June 14, 2021

சாலை விபத்து போன்ற பதற்றமான சூழல்களில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தால்..?

மக்களவையில் அண்மையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்ரி நிதின் கட்காரி, “உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக மக்கள் பலியாகின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்களில் 1.3 லட்சம் மக்கள் பலியாகின்றனர். 2014ம் ஆண்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக 67250 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 61,627 விபத்துக்களும், மத்திய பிரதேசத்தில் 53,472 விபத்துக்களும் நடந்துள்ளன. சாலை விபத்துக்களை தடுப்பதற்காக, மோசமான சாலை வடிவமைப்புக்கு காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
acci feb 27


டிரைவர்களின் தவறு, வாகனங்களின் மோசமான பராமரிப்பு, பாதசாரிகளின் தவறு மற்றும் மோசமான வானிலை ஆகியவையே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாகும்.நெடுஞ்சாலைகளில் 100 கி.மீட்டருக்கு ஒரு மருத்துவ மையம் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாலை விபத்துகள் போன்ற அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, வெள்ளிக் கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், “ வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மருத்துவப் பணி தொடர்பான புதிய விதிமுறைகளை மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பி வைத்தோம்.

அதில், சாலை விபத்து போன்ற பதற்றமான சூழல்களில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பது பணி விதிமீறலாகக் கருதப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற மருத்துவர்கள் மீதும், அவர்கள் சார்ந்த மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுப்பது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாகும் என புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நட்டாவின் பதிலில் கூறப்பட்டுள்ளது.