September 18, 2021

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் `கொற்கை’

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த தாக்கமும் நம்பிக்கையும்தான் கொற்கையை உடனே படித்துவிட வேண்டும் எனத் தூண்டியது. ஆனால், புத்தகத்தை வாங்குவதில் அன்றைய சூழ்நிலையும் விலையும் இரு தடைகளாக இருந்தன. அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதே நண்பரும் எழுத்தாளருமான மோகன ரூபன்தான், தான் எப்படியும் ஒரு பிரதி வாங்கத்தான் போகிறேன். இப்போதே வாங்கி விடுகிறேன். நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள், பிறகு படித்துக் கொள்கிறேன் என்றார். அதே போல வாங்கிக் கொண்டும் வந்த அவர், பிரித்துப் பார்த்துவிட்டு, சொன்னபடியே என்னிடம் தந்துவிட்டார்.
Sahitya_Academy_Award_Book 18
முன்னதாக, நாவலைப் பற்றி எதிர்மறையான சில விமர்சனங்களையும் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், படிக்கத் தொடங்கியபோது, தொடக்கத்தில் நகர்வது சற்று சிரமமாகத் தோன்றியது. ஆனால், அடுத்தடுத்து நாவல் நகர்ந்த வேகம் இப்போதும் மறக்க முடியாதது. மிக விரைவாகவே படித்து விட்டேன்.

அவசியம் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. எழுதலாமா? என்ற போது, கண்டிப்பாக, என்ற நண்பர் சுதீர் செந்தில் அடுத்த இதழ், உயிர் எழுத்தில் அந்த விமர்சனத்தை வெளியிடவும் செய்தார். இவ்வளவு நாள்களுக்குப் பிறகும் கொற்கையில் வந்து சென்றவர்கள் என்னைவிட்டு விலகவில்லை.சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட இந்தத் தருணத்தில் மீண்டும் கொற்கையைப் பற்றிய அந்த எழுத்துகள்…

அழகும் வக்கிரமும் பூண்டு கதைத் தலைவனாக நகரும் காலம்

`ஆழிசூழ் உலகு’ முதல் நாவலிலேயே தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த ஜோ டி குரூஸின் இரண்டாவது (பெரு) நாவல் `கொற்கை’.காலம்தான் கொற்கையின் முதன்மையான கதாபாத்திரம், கதைத் தலைவன்!

ஆனால், அந்தக் காலமும்கூட தான் நகர்வதற்காக பிலிப் என்ற சிறுவனில் தொடங்கி, பெரிய மனிதர் பிலிப் கலிங்கராயன் மறைவு வரை, சிறிய மீனவ முத்துக்குளித் துறையிலிருந்து உலகமயத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மா நகர் வரை கடந்து முடிகிறது. நாவலில் ஊரும் பெயர்களும் காலத்தை நகர்த்திச் செல்கின்றன; அல்லது காலத்தால் அவையிரண்டும் நகர்த்தப்படுகின்றன.

பரதவர் சமுதாயத்தை மையமாகக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் (பின்னோக்கி நகர்ந்து பாண்டியபதியின் காலம்), கிறித்துவத்தின் தாக்கம், நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் முன்னும் பின்னுமான கொந்தளிப்புகள் என இன்றைய சூழல் வரையிலும் சித்திரித்துச் செல்கிறது நாவல். `சித்திரித்து’ என்ற சொல் மிகையல்ல; உண்மையில் நாவல் பல நேரங்களில் சித்திரங்களின் தொகுப்பாகவே நகர்கிறது.

ஒரு நகரின் வரலாற்றுக்கு ஊடாக ஒவ்வொரு தனிமனிதனின் வரலாறும் ஒவ்வொரு தனிமனிதனின் வரலாற்றுக்கு ஊடாக நகரின் வரலாறும் பதிவாகிக் கொண்டே செல்ல – துக்கமும் மகிழ்ச்சியும், கசப்பும் இனிப்பும், கெட்டதும் நல்லதுமாக… 1914-ல் தொடங்கி 2000 வரை!
கொற்கை (அதாவது தூத்துக்குடி) நகரின் வளர்ச்சியைச் சுற்றிவந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான நகர்களுக்கு இத்தகைய வரலாற்றுப் பக்கங்கள் இருப்பதையும் அவையெல்லாம் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன என்பதையும்கூட நாவல் உணர்த்துகிறது. அந்தந்த ஊர்க்காரர்கள் தேடத் தொடங்கலாம்.

