September 27, 2021

“சாதி இன்று”: புது பரிமாணங்களும் விவாதங்களும்!By அபிலாஷ் சந்திரன்

சாதி தவறானது, அநீதியானது என்கிற சின்ன குத்தல் நமக்குள் உள்ளது. அதனாலே இங்கு சாதி குறித்து வெளிப்படையாக பேச தயங்குகிறோம். ஆனால் நம் நண்பர்களும் சுற்றமும் அலுவலக சகமனிதர்களும் என்ன சாதி என்பதை உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனென்றால் சாதி என்றால் அதிகாரம் எனபதில் தெளிவாக இருக்கிறோம். அதாவது சாதியின் ஏற்றத்தாழ்வு வேண்டாம், ஆனால் சாதியின் அடையாளம் வேண்டும் என இன்றைய தலைமுறை நினைக்கிறோம். அதற்கான இனவரைவியல் நியாயங்களைக் கூட அளிக்கிறோம். ஆக ரெண்டுமே சாதியின் அச்சாணிகள்: அதிகாரம் மற்றும் அடையாளம். சாதியை வெறுமனே சமத்துவம் மற்றும் நீதியுணர்வு சம்மந்தப்பட்ட பிரச்சனையாக பார்க்க கூடாது என கோருகிறது “சாதி இனி” எனும் புத்தகம்.
edit - sathi indru
இதை ஸ்டாலின் ராஜாங்கம், அ.ஜெகநாதன், சி.லஷ்மணன். ஜெ.பாலசுப்பிரமணியம், அன்புசெல்வம் ஆகியோர் இணைந்து விவாதித்து எழுத்து வடிவில் கொணர்ந்திருக்கிறார்கள். சாதி குறித்து மட்டுமல்ல இந்திய மற்றும் தமிழக வரலாற்றின் நாம் அறிந்திராத மற்றொரு பக்கத்தையும் இது சித்தரிக்கிறது. மத்திய சாதிகள் எவ்வாறு சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவில் வலுவாக ஆட்சியை கைப்பற்றின, இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை கையகப்படுத்தி அனுபவித்தன என்பதை விவாதிக்கிறது.
சா
தி வெறுமனே ஒரு இறுக்கமான சமூக கட்டுமானம் அல்ல. அதனால் தான் நவீன காலம் வந்த்தும் நிலப்பிரபுத்துவம் விழுந்த்து போல் சாதியம் மறையவில்லை. சாதியம் நம் அறியாமை அல்லது மனிதநேயம் சம்மந்தப்பட்ட்து அல்ல. ஏனெனில் மனிதநேயம் குறித்து அதிகம் பேசுகிறவர்களும் சாதிய பாகுபாட்டோடு நடந்து கொள்வதை தெளிவாக காண்கிறோம். கல்வியில் சிறந்தவர்கள் சாதியை முன்னெடுக்க அதிகம் பிரயத்தனம் கொளவதையும் காண்கிறோம். இந்தியாவில் உள்ள இந்தியர்களை விட அமெரிக்கா போன்ற தேசங்களில் வாழ்கிற நம்மவர்களின் சாதி, மதவெறி உச்சகட்டத்தில் இருக்கிறது. ஆக நவீன பண்பாட்டு பின்னணிக்கும் அதற்கும் சம்மந்தமில்லை.
அதிகார மோகம் சாதியை தக்க வைக்கும் முக்கிய காரணி. தமிழகத்தில் சைவத்தை முன்னெடுத்து சாதியை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றிய வெள்ளாள அறிவுஜீவிகள் ஒரு பக்கம் இருக்க, இலங்கையில் போர்ச்சுகீஸிய ஆட்சியில் அதே வெள்ளாளர்கள் கிறித்துவத்தில் போய் சேருகிறார்கள். ஏனெனில் அப்போது தான் அரசு வேலை கிடைக்கும் என நிலை இருந்தது. ஆங்கில காலனிய அரசு சாதி வாரி கணக்கெடுக்கும் போது ஒரு சாதி தன்னை பிராமணர்க்கு இணையாக பார்க்கப்பட வேண்டும் என போராடுகிறது. பூணூல் போட்டுக் கொள்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் வேலையில் இட ஒதுக்கீடு வந்த்தும் முன்னேறிய சில இடைநிலை சாதியினரும் கூட தம்மை தாழ்த்தப்பட்டவராய் அறிவிக்குமாறு கோரி போராடுகிறார்கள். பள்ளி எனும் சாதி எவ்வாறு வேறு சில சாதிகளுடன் இணைந்து காலனிய காலகட்டத்தில் வன்னிய சாதியாக உருவெடுத்த்து எனும் குறிப்பும் முக்கியமானது. பள்ளிகள் பண்ணை அடிமைகளாக வேலை செய்தவர்கள். ஆனால் புது சாதியாக உருவெடுத்த்தும் தமக்கென புது வரலாற்று கதையாடலை உருவாக்கி இடைநிலை ஆதிக்க சாதியாகின்றனர். தலித்துகள் நிறுவனவாத பேரரசுகள், காலனியவாதம் தோன்றும் வரை தீண்ட்த்தகாதவர் நிலையை அடையவில்லை என இந்நூல் கூறுகிறது. ஆக இங்கு சாதி அமைப்பு இறுக்கமாக என்றும் இருந்த்தில்லை என்பதை இந்நூல் தெளிவாக்குகிறது. சாதி இங்கு மாறியபடியே இருக்கிறது. யாரும் மேல் கீழ் வரலாம். அதனாலே இதை ஜனநாயக பூர்வமானது எனவும் கூற முடியாது. ஏனெனில் ஜனநாயக தத்துவம் சமத்துவத்தை கோருகிறது. படிநிலையை எதிர்க்கிறது.

