December 1, 2021

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 88 பேர் குற்றவாளிகள்! – டெல்லி ஐகோர்ட் உறுதி!

கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 88 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து அவர்களுக்கு 5 வருட சிறைதண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதற்கு முன் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பாக தெற்கு டில்லியை சேர்ந்த இருவர் கொல்லப்பட்ட வழக்கில் நவம்பர் 20ம் தேதி ஒருவருக்கு மரண தண்டனையும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது நினைவுக்குரியது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் சீக்கிய பாதுகாவலர்களால் 1984ம் ஆண்டு சுட்டுக்கொல்லப் பட்டார். அதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக 1984ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது கிழக்கு டெல்லி யின் திரிலோகபுரி பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டு வீடுகளை தீக்கரையாக்கிய குற்றச்சாட்டின் கீழ் 107 பேர் நவம்பர் 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். அந்த பகுதியில் நடந்த கலவரத்தில் 100 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன. 95 பேர் உயிரிழந்தனர்.

இதையொட்டி கைது செய்யப்பட்ட 107 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி அன்று கைதானவர்களில் 88 பேரை குற்றவாளிகளாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். பல  ஆண்டு களாக நிலுவையில் இருந்த மேல்முறையீடு விசாரணை நீதிபதி ஆர்.கே. கவுபா முன்னிலையில் இன்றும் நடைபெற்றது.

விசாரணை முடிவில் குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதி கவுபா தள்ளுபடி செய்தார். குற்றம்சாட்டப்பட்ட 88 பேருக்கும் 5 வருட சிறைதண்டனை வழங்கி நீதிபதி ஆர்.கே. கவுபா தீர்ப்பளித்தார். அவர்கள் அனைவரும் உடனடியாக போலீசில் சரணடைந்து சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த 88 குற்றவாளிகளில் பலர் வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.