நாவலின் முதன்மையான பாத்திரங்களில் ஒருவராக பிலிப் தண்டல் நகர்ந்தாலும் கதைத் தலைவனுக்குரிய குணச் சிறப்புகள் எதுவும் வலிந்து அவர் மீது திணிக்கப்படவில்லை. நாவலின் பெரும்பாலான பாத்திரங்கள் நாயகத் தகுதியைப் பெற்றிருந்த போதிலும் அவ்வவற்றின் நிறைகுறைகளுடனேயே நகர்கின்றன. மகா உன்னதமானவர்களும் இருக்கிறார்கள்; ஆக மலினமானவர்களும் இடம் பெறுகிறார்கள்.
நாவலாசிரியரின் பின்புலம், கடலோடி வாழ்க்கை போன்றவற்றின் காரணமாக கடல் பயணமும் தோணி முதல் கடலன்னையின் சகலமும் நமக்கு நன்கு அறிமுகமாகின்றன.

காலத்தின் மாற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லது விரும்பாமல் பழைமையையும் வெற்றுப் பெருமையையும் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டதாலேயே ஒரு சமூகத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கலங்கலாகிப் போய் மங்கிவிட நேர்கின்றன. அதேவேளை வேறு சமூகத்தினர் மாற்றத்துக்கேற்ப மாறிக்கொண்டு விட்டுக் கொடுக்கும் போக்கினால் முக்கியமான இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.

பல தருணங்களில் மனிதர்களின் மனவோட்டங்களும் இணையான பாத்திரங்களாக யதார்த்தத்தை இயல்பாக வரைந்து செல்கின்றன.
கொற்கை அல்லது பரதவர் சூழல் முற்றிலுமாக விளக்கப்பட்ட நிலையில், பிலிப் கொற்கை நோக்கி வருகிறான்(ர்). `சுதேசியாக இரு, சுதேசிப் பொருள்களையே வாங்கு, கதராடை அணிவோம், அன்னியப் பொருள்களை வாங்க மாட்டோம்’ – கொற்கைத் தெருவின் சுவரொட்டிகள் அவரை வரவேற்கின்றன.

குடியேற்றத்துக்கு எதிரான கொற்கை மக்களின் மன நிலையும்கூட பிலிப்பை வரவேற்கிறது. “என்னமோ தெரியில கடக்கற ஊர்வள்ல இருந்து இந்தப் பக்கம் படயெடுக்கியது ரெம்ப அதியமாய் போச்சி. யாவாரிய வந்தாச் சரி. நீங்கள்வ அங்கன கெடந்து மீன் புடிக்க வேண்டியதுதானடே … அவம் அவம் குண்டி கழுவத் தண்ணியில்லாம அல்லாடுதாம்’’ என்று முனகுகிறார் ஒரு பெரியவர். நாவலின் பாதி நூற்றாண்டு காலம் வரையிலும்கூட ஆங்காங்கே இந்த அதிருப்தி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது; கடைசி வரையிலும் தண்ணீரும் ஒரு பிரச்சினையாக வந்துகொண்டிருக்கிறது.

“நமக்குக் குறிக்கோள் என்னப்பா, நாலு துட்டு சம்பாதிக்கணும். நம்ம சந்ததியளுக்கு ஒரு நல்ல யாவாரத்த சொத்து பத்துவளோட வுட்டுட்டுப் போவணும். வந்த எடத்துல சண்ட புடிச்சிகிற்று அலையக் கூடாது. பர்னாந்துமாரு நமக்கு எதுராளியில்ல. நம்ம யாவாரம் வளரனுமுன்னா அவுக தொண அவசியம். வெள்ளக்காரனே ஒத்துப்போறாம்’’ –

கொற்கையில் நடைபெறும் சமூகம் சார்ந்த வணிகர் ஆலோசனைக் கூட்டத்தில் சொல்லப்படும் இந்த வரியொன்றே ஒரு சமூக முன்னேற்றத்தின் மூலவேரைச் சுட்டிக்காட்டுகிறது (பக். 167).
Sahitya_Academy_Award_18
ஒரு துக்கத்தில்தான், தன்னிலும் மூத்த சலோமியிடம் பிலிப் கொண்ட காதல் தெரிகிறது. அதை பிலிப் வெளிப்படுத்திச் செயல்படுத்த ஐந்தாண்டுகள் தேவைப்படுகின்றன.