சாதியத்தின் அடிப்படை மேல் சாதி கீழ்சாதி எனும் இருமை எதிர்வு அல்ல. ஏனென்றால் அது மாறத்தக்கது. தூய்மைவாதம் தான் சாதியத்தின் உயிர். இந்தியர்களுக்கு பொது இடத்தின் சுத்தம் மீது பொதுவாக ஈடுபாடில்லை. அசுத்தம் தான் நமக்கு பிடிக்கும். அது தான் எளிதில் நம்மை பிறரில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. கேரளாவில் ஏகப்பட்ட பொது கழிப்பறைகள் உண்டு. ஆனால் சுத்தம் செய்ய யாரும் தயாரில்லை என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. சுத்தப்படுத்தும் வேலையை ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமே செய்ய வேண்டும் என இந்திய மனம் விரும்புகிறது. இது தனிப்பட்ட சுகாதாரத்துக்கு மட்டும் அல்ல. மேல்சாதியினர் தம்மை பண்பாட்டளவில் உயர்ந்தவர்கள் என காட்ட விரும்புகிறார்கள். அதற்கான வேலைகளை செய்ய அவர்கள் தயாரில்லை. மாறாக அசுத்தம் செய்து, அசுத்தத்தை பிறரை தீண்டச் செய்து இதன் மூலம் தீண்டத்தகாதோர் எனும் பிரிவை உற்பத்தி செய்கிறார்கள். இது நடைமுறை பிரச்சனை மட்டும் அல்ல, ஒரு திட்டமிட்ட மனோபாவம் இதன் பின் செயல்படுகிறது. ஒரு மேல்சாதி இந்தியன் துபாய் போய் கக்கூல் அலம்புவான். ஆனால் அதையே இந்தியாவில் உயிரே போனாலும் செய்ய மாட்டான். அதனால் அவனை யாரும் பழிப்பார்கள் என்றில்லை. அவ்வாறு இந்தியாவில் செய்தால் தன் சாதிய கௌரவம் காலியாவதாய் அவன் அஞ்சுகிறான்.

