February 7, 2023

“சிறியதே சிறப்பானது:அதுமட்டுமின்றி பிரிவினை என்பது பகைமையல்ல”!

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது. அப் பெரிய தேசத்தில் சுதந்திரம் பெற்றபோது 562 சமஸ்தானங்களும் 5 பிரெஞ்சு பகுதிகளும் 3 போர்த்துக்கீசிய பகுதிகளும் இருந்தன. 1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது பதினான்கு மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்கள் இருந்தன. அதில் ஆந்திரப் பிரதேசம் நான்காவது பெரிய மாநிலம். மக்கள்தொகையில் அதற்கு ஐந்தாவது இடம். 970 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டது. இந்தி மொழிக்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசத்தின் மாநில மொழியான தெலுங்குதான் அதிகமான மக்களால் பேசப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் பழைய பெருமையும் கலாசார மேம்பாடும் கொண்ட இந்திய மக்கள் என்ற அடிப்படையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகநீதி, வேலை வாய்ப்பு, சட்டம், நீதி எதிலும் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றே நினைக்கிறார்கள். ஆனால் சில பகுதி மக்கள் தேசிய நீரோட்டத்தில் தங்களுக்கான பங்கு கிடைக்கவில்லை என்றும், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கருதும்போது பிரிவினை வந்துவிடுகிறது.
sep 21 - india
1769-ஆம் ஆண்டில் இருந்து நிஜாம் பரம்பரையினர், ஐதராபாத்தைத் தலைநகரமாகக் கொண்டு தெலங்கானாவை ஆட்சி புரிய ஆரம்பித்தார்கள். வறட்சியான பகுதி, ஆனால் கனிம வளங்கள் நிறைந்தது. கடற்கரை கிடையாது. பெரிய ஜீவநதிகள் (கோதாவரி, கிருஷ்ணா) ஓடினாலும் பயன்பாடு அதிகமில்லை.

கடற்கரை ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணையாறு, துங்கபத்ரா ஓடுவதால் நெல், கரும்பு காய்கனிகள் பயிரிட்டார்கள். வேளாண்மையால் பணம் கொழித்தது. அதோடு ஆந்திரப் பகுதிகள் சென்னை ராஜதானியில் ஓர் அங்கமாக இருந்தன. எனவே சென்னைக்கு வந்து பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் உயர் கல்வி கற்றார்கள். சட்டம், நிர்வாகம், கணக்கியல், மொழி படித்து பெரிய பெரிய வேலைகளுக்குச் சென்றார்கள். தெலுங்கு மொழியின் முதல் நாவலாசிரியரும் சமூக சீர்திருத்தவாதியுமான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு பல ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்து, சென்னையிலேயே மறைந்தார். அவரைப் பற்றி பாரதியார் எழுதியிருக்கிறார்.

தெலுங்கு மொழி பேசும் ஆந்திரர்கள் சென்னையில் படித்து ஐரோப்பிய நாகரிகம், பண்பாடு, சிந்தனை மரபு என்பதை எல்லாம் அறிந்து கொண்டார்கள். அரசுப் பணியில் சேர்ந்து தங்களை வளர்த்துக் கொண்டதுபோலவே அரசுக்கும், மக்களுக்கும் சேவை செய்தார்கள். தொழில், வாணிபம் இவற்றில் ஈடுபட்டார்கள். சினிமா எடுத்தார்கள். அரசியல், சமூக முன்னேற்றத்திற்கான போராட்டம் தொடங்கியபோது இதர மக்கள் போலவே அதில் முழு அளவில் சேர்ந்து கொண்டார்கள்.

ஐதராபாத் – தெலங்கானா பகுதி, நிஜாம் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆட்சி மொழி உருது. ஆங்கிலம் படிக்க வசதி இல்லை. சுதந்திரப் போராட்டம் பெருமளவில் கிளர்ந்தெழ முடியவில்லை. தனியாக, ரயில், வங்கி இருந்தது. எனவே தேசிய நீரோட்டத்தில் ஐதராபாத் இல்லை. அப்பகுதியில் பேசப்பட்ட தெலுங்கு, உருது மொழிகளை வைத்துக் கொண்டு பெருமளவில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியவில்லை.

