September 20, 2021

சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்!

இந்தியாவில் ஹாக்கியின் இன்றைய நிலைமை பற்றி சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்திருப்பது அந்த விளையாட்டை நேசிக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது இந்திய ஹாக்கி அணி. ஏதோ மாய மந்திரம் செய்கிறார்கள் என்று உலகம் பேசும் அளவுக்கு அசாத்திய திறமையை நமது வீரர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் 1980க்கு பிறகு அரையிறுதி போட்டிக்குக்கூட தகுதி பெற முடியாத பரிதாப நிலைக்கு ஆளானோம். உலக கோப்பையிலும் அதே கதி.
dec 7 - foot ball
ஆதங்கத்துடன் இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விளையாட்டு சங்கங்களின் தலைவர் பதவியில் சம்பந்தமில்லாத அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்கார்ந்து ஆதிக்கம் செலுத்துவதுதான் இந்த நிலைமைக்கு காரணம் என நம்புகின்றனர். விளையாட்டு வீரர்கள் தலைமை பொறுப்பில் இருந்தால் இந்த மோசமான நிலைமை வந்திருக்குமா என அவர்கள் கேட்கின்றனர்.

இது விவாதத்துக்கு உரிய விஷயம். ஆட்டம் வேறு, நிர்வாகம் வேறு. இரண்டுக்கும் தேவையான திறமைகள் வெவ்வேறு. கூட்டம் சேர்ப்பது, விளம்பரம் செய்வது, ஸ்பான்சர் பிடிப்பது, ஒளிபரப்பு உரிமையை ஏலம் விடுவது, வருமானத்தை பெருக்குவது, வீரர்களுக்கு கணிசமான ஊதியம் வழங்குவது என இன்றைய விளையாட்டு சூழலில் ஆட்டம் அல்லாத பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆடுகளத்தில் அற்புதமாக பந்தை கையாண்ட வீரர்களுக்கு மேற்படி பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றல் இருக்குமா என்பது கேள்விக்குறி. இல்லை என்பதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும். நிர்வாகம் மோசமாக இருக்கும் சூழலிலும் திறமையை வெளிப்படுத்தி சாதிப்பவனே சிறந்த வீரன். நமது ஹாக்கி வீரர்கள் ஆட்டத்தின் நுணுக்கங்களை கிரகிப்பதிலேயே இன்னும் பின்தங்கியிருப்பதாக தோன்றுகிறது.

‘பந்துடன் பிரமாதமாக ஓடுகின்றனர். ஆனால், பாஸ் செய்யும் பந்தை தடுக்கிறார்களே தவிர பெற்றுக் கொள்ள தெரியவில்லை’ என்கிறார் இந்திய அணியின் மேம்பாடு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாலந்து நட்சத்திரம் ரோலன்ட் ஆல்ட்மன். அதாவது பந்தை கடத்தாமல் காலம் கடத்துகின்றனர். இந்திய ஹாக்கி ஃபெடரேஷனுக்கும் ஹாக்கி இந்தியாவுக்கும் நடக்கும் மோதல் முடிவுக்கு வந்து, ஆட்டத்தின் மீதும் நாட்டின் மீதும் உண்மையான அக்கறை கொண்ட நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தால் இந்திய ஹாக்கி மீண்டும் மேல்நிலைக்கு வர முடியும். அது நிச்சயம் சாத்தியம்.

ஏனென்றால், ஹாக்கி ரசிகர்களுக்கு இங்கே பஞ்சமில்லை. ஜனவரியில் நடந்த ‘ஹீரோ ஹாக்கி இந்தியா லீக்’ இறுதி ஆட்டத்தை பார்க்க ராஞ்சியில் பெரும் கூட்டம் திரண்டது. டிக்கெட் வாங்க ஒரு கிலோமீட்டர் தூரம் வரிசை நின்றது. சுற்றிலும் உள்ள கட்டிடங்களின் மொட்டைமாடிகள், மரங்கள் மீதெல்லாம் மனித தலைகளாக தெரிந்ததை கண்டு பிரமித்துப்போன ஜெர்மன் வீரர் மார்ட்டிஸ், ‘ஹாக்கி போட்டிக்கு இவ்வளவு கூட்டத்தை உலகில் எங்கேயும் நான் பார்த்ததில்லை’ என்றார். 146 நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பான அந்த போட்டிகளை இந்தியாவில் 5 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

ஜார்கண்டின் ராஞ்சி போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் பல சிறு நகரங்கள் ஹாக்கியின் தொட்டிலாக நீடிக்கின்றன. தமிழகத்தில் பாளையங்கோட்டை, உடுமலைப்பேட்டை, கோவில்பட்டி, தஞ்சாவூர் என்று பல ஊர்களில் இன்றும் கிரிக்கெட் மோகத்தை தாண்டி ஹாக்கி மீது காதல் தொடர்கிறது. அந்த தேசிய விளையாட்டுக்கு புத்துயிர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு உதவும் என நம்புவோம்.

தினகரன் தலையங்கம்