October 18, 2021

கருப்பு பண பட்டியலில் 289 பேரின் கணக்கில் பணமே இல்லை! 122 பெயர் 2 முறை இடம்பெற்றுள்ளது!!

வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக மத்திய அரசு அளித்த 628 பேர் பட்டியலில், 289 பேர் கணக்குகளில் பணம் இல்லை எனவும், 122 பெயர்கள் இரு முறை இடம்பெற்றுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு தாக்கல் செய்த பட்டியல் சந்தேகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
black-money- nov 7
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 600–க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் அடங்கிய பட்டியல், பிரான்ஸ் நாடு மூலமாக இந்தியாவுக்கு ஏற்கனவே கிடைத்தது. அந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ளது.இந்நிலையில், அந்த பட்டியலை ஆய்வு செய்தபோது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

பட்டியலில், 289 பேரின் வங்கி கணக்கில் பணமே இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. அதிலும், அவர்களில் 122 பேரின் பெயர்கள், அதே பட்டியலில் இரண்டு இடத்தில் வருகின்றன.மேலும், இந்த கணக்குகளை இயக்கியது தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை. அந்த கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, எப்போதெல்லாம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது என்பன போன்ற விவரங்கள் எதுவும் இல்லை.

இதனால், சம்பந்தப்பட்ட கணக்குக்கு உரியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது. இது, நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.அதே சமயத்தில், இந்த பட்டியலை கொண்டு, 150 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், 300 பேர் மீது வழக்கு தொடர்வது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.