இதனால் தான் தீண்ட்த்தகாதவர், தீண்டக்கூடியோர் என சாதிகளை பார்க்க வேண்டும் என அம்பேத்கர் கேட்டார். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டை அளிக்காமல் சாதிகளின் பெயரில் அளித்த்து தவறு என்கிறது இந்நூல். இது கோட்பாட்டளவில் சரி தான். ஆனால் தீண்டத்தகாதோர் எனும் அரூப குறிப்பைக் கொண்டு இட ஒதுக்கீட்டை இங்கு வழங்குவது நடைமுறையில் முடிந்திருக்காது. இட ஒதுக்கீடு அதிகமும் தலித்துகளுக்கு தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செல்லாமல் இடைநிலை சாதியினர் அப்பத்தை மொத்தமாய் தமக்குள் பறித்துக் கொண்டதற்கு ஜனநாயக அமைப்பின் உள்ளார்ந்த ஒரு கோளாறும் தான் காரணம். அது பெரும்பான்மைவாதம். இது குறித்து சாக்ரடீஸும், பிளேட்டோவும் முன்பே பேசியிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் நீதி, சமத்துவத்துக்கு எல்லாம் இடமில்லை. கும்பல்வாதத்துக்கும், சாமர்த்தியத்துக்கும், ஆள்பலத்துக்கும் தான் இடம். அடித்து பிடித்து தம் இட்த்தை தக்க வைக்கிற சாதியினர் தான் முன்னேற முடியும் என்பதை நமது நூறு வருட வரலாறு காட்டுவதாய் இந்நூல் கூறுகிறது.

குறிப்பாய் தமிழகத்தில் பிராமணர்களை ஒட்டுமொத்த எதிரிகளாய் மாற்றுவதன் மூலம் திராவிட அமைப்புகள் எவ்வாறு இடைநிலை சாதியினர் மொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற வழிவகை செய்தன என்றும் கூறுகிறது. இது இங்கு ஏற்கனவே பேசப்பட்டுள்ள முக்கியமான பிரச்சனை. திராவிட கழகங்கள் இட ஒதுக்கீட்டை பிறமாநிலங்களை விட அதிகமாய் பெற்றுத் தந்ததாய் நாம் ஒரு புறம் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த ஒதுக்கீடு அதிகமும் தாழ்த்தப்பட்டவர் எனும் பெயரில் இடைநிலை சாதியினர் தான் பெற்று வருவதை இந்நூல் விமர்சிக்கிறது.
சாதி ஒதுக்கீட்டுக்கு எதிரான மேல்சாதியினரின் குரல் தான் இங்கு வலுவாக ஒலிக்கிறது. ஆனால் இடைநிலை சாதியினருக்கு எதிரான குரலும் முக்கியமானது. இடைநிலை சாதியினருக்கு ஆன ஒதுக்கீடு அதிகரித்தவாறே போகிறது. இதற்கு காரணம் அச்சாதிகளுக்கே மக்கள் தொகை பலம் அதிகம். ஓட்டுக்காக அரசியல்வாதிகள் அவர்களையே திருப்திப்படுத்தவே முயல்வார்கள். தமிழகத்தின் சத்தமின்றி பல தீண்ட்த்தக்கவர்கள் தம்மை தீண்டத்தகாதவர்களாக காட்டி பட்டியல் சாதியில் இடம் பெற்று ஒதுக்கீட்டை கபளிகரம் பண்ண முயல்கிறார்கள், அவர்களுக்கு அரசுகள் சுணங்காமல் துணை போகின்றன எனவும் இப்புத்தகம் விளக்குகிறது.

