October 19, 2021

சிறிசேனாவை சந்தித்து பேசிய ராஜபக்சே! – இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா

இலங்கையில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ச பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார். மேலும் தற்போதைய அதிபர் சிறிசேனா தன்னை பழிவாங்க முயற்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழலில், சிறிசேனாவும் ராஜபக்சேவும் கொழும்பு நகரில் இன்று சந்தித்து பேசியுள்ளது பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது..
rajapakse may 6
இன்று மதியம் 1.45 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.சுமார் ஒரு மணி நேரமாக இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.

ஆனால் இருவரும் செய்தியாளர்களிடம் பேசப்பட்ட விஷயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை. இருவருக்கும் இடையில் பேசப்பட்ட விஷயங்கள் குரித்தும் தகவல்கள் ஏதுவும் வெளியாகவில்லை.இச் சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் டலஸ் அலகப்பெரும, குமார வெல்கம ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகள் இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்ததாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார்.