September 20, 2021

சிறையில் ராஜமாதாவாக இருந்த சசிகலா! – டி ஐ ஜி ரூபா அறிக்கை!

தமிழக அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசாக வாழ்கிறார் என்றும் இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கைமாற்றப்பட்டது என்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி அறிக்கை சமர்ப்பித்தார். இந்தவிவகாரம் விசுவரூபம் எடுத்ததும் சிறைத்துறை டி.ஜி.பி., சிறை சூப்பிரண்ட் உள்ளிட்ட பலர் இடமாற்றம் செய்யப்பட்டதும் இன்றளவும் ஹாட் டாபிக்காகத்தான் இருக்கிறது. இந்த புகார் கூறிய டி.ஐ.ஜி. ரூபாவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.இது பற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர் மட்டக்குழு விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.அந்தக் குழுவும் விசாரணை நடத்தியது. அதன்பிறகு எந்தத்தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் சசிகலா நாகரிக உடையில் வெளியே சென்று விட்டு சிறைக்கு திரும்பிய காட்சிகள் பதிவாகி இருந்தன. உடன் இளவரசியும் வந்தார். இந்த வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியதும், அது பழைய வீடியோ என்றும் வக்கீல்களை பார்த்து விட்டு வந்த காட்சி என்றும் சிறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர். இந்த ஆதாரத்தையும் ரூபா தாக்கல் செய்திருப்பதுடன் 74 பக்க அறிக்கையையும் புதிதாக கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியிடம் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ரூபா அளித்துள்ள விளக்கத்தில், “ சிறை வளாகத்தில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதில், மிகவும் முக்கியமாக, சிறை வளாகத்தில் 5 அறைகள் அடங்கிய பகுதியை, பேரிகார்ட் வைத்து அதிகாரிகள் ஒதுக்கி இருந்தனர். அதை நேரில் பார்த்தேன். தனியாக. 120x 150 அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். அந்தப்பகுதிகளில்தான் சசிகலா சொகுசாக வாழ்ந்துள்ளார். மின்சார அடுப்பு, சமையல் பாத்திரங்கள், புதிய எல் ஈ டி டிவி, நவீன படுக்கை வசதி. நாகரிக உடைகள் அணிதல் உள்ளிட்ட நவீன வசதிகளை அவர் பயன்படுத்தியுள்ளார். பார்வையாளர்களை சந்திக்க தனியாக வசதியான அறை செய்து தரப்பட்டுள்ளது. சுழல் நாற்காலி, மேஜை மற்றும் பார்வையாளர்கள் அமர 4 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒரு ஸ்கிரீனும் தொங்க விடப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் நடப்பதை வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாது. இதற்கான ஆதாரத்தை 6மற்றும் 7ம் எண் சிசிடிவி காமிராக்களில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம். யாரும் அவரை எளிதில் அணுக முடியாது. . இவை அனைத்தும் பணத்துக்காகவே அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன. .

ஒரு கைதிக்கு இப்படி தனிப்பட்ட முறையில் சலுகை அளிக்கப்பட்டது சரியல்ல. கோர்ட் அனுமதியின்றி இப்படி சலுகைகள் அளித்தது கோர்ட் அவமதிப்பு மட்டும் அல்ல. அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறிய செயலும் ஆகும். உடல்நிலை கருதியே நவீன படுக்கை வசதி அளிக்கப்பட்டது என்றாலும் அதற்கு கோர்ட் அனுமதி தேவை. சிறை சொத்துக்கள் அரசாங்கத்தின் உடைமைகள் ஆகும். சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டவை அனைத்தும் சிறையின் உரிமைப்பொருட்கள். அவற்றை நேர்மையற்ற முறையில் மோசடியாக முறைகேடாக இன்னொரு நபர் பயன்படுத்த சிறை அதிகாரி உடந்தையாக இருந்துள்ளார். இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும். எனவே இவை குறித்து முழுமையாக விசாரணை நடத்தவேண்டும்”இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

புதிய வீடியோ பற்றி சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் நாகர் சிங் மெக்கரியாவிடம்கேட்டதற்கு, அது பற்றி எனக்கு தெரியாது. ஒரு நபர் கமிஷன் இன்னமும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. அந்த அறிக்கை வந்தால்தான் உண்மைகள் தெரிய வரும் என்றார்.சிறை முறைகேடு விவகாரத்தை விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ள ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்னும் நாங்கள் பூர்வாங்க விசாரணையையே தொடங்கவில்லை. டி.ஐ.ஜி.ரூபாவிடம் குற்றச்சாட்டுக்கு மேலும் ஆதாரங்களை கேட்டதற்கு புதிதாக சில ஆவணங்களை கொடுத்துள்ளார். 74 பக்க அறிக்கையும் தந்துள்ளார் என்றனர். இதே நகலை வினய்குமார் விசாரணைக்குழுவிடமும் ரூபா சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.