September 20, 2021

சீரழிவுப் பாதையைக் காட்டும் சின்னத்திரைக்கு சென்சார் அவசியமுங்கோ!

சென்ற நூற்றாண்டின் கணிசமான பகுதி வரைக்கும் மக்களின் பொழுதுபோக்காகத் திரைப்படங்களும், வானொலி நிகழ்ச்சிகளும் விளங்கின. 1970-களில் தொலைக்காட்சி என்பது அறிமுகமான பிறகு மக்களின் தினசரி நிகழ்வு நிரல்களில் மாபெரும் மாற்றம் நேர்ந்தது. அதிலும், கேபிள் டி.வி. என்னும் கம்பிவடத் தொலைக்காட்சி ஒளிபரப்பும், அதன் வழியே நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் விரிந்த எண்ணிலடங்காத தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒளிபரப்பும் வருவதற்கு முன்பு, தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றே கதியாகக் கிடந்தோம்.
tv censor
ஐந்து நாள் கிரிக்கெட் டெஸ்ட் ஒளிபரப்பைக் காணவே விடுமுறை எடுத்ததும், வெள்ளிக்கிழமை இரவு உலாவரும் ஒளியும், ஒலியும் பார்ப்பதே பிறவி எடுத்ததன் பயன் என்று மயங்கிக் கிடந்ததும் நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது.

தேசிய மற்றும் பிராந்திய அலைவரிசை ஒளிபரப்புகள் அத்தனை நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் இல்லாதிருந்த போதிலும், பார்ப்பவர்களின் மனதை மாசுபடுத்தாமல் இருந்தது என்னவோ உண்மை. இரண்டாவது (மெட்ரோ) அலைவரிசை நிகழ்ச்சிகள் சற்றே கூடுதல் சுவாரசியம் கொடுத்ததும் உண்மை.

ஆஹா என்றெழுந்தது பார், யுகப் புரட்சி என்பது போல தனியார் அலைவரிசைகள் வந்தாலும் வந்தன, நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது.

தொழில்நுட்பத்தில் துல்லியம், படைப்பில் சுவாரசியம், வித்தியாசமான களங்கள், திரைப்படத் துறையில் பழம்தின்று கொட்டை போட்டவர்களின் பங்களிப்பு என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வேறு ஒரு புதிய தளத்துக்கு அழைத்துச் சென்றது ஒருபுறம் நிஜம்தான் என்றாலும், மக்களுடைய ஒரு நாளின் பெருவாரியான நேரத்தை இந்நிகழ்ச்சிகள் தின்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

செய்திகள் என்று எடுத்துக் கொண்டால், தூர்தர்ஷன் (சற்றே தாமதமானாலும், சலிப்படையச் செய்தாலும்) ஊர்ஜிதமான செய்திகளையே வழங்கி வந்தது, வழங்கி வருகிறது. தனியார் செய்தி ஊடகங்களுக்கோ பரபரப்பும், ஊகங்களுமே முக்கியமாக இருந்து வருகிறது.

விவாதம் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத விஷயங்களைக்கூட மணிக்கணக்கில் பேசித் தீர்க்க நான்கு பேரை ஏற்பாடு செய்து நேரம் கடத்துவது இவர்களுக்கு சர்வ சகஜம். உருப்படியான விவாதங்களும் இடம் பெறுவது உண்டுதான். ஆனால், அது குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது.

இதெல்லாம் எப்படியோ போகட்டும் – இன்றைய தேதியில் இந்தத் தனியார் ஒளிபரப்புகளில் இடம்பெறும் இரண்டு விதமான நிகழ்ச்சிகள் மக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின், நெஞ்சங்களில் நஞ்சைக் கலப்பவையாக இருப்பதுடன், கடிவாளம் இல்லாத குதிரைகளாக தறிகெட்டு ஓடிக்கொண்டிருப்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.

போட்டிகள் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நடன நிகழ்ச்சிகளும், மருத்துவர் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் ஸ்லாட் எடுத்து நடத்தும் மருத்துவ (?) ஆலோசனை நிகழ்ச்சிகளும் நமது சமூக ஒழுக்கத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கின்றன என்றால் அது மிகைச் சொல்லாகாது.

திரைப்படங்களில் எந்த ஒரு விதியுமின்றி, வெறும் காம உணர்வுகளையே காதல் உணர்வுகளாக வழிய விடும் காமா சோமா நடனங்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது.

முன்பெல்லாம், அதைப் பார்க்கக் காசு செலவழித்துத் திரையரங்கத்துக்குத்தான் போக வேண்டும் என்ற நிலை இருந்தது. விடியோ கலாசாரம் அவற்றை விரும்பும் இடத்தில் பார்க்க வழி வகுத்தது.

தொலைக்காட்சிகளில் இடம்பெறும் நடனப் போட்டிகளோ, ஆபாச நடனங்களை கண்முன்னே அரங்கேற்றிட ஊக்கம் அளிக்கின்றன. இளைய தலைமுறையினர், ஆண் – பெண் வேறுபாடுகளை மறந்து, ஆபாச ஆட்டம் போடுவதற்கு மதிப்பெண் போட்டுப் பரிசளிப்பதும், கெமிஸ்ட்ரி என்று சொல்லிக் கொண்டாடுவதும் ஒழுங்கீனத்தின் உச்சகட்டம். இவற்றுக்குத் திரைத் துறைப் பிரபலங்கள் நடுவர்களாக இருந்து ஊக்குவிப்பது சமூக மதிப்பீடுகளை கேலி செய்வதாகவே இருக்கிறது.

தனி மனித ஒழுக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி, சில நிமிட நேரம் தொலைக்காட்சியில் தோன்றிவிட்டால் போதும் என்ற எண்ணச் செதுக்கல் எத்தகைய சமூகப் பின்னடைவு என்பதை யாரும் யோசிப்பதேயில்லை.

மேற்படி நடன நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்று சொல்ல வைப்பவைதான் ஒரு சில மூலிகை மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிகள். ஆண்களே பேச சங்கடப்படும் விஷயங்களை பெண்கள் மூலம் கேட்டு ஆலோசனை வழங்கும் அந்த மருத்துவர்கள் உண்மையிலேயே உத்தம வில்லன்கள் என்று அழைக்கத்தக்கவர்கள்தான்.

அப்பட்டமான ஆபாசங்களை அரங்கேற்றும் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கடிவாளமே கிடையாதா? காசு வாங்கிக் கொண்டு இவற்றை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிர்வாகங்களுக்கும் சமூகப் பொறுப்பு கிடையாதா?

சில காலம் முன்பு வரை, இப்படிப்பட்ட ஆலோசனை நிகழ்ச்சிகள் நள்ளிரவு நேரத்தில் மட்டுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. இப்போதோ, அவை வேளை கெட்ட வேளையில் (பகல் நேரத்திலும் கூட) கண்ணில்படுகின்றன.

குடும்பத்தினருடன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து சேனல் மாற்றும் வேளையில், அசந்தர்ப்பமாக இத்தகைய ஒளிபரப்புகளைப் பார்த்துவிட நேரும்போது நாம் அனுபவிக்கும் சங்கடம் சொல்லி முடியாதது.

திரைப்படங்களைப் போல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வேண்டியது அவசியம், அவசரம். காலத்தின் கட்டாயம். இல்லாவிடில், நம் சமுதாய விழுமியங்களை இவை வெகு சீக்கிரம் விழுங்கிவிடும்.

எஸ். ஸ்ரீதுரை