1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சமஸ்தானங்கள் பூகோள, கலாசார அடிப்படையில் இந்தியாவோடோ, பாகிஸ்தானோடோ சேர்ந்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. நிஜாம் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர். எனவே பாகிஸ்தானோடு சேர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக ரஸாக்குகள் கிளர்ச்சி செய்தார்கள். 1948-ஆம் ஆண்டில் இந்திய அரசு “ஆப்பரேஷன் போலோ’ – என்ற ராணுவ நடவடிக்கை எடுத்து ஐதராபாத் நிஜாம் பகுதிகளை இந்தியாவோடு இணைத்தது.

1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஐதராபாத் நிஜாம் பகுதிகளில், மராத்தி மொழி பேசிய மக்கள் வாழ்ந்த இடங்கள் மகாராஷ்டிரத்தோடும் கன்னட மொழி பேசிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் கர்நாடகத்தோடும் தெலுங்கு மொழி பேசி வந்த பகுதிகள் ஆந்திரப் பிரதேசத்தோடும் சேர்க்கப்பட்டன. அதில் ஆந்திராவிற்கு பெரும் பகுதி கிடைத்தது, ஐதராபாத் உட்பட. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெலங்கானாவில் வசிப்போர், மொத்த ஆந்திர மக்கள்தொகையில் 41.6 சதவீதம்.

தெலங்கானா மக்கள் – குறிப்பாக விவசாயிகள் – தங்கள் நிலப்பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்படுவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. இணைப்பை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். ஒரு மொழி பேசினாலும் நாங்கள் ஒன்றல்ல என்றார்கள். தெலங்கானா தெலுங்கில் உருது, பார்சீய மொழி சொற்கள் அதிகம். பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், உணவு – எல்லாம் வித்தியாசப்பட்டிருந்தன. அதனால் தனி மாநிலம் – தெலங்கானா மாநிலம் வேண்டுமென்று போராட ஆரம்பித்தார்கள். ஆனால், அதுவே பல பெரிய மாநிலங்களில் பிரிவினைக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. சில சிறிய கட்சிகள் தனி மாநில கோரிக்கையை முன் வைத்து கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் கோர்க்காலாந்து கேட்கிறார்கள். அசாமில் போடோ பழங்குடி இன மக்கள் தனி மாநிலம் வேண்டும் என்கிறார்கள். இந்தியாவிலேயே பெரிய மாநிலமாகிய உத்திரப் பிரதேசத்தை நான்கு சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து விதர்பா மாநிலம் அமைக்கவும், குஜராத்தில் இருந்து சௌராஷ்டிரா தனி மாநிலம் ஏற்படுத்தவும் கிளர்ச்சி நடக்கிறது. பிகாரில் இருந்து மைதிலி மொழி பேசும் மக்கள் தங்கள் மொழிக்கென மிர்லாஞ்சல் மாநிலம் கேட்கிறார்கள். தெற்கில் கர்நாடகத்தில் இருந்து குடகு பகுதிகளைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்கிறார்கள்.

பல மாநிலங்களில் நிர்வாக வசதிக்காக – வெளிப்படையான செயல்பாட்டிற்காக – மக்கள் அலைச்சலைப் போக்குவதற்காக சிறிய மாவட்டங்கள் பிரிக்கிறார்கள். சிறிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டதால் மக்கள் குறைகளை உடனுக்குடன் அறிந்து உடனடியாகப் போக்க முடிகிறது என்கிறார்கள். சிறிய மாவட்டம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது என்கிறார்கள். அதே அளவுகோல்தான் சிறிய மாநிலம் என்பதற்கும்.

ஒரு சிறிய மாநிலம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். மாநிலத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன என்பதை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட முடியும். தரமான கல்வி, உலகத் தரத்திற்கு ஏற்ப மருத்துவ வசதி, மேலான தொழில்நுட்பப் பயிற்சி, முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கு ஒரு படி முன்னே சென்று செயல்பட இளைஞர்களை ஊக்குவிக்க முடியும். அதோடு பெண்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தேவை அறிந்து காரியங்கள் செய்ய வசதி ஏற்படும்.

