘அதெல்லாம் வேண்டாம். வீணாக என் பெயரில் ரூமெல்லாம் போடாதீர்கள். வேலை முடிந்ததும் நான் ஹாஸ்டலுக்கு போயாக வேண்டும்’ என்று நான் கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன்.

ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தபோது இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லாமல் இப்படி நடந்துகொள்கிறாரே என்று எனக்கு எரிச்சலாக வந்தது. அவருடைய நடத்தையை பார்க்கப் பார்க்க எனக்குள் பதற்றம் அதிகமானது.என்னுடைய ஆட்சேபம் எதையும் பொருட்படுத்தாத கங்குலி, ‘உனக்கு தனியாக ரூம் போட முடியாது போலிருக்கிறது. ரூம் இல்லை என்கிறார்கள். பேசாமல் நீ என் ரூமிலேயே தங்கிக் கொள். வேலையை முடித்து விடலாம்’ என்று சொன்னார்.

அதை கேட்டதும் அதிர்ந்து போனேன். ‘எப்படி உங்களால் இந்த யோசனையை சொல்ல முடிந்தது? உங்களுக்கே அது சரியாக படுகிறதா?’ என்று கேட்டேன். என் குரலில் இருந்த வேதனையையும் பதற்றத்தையும் புரிந்து கொண்டவர், உடனே குரலை தணித்து, ‘உன்னை விடுதியில் கொண்டுவிட கார் ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார்.

இதை சொல்லும்போதே அவர் கிளாசில் இருந்த ஒயினை வேகமாக விழுங்கினார். மேலும் சில கிளாஸ் ஒயின் குடித்தவர், கப்போர்டில் இருந்து இன்னொரு பாட்டிலை எடுத்தார். அது பக்கார்டி ஒயிட் ரம். அதிலிருந்தும் வேகமாக ஊற்றி ஊற்றி சில பெக்குகள் குடித்தார். என் கையில் கொடுத்திருந்த கிளாசில் இருந்து பேருக்கு சில சொட்டுகள் மட்டுமே நான் ஒயின் அருந்தியிருந்ததை கவனித்த அவர், ‘அந்த கிளாஸை சீக்கிரம் காலி செய்; அடுத்த ரவுண்ட் ஊற்றுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அதை கேட்காமல் அப்படியே வைத்துக் கொண்டிருந்ததை கவனித்து, ‘நீ இல்லாமல் தனியாக இந்த ரிப்போர்ட்டை நான் முடிக்க முடியாது. அதனால் நீ இங்கேயே தங்கி எனக்கு உதவி செய். சீக்கிரம் முடிக்க உனக்கு நான் உதவுகிறேன்’ என்று சொன்னார். அதற்கு சான்ஸே இல்லை என்று நானும் தொடர்ந்து மறுத்தேன். இதற்குள் அவர் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த டின்னர் கொண்டுவரப்பட்டது.

நான் அதுவரை உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்த வட்ட மேஜையை விட்டு எழுந்து, சோபாவில் போய் அமர்ந்தேன். அவர் என் அருகில் அமர்ந்தார். இருவரும் சாப்பிட தொடங்கினோம். சாப்பிட்டுக் கொண்டே என் முதுகில் இரு கையை வைத்த கங்குலி, ‘எனக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டதற்கு நன்றி’ என்றார். நான் உடனே விலகி அமர்ந்தேன். தொட்டுப் பேசுவது அவரது கவுரவத்துக்கு உகந்ததல்ல; எனக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை உணர்த்தினேன்.

ஆனால், நான் விலகிய பிறகும் என் முதுகில் இருந்து அவர் கையை எடுக்கவில்லை. அப்படியே முன்பக்கமாக நகர்ந்தவர் என்னை கட்டியணைக்க முயன்றார். ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்த நான், அவ்வளவு பெரிய மனிதருக்கு வேறு எப்படித்தான் புரியவைப்பது என தெரியாமல், சடாரென எழுந்து அருகிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தேன். அவர் கை அதுவரை எட்டவில்லை.

சீக்கிரமே உணவை முடித்துக் கொண்டு, ரவுண்ட் டேபிளுக்கு சென்று, வேலையை தொடர்வதுபோல பாசாங்கு செய்தேன். உண்மையில் காருக்காக காத்திருந்தேன். அப்போதே எனக்குள் பயம் குடி கொண்டிருந்தது. கங்குலியும் சோபாவில் இருந்து எழுந்தார். என் முன்னால் வந்தார். என் தலை மீது கைவைத்து, ‘நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்’ என்றார்.