பிறப்பின் அடிப்படையில் நம்மை உயர்வாய் காட்டிக் கொள்ள ஏன் இவ்வளவு பிரியப்படுகிறோம்? இதற்காய் ஏன் மலைமலையாய் வரலாறுகளை எழுதுகிறோம்? இது குறித்து அறிந்து கொள்ள நாம் எரிக் புரோமின் Fear of Freedom நூலைப்படிக்க வேண்டும். நவீனத்துவத்துக்கு முந்தைய நிலப்பிரபுத்துவ சூழலில் மக்களுக்கு கௌரவமும் சமூக இடமும் சுயமுயற்சியின்றியே தானே கிடைத்தது. ஆனால் இன்றைய காலத்தில் நம் உழைப்பும் தனித்துவமும் தான் நம் இடத்தை தீர்மானிக்கிறது. முன்னேறுகிற யாரும் மரியாதை அடையலாம். சுயமுயற்சியும் தனித்துவமும் இல்லாதவரக்ள் இதனால் பதற்றமாகிறார்கள். கணிசமான இந்தியர்கள் இவ்வகை தான். நாம் வேலை செய்து சம்பாதிப்போம். ஆனால் ஆளுமை வளர்த்து, செய்கிற பணியில் நம் அடையாளம் பதிக்கிற ஆர்வம் நமக்கில்லை. அதனால் தான் நமக்கு பரம்பரை வழியாக வருகிற பெயரும் பட்டமும் அவ்வளவு அவசியமாகிறது. அது ஒரு பத்திரத்தை தருகிறது. அடிமுட்டாள், மகா சோம்பேறி, திறமையற்ற ஆள் கூட இங்கே சாதி பின்னணி கொண்டு எளிதில் கௌரவம் பெற முடியும். நாம் சாதியத்தை தக்க வைக்க விரும்புவதன் ஒரு மறைமுக காரணம் இதுவாக இருக்கலாம்.

நீதிக்கட்சி மற்றும் திராவிட கட்சிகளின் வரலாற்றை புத்திசாலித்தமான வாதங்கள் மூலம் சித்தரிக்கிற Brahmin NonBrahmin எனும் எம்.எஸ்.எஸ் பாண்டியனின் முக்கியமான நூல் பார்க்க தவறுகிற சித்திரத்தை “சாதி இன்று” காட்டுகிறது. Brahmin NonBrahminஐ இந்நூல் நிறைவு செய்கிறது எனலாம்.

இன்னும் இரண்டு சாத்தியங்களையும் இந்நூல் பரிசீலித்திருக்கலாம். ஒன்று சாதியத்துக்கும் கூட்டு மனப்பான்மைக்குமான உறவு. இந்தியாவில் தனிமனிதவாதம் வலுவாக தோன்றினால் சாதியத்தை பலவீனப்படுத்த அது உதவுமா? இதை நாம் விவாதிக்க வேண்டும். அடுத்து குடும்பம். சாதியை வளர்ப்பதில் குடும்ப உறவுகளுடனான அணுக்கமும், வலைப்பின்னலும் ஜீவநாடி போல் இயங்கின்றன. ஒரு மனிதன் ரத்த உறவுகளை விடுத்து தன் ஆளுமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப நண்பர் வட்டாரத்தை உருவாக்கி அதையே உறவுகளுக்கு மாற்றான ஒரு சமூக குடும்பமாக பார்க்க இயலுமா? அப்படி இயன்றால் அது சாதியத்துக்கு விழுகிற மிகப்பெரிய அடியாக இருக்கும். சாதி எண்ணம் குறுகின மனப்பான்மை என பேசுவதை நிறுத்தி, ரத்த உறவுகளுடன் ஒட்டுவது ஒரு குறுகின மனப்பான்மை என நாம் யோசிக்க ஆரம்பிக்கலாம். சாதியற்ற சமூகம் உறவுகளுக்கும் குடும்பத்துக்கும் அதிக முக்கியத்துவமில்லாத தனிமனிதர்களின் கூட்டு சமூகமாகவும் இருக்கலாம்.

நன்றி : அபிலாஷ் சந்திரன் in thiruttusavi.blogspot.in/2014/03/blog-post_30.html