November 29, 2021

சிநேகாவின் காதலர்கள் – குறைந்த பட்ஜெட்டில் ஒரு குறு நாவல்…!

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரங்களுக்கும், மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் மத்தியில் வரும் சில குறைந்த பட்ஜெட் படங்களைப் பலர் கண்டு கொள்வது கூட இல்லை. சரியான விளம்பரம், பரபரப்பான செய்திகள் ஆகியவை பெரிய படங்களுக்கு மட்டுமே அதிகம் கிடைக்கின்றன என்பது பல புதிய, சிறிய இயக்குனர்களின் வருத்தம். அதையும் மீறி ஒரு சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன. இந்தப் படத்தின் தலைப்பான ‘சிநேகாவின் காதலர்கள்’ என்பதே கதையை ஓரளவிற்கு சொல்லி விடுகிறது.வெறும் 60 லட்ச ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட படமாம். இன்னும் சில லட்சங்களை செலவழித்திருந்தால் இன்னும் நிறைவான படமாக வந்திருக்கும்.சிநேகாவின் காதலர்கள் – குறைந்த பட்ஜெட்டில் ஒரு குறு நாவல்…

நாம் எப்போதும் ஆண்களின் காதல் தோல்விகளைப் பற்றி மட்டுமே கேட்டிருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். பெண்களின் காதலைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியாது, அதிகமாக கேள்விப்பட்டிருக்கவும் முடியாது. அவர்களைப் பற்றிய விவரங்களை அவர்களுக்குள்ளாகவே அவர்கள் கடைசி வரை புதைத்துக் கொள்வார்கள். அடுத்த பெண்களைப் பற்றிய ஒரு சில விவரங்களையாவது நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் காதல் ‘ஆட்டோகிராப்’ தான் இந்த சிநேகாவின் காதலர்கள். காதல் என்பது ஒரு முறைதான் பூக்கும் என்பதெல்லாம் 90களில் முடிந்து போன கதை. தற்போது வரும் காதல் எல்லாம் தற்காலிகக் காதலாகவே இருக்கிறது. பிடிக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் உடனே பிரிந்து அடுத்த காதலைத் தேடிப் போக ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் முத்துராமலிங்கன்.

சென்னையில் பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை பார்ப்பவர் கீர்த்தி. அவருடைய அண்ணன் அவருக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்க்கிறார். அந்த மாப்பிள்ளையிடமே தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லச் சொல்கிறார். அவரும் அப்படியே சொல்லி விட்டு, பின்னர் அதற்கான காரணத்தைக் கேட்கிறார். அதன் பின் கீர்த்தி அவரை அழைத்துக் கொண்டு ஒரு மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர் கீர்த்தி கர்ப்பமாக இருப்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அதிர்ச்சியடையும் மாப்பிள்ளை அதற்கான காரணத்தைக் கேட்க கீர்த்தி அவருடைய ‘காதல் ஆட்டோகிரப்’பைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அது என்ன என்பதுதான் ‘சிநேகாவின் காதலர்கள்’.

ஹிந்தி சினிமாவிலும், மலையாள சினிமாவிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழில் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்ற குறையை இந்தப் படம் நிவர்த்தி செய்து ஆரம்பித்து வைக்கட்டும். அதிலும் முன்னணி கதாநாயகிகள் யாருமில்லாமல் சில படங்களில் தங்கை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாத கீர்த்தியை நாயகியாக்கிருக்கிறார் இயக்குனர்.

சும்மா சொல்லக் கூடாது, ஒரு கனமான கதாபாத்திரத்தை கவனமுடன் செய்து கவர்ந்திருக்கிறார் கீர்த்தி. எப்போதும் இருக்கும் ஒரு குறும்பு, ஒரு அலட்சியம், எதிலும் தீர்க்கமாக எடுக்கும் முடிவு என இந்தக் காலத்துப் பெண்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். மொத்த படத்தையும் இவர் மட்டுமே தாங்கிக் கொண்டு கடைசி வரை அவரைக் காதலிப்பவர்களில் ஒருவராக நம்மையும் சேர்த்துக் கொண்டுவிட்டார். இவ்வளவு நடிப்பவரை தமிழ்த் திரையுலகம் இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம்தான்.

மற்ற நடிகர்கள் எல்லாருமே புதுமுகங்கள்தான். அதில் கீர்த்தியின் காதலர்களில் ஒருவராக பாண்டியன் என்ற உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரத்தினகுமார் யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். ஒரு உதவி இயக்குனருக்குரிய வலியும், வேதனையும் அவருடைய கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அடுத்து இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உதய் குமார், சாதி மாறி காதலிக்கும் காதலர்களின் ஆற்றாமையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரி மாணவராக நடித்திருக்கும் திலக், கீர்த்தியின் மாப்பிள்ளையாக வரும் அதிஃப் ஜெய்க்கு அதிகமான வாய்ப்பில்லை.

பூங்காவில் உட்கார்ந்து கொண்டு ‘என்னது அந்த கதையை எடுத்துட்டாங்களா’ எனக் கூறி அதிர்ச்சி அளிக்கும் சிறிய கதாபாத்திரத்தில் தனேஷ் மணி. காலம் பல கடந்தும் கனவுத் தொழிற்சாலை நமக்காக கண் திறக்கும் என காத்துக் கொண்டிருக்கும் பல மூத்த உதவி இயக்குனர்களின், கதையாசிரியர்களின் கனவு கானல் நீராகவே போய் விடுகிறது என்பதற்கு இவருடைய கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

பிரபாகர் இசையில் மதுரைப் பாடல் மட்டுமே மனம் கவர்கிறது. பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கலாம். தேவையற்ற எஃபெக்ட்களை போட்டு படத்தின் வேகத்தைக் கொஞ்சம் தடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.அரை குறை ஆடை, ஆபாசக் காட்சிகள், வெளிநாட்டில் பாடல் காட்சிகள், பல கோடி ரூபாய் செலவில் அரங்குகள், கண்ணாடி, மேஜைகளை உடைத்துத் தள்ளும் சண்டைக் காட்சிகள் இப்படி எதுவும் இல்லாமல் வேறு ஒரு தளத்தில் சினிமாவைக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் முத்துராமலிங்கன்.

நன்றி ::;http://www.screen4screen.com/