சிறிய மாநிலம் என்பது புதிய சிந்தனை இல்லை. நெடுங்காலமாக இந்தியா பல சிறிய மாநிலங்களாக தனித்தனி நாடுகளாகத்தான் இருந்து வந்தது. அதிலும் மன்னர் அசோகர் காலத்தில் தமிழ்நாடு மூன்று தனி நாடுகளாக இருந்து வந்தது. இந்தியாவின் பெரும் பரப்பை ஆண்டு வந்த அசோகர் தன்னாட்சிக்கு உட்பட்டு இருந்த பகுதிகளில் புத்தர் போதனைகளைப் பரப்ப கல்வெட்டுகளை வைத்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு தமிழ்நாடு உட்பட்டிருக்கவில்லை. ஆகையால் தமிழ்நாட்டில் அசோகர் கல்வெட்டு ஒன்றுகூட இல்லை. ஆனால் அசோகரின் பிராமி எழுத்து கல்வெட்டில் தமிழக மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

குஜராத்தில் கில்னார் என்ற இடத்தில் பாறைகளில் உள்ள கல்வெட்டுகளில் – இரண்டாவது கல்வெட்டில் என் நாட்டின் எல்லையில் உள்ள சோட, பாண்டிய, சத்யபுத்ர, கேரளபுத்ர – என்று தமிழக மன்னர்கள் பற்றிக் குறிப்பு இருக்கிறது. அதில் சோட என்பது சோழர்கள், பாண்டிய என்பது மதுரையை ஆண்ட பாண்டியர்கள், சத்யுபுத்ர கேரளபுத்ர என்பது சேரர்கள். கேரளபுத்ர என்பது சேரர்கள் என்பதன் திரிபு. அது சமஸ்கிருதம்.

மொழி மக்களை ஒன்றாகச் சேர்த்து வைக்கும், ஒன்றாக வாழ வைக்கும் என்று 1920-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி கருதியது. எனவே மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று பாடுபட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தது. ஆனால், ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, தாய்மொழி மக்களை ஒன்றாக இணைத்து வைக்கும் என்ற மாயை கலைந்து போய்விட்டது. தாய்மொழிக்கு – மாநில மொழிக்கு எந்த மாநிலத்திலும் சரியான இடமில்லை. மாநில மொழி ஆட்சி மொழி, பயிற்சி மொழி என்று பெயரளவிற்குத்தான் இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் மாநில மொழி – தாய்மொழி படிப்பதில்லை. அது நவீன வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைத் தரும் ஆற்றல் அற்றது என்று கருதுகிறார்கள். வீணான சுமையென்று கருதி ஆங்கிலம் படிக்கிறார்கள்.

நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் காரணிகள் நல்ல நிர்வாகம், திறமையான ஆட்சி, தரமான கல்வி, மேலான மருத்துவ சேவை, இளைஞர் மேம்பாடு, முதியோர் கவனிப்பு என்று கருதுகிறார்கள். அதனைப் பூரணமாக அடைய ஒரே வழி சிறிய மாநிலம் என்பதுதான். சிறியதே அழகு; சிறியதே சிறப்பு என்பது கலை இலக்கியத்திற்கான கோட்பாடு மட்டுமல்ல; நல்வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

“சிறிய மாநிலம் என்பது பிரிவினை’ என்ற அச்சத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும். ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் சிறிய மாநிலமே சிறப்பான மாநிலம் என்பது தெரிய வரும்.பிரிவினை என்பது பகைமையல்ல; பிரிந்து, கூடி வாழ்வதுதான். உலகத்தில் பல நாடுகள் பிரிந்து கூடி வாழ்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்கின்றன. ஒரே மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் எந்ததொரு காரணமும் “சிறியதே சிறப்பானது’ என்ற சித்தாந்தத்தின் முன்பு அடிபட்டுப் போய்விடும்.

சா. கந்தசாமி