சடாரென்று எழுந்தேன். நான் எதுவும் சொல்வதர்குள் என் கையை பிடித்த அவர், ‘உன் அழகில் நான் கிறங்கிப் போயிருக்கிறேன். உனக்கும் அது தெரியும், இல்லையா? நீ இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதுகூட எனக்கு தெரியும். என்னடா இது, வயசான இந்த ஆள் குடித்துவிட்டு போதையில் என்னென்னவோ சொல்கிறான் என்றுதானே நினைக்கிறாய்? அப்படி இல்லை. உன்னை நான் உண்மையாகவே விரும்புகிறேன். உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று பிதற்றியவர், நான் விலகுவதற்குள் சட்டென்று என் கையில் முத்தமிட்டு, ஐ லவ் யூ! என்று மீண்டும் சொன்னார்.

உடனே அவரை தள்ளிவிட்டேன். நான் கிளம்புகிறேன் என்றேன். அதுவரை நடந்தது எல்லாம் ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அல்ல, அவர் திட்டமிட்டு என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க பார்க்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. என் லேப்டாப்பையும் கைப்பையையும் எடுத்தேன். ரூமை விட்டு வெளியேறி, லிஃப்டை நோக்கி விரைந்தேன்.

ஆனால் லிஃப்டுக்குள்ளும் நுழைந்துவிட்ட கங்குலி, ‘தயவுசெய்து போகாதே.. உனக்கு தொந்தரவு கொடுத்துவிட்டேனா? தயவு செய்து என்னை விட்டுவிட்டு போகாதே. எனக்கு உன் உதவி நிச்சயமாக தேவை. அந்த ரிப்போர்ட்டை உடனே முடித்தாக வேண்டும்’ என்று கெஞ்சினார். நான் பதிலே சொல்லவில்லை. லிஃப்ட் கீழே வந்து நின்றதும், ரிசப்ஷனை நோக்கி நடந்தேன்.

அவரும் பின்னாலேயே வந்தார். வாசலில் பார்த்தால் எந்த காரும் இல்லை. உடனே அவர் செல்போனில் யாரையோ அழைத்தார். உடனே ஒரு ஆள் அங்கே வந்தார். அவர் கால்பந்து சம்மேளனத்தின் ஒரு நிர்வாகி என எனக்கு சொல்லப்பட்டது. ‘இவளுக்கு கார் சொல்லியிருந்தும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை போலிருக்கிறது. நீ கவனித்துக் கொள்’ என்று அவரிடம் கங்குலி சொன்னார்.

அந்த ஆள் அங்கிருந்து எங்கோ போனார். அவர் சென்றதும், முன்பு சொன்னதையே என்னிடம் திரும்பவும் சொல்லி, ‘தயவு செய்து உதவி செய்’ என்று அவர் கேட்டார். அப்போதும் நான் பதில் சொல்லவில்லை.ஹோட்டலை விட்டு 10.30க்கு நான் புறப்பட்டேன். காரில் விடுதிக்கு வந்தேன்.

போனதும் கங்குலி போன் செய்தார். ‘போய் சேர்ந்துவிட்டாயா’ என்று விசாரித்தார். ஆமாம் என்று சொல்லி உடனே போனை கட் செய்தேன். மறுநாள் காலையில் அவருக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ‘இவ்வளவெல்லாம் நடந்த பிறகு என்னால் அவருடன் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது’ என்பதை தெரிவித்தேன்.

கிறிஸ்துமஸ் நாளன்று காலை 9 மணிக்கு அந்த தகவலை அனுப்பினேன். அதிலிருந்து அவர் விடாமல் கால் போட்டு என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஆனால் ஒரு காலுக்குக்கூட நான் பதில் சொல்லவில்லை. பிறகு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. அவர்தான் அனுப்பியிருந்தார்.

‘நேற்று இரவு நடந்த சம்பவங்களுக்காக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் மட்டும் நீ என்னோடு பேசு. என் கால் வரும்போது எடுத்து பேசு’ என்று அதில் கூறியிருந்தார். அதற்கு நான் பதில் அனுப்பவில்லை. பிறகும் கால்கள் வந்துகொண்டே இருந்தன. நான் எடுக்கவே இல்லை.

(தினகரன் 17.12.2013)