September 17, 2021

சாலையை பராமரிக்காமல் சுங்க கட்டணம் வசூலிப்பதா?: ஹைகோர்ட்டு கண்டிப்பு!

சென்னை ஐகோர்ட்டில் வி.ஆர்.எஸ்.சம்பத் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்,”சென்னை-வாலாஜாபாத்-பெங்களூரு இடையே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு செல்லும் வாகனங்களுக்கு ரூ.40, ரூ.50 தொகையை சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். சாலையில் சிரமமின்றி வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப அதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்தில்தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் சாலையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சரிவர பராமரிப்பதில்லை. கட்டணமும் கொடுத்துவிட்டு குண்டும், குழியுமான சாலையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, சாலை பராமரிப்பு பணிகளை அந்த நிறுவனம் செய்து முடிக்கும் வரை சென்னை-பெங்களூரு இடையே சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
highcourt
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,”சென்னை-வாலாஜாபாத்-பெங்களூரு நெடுஞ்சாலை பராமரிப்பு பற்றி இந்திய சாலை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை படிக்கும்போது, சுங்கம் வசூலிக்கும் நிறுவனத்தால் அந்த சாலை சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.மேலும், அந்த சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்பார்வை செய்யவில்லை என்பதையும் அறிய முடிகிறது. சாலையைச் சரிவர பராமரிக்காத நிலையில் அதற்கான சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை ஏற்கமாட்டோம்.

இந்த வழக்கில் சுங்கம் வசூலிக்கும் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நடைக்கு மேல் சாலையைப் பயன்படுத்தினாலும், அதற்கான கட்டணத்தை தருவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், சாலையை பராமரிக்காத பட்சத்தில் மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்க தொகையை கொடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி அட்வகேட் ஜெனரல் பதிலளிக்க வேண்டும்.

இந்திய சாலை அமைப்பு கூறியுள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கம் வசூலிக்கும் நிறுவனம் தவறும் பட்சத்தில், சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பிப்போம். இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.