September 29, 2021

சிங்கிள் சிகரெட் சேல்ஸுக்கு தடா!

சமீபகாலமாக கடைகளில் சிகரெட்டை உதிரியாக சில்லறை விற்பனை செய்யப்படும் போக்கு காரணமாகவே அதிக பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சில்லரையாக விற்பனைக்கு தடை விதித்தால், புகைப்பழக்கத்திற்கு சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் அடிமையாவதை தவிர்க்கலாம் என இது குறித்து ஆராய்ந்த நிபுணர் குழு குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை அமைச்சகம் எற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
cig banned
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2011–ம் ஆண்டு சிகரெட் புகைப்பதினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக மட்டும் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை என்ற நிறுவனம் அறிக்கை அளித்தது.இதையடுத்து நாட்டில் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு அப்போதைய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த ஹர்ஷவர்த்தன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன்படி இளம் வயதினருக்கு புகையிலை பொருட்களை விற்க தடை, பொது இடங்களில் புகை பிடிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் இளம் தலைமுறையினரிடையே இருக்கும் இந்த புகைப்பழக்கம் குறைந்தபாடில்லை.எனவே இதை மேலும் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காகவும், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டம் 2003–ஐ மறு ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காகவும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மேல்–சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா எழுத்து மூலம் பதிலளித்தார்.அதில் அவர்ம் ‘புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், சிகரெட்டை சில்லறை விலையிலும் மற்றும் தனித்தனியாக விற்பனை செய்வதையும் தடை செய்தல், புகையிலை பொருட்கள் வாங்குபவரின் குறைந்தபட்ச வயது 18 என்பதை 25 ஆக அதிகரித்தல், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ.200–ல் இருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரித்தல் மற்றும் தண்டனையை அதிகரித்தல் போன்றவற்றால் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டு உள்ளது’ என்றார்.

பின்னர் நிபுணர் குழுவின் அறிக்கையை சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக கூறிய ஜே.பி.நட்டா, இது தொடர்பான வரைவு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு மந்திரி சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார்.