“ஒங்க ஜிம் கார்பெட் அந்த சேம்பவாட் புலிய கொன்னுற்றாராம.’’ “ஆமாப்பா, பத்ரிநாத் போற பாதயில இதுவரைக்கும் பதிவான சாவு மட்டும் நானூற்றி முப்பதுக்கு மேல.’’ “தட் மீன்ஸ் ஹி டிட் எ மார்வெலஸ் ஜாப்.’’ ஜிம் கார்பெட் என்ற பெயரைக் கேட்டதுமே உடம்பெல்லாம் மயிர்க்கூச்செரிய இளநகையோடு அமர்ந்திருந்தான் சில்வெஸ்டர். – இவ்வாறாக போகிற போக்கில், ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் படித்தவர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வேட்டைக்காரர் ஜிம் கார்பெட் விளங்கியதைத் தொட்டுக் காட்டுகிறது நாவல் (பக். 293).

சிங்கராயரின் புதிய தோணி கட்டுமானத்தை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ஒரு தோணி எவ்வாறு உருவாகிறது? என்பதை விளக்கிவிடுகிறார் நாவலாசிரியர் (பக். 355).

பாண்டியபதியின் வாரிசான பிரான்சிஸ் அறிமுகமாகிற விதம் – ஒரு திரைக்காட்சியைப் போல அற்புதமாக அமைந்திருக்கிறது. அதைப் போலவே, அன்னையின் ஊர்வலம் தன் வீட்டருகே வந்தபோது, தன் அதிகாரத்தின் அடையாளமான கிரீடத்தையும் பாரம்பரியமான முத்துமாலையையும் கழற்றி அன்னையின் பாதத்தில் பாண்டியபதி சமர்ப்பிக்கும் விதம் உள்ளத்தை உருக்குகிறது.

ஒருகாலத்தில், ஒரு மரணத்தின்போது நெரிதுளிப்பட்டு நாடே திரண்ட பாண்டியபதி அரண்மனையின் பக்கவாட்டுச் சுவரில், துப்புரவுத் தொழிலாளியான ராமுலய்யா கையிலிருந்த (மலமெடுக்கும்) தொரட்டியையும் அகப்பையையும் சாய்த்து வைத்துவிட்டுச் செல்கிறார் (பக். 730). காலத்தின் போக்கில் பின்னொரு சந்தர்ப்பத்தில் – 2000-ல் – தற்செயலாகத் திரும்பி பாண்டியபதி அரண்மனையை அமுதன் பார்க்கும்போது, `பகுதி பகுதியாக வாடகைக்குக் கொடுத்திருந்தார்கள்.

தென்புறம் டீக்கடை, வடபுறம் போட்டோ ஸ்டுடியோ. பிரதான வாசல் பக்கம் இருந்த பாண்டியபதி கல்வெட்டின் மேல் சுண்ணாம்பு தடவியிருந்தது.’ (பக். 1119). சிறுசிறு தகவல்களே மன்னர் பரம்பரையான ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை அல்லது அழிவைப் பதிவு செய்கிறது.

பாண்டியபதி அரண்மனையின் வீழ்ச்சியைப் போல தமிழ் மண்ணில் வீழ்ந்த குடும்பங்கள் எத்தனையெத்தனை?

தொடக்கத்திலேயே, கொற்கையில் நூலாபீஸுக்காக எம்.வி. வேண்டிக் என்ற கப்பலிலிருந்து ஒரு ஸ்டீம் என்ஜின் இறக்கப்படுவது மட்டுமே ஒரு குறுநாவலாக விரிகிறது.

கொற்கை ஒற்றை நாவல் என்றாலும் நாவல் முழுவதுமே இத்தகைய குறுநாவல்களாலும் சிறுகதைகளாலும் நிரம்பிக் கிடக்கிறது. பெரும்பாலான மனிதர்களும் தங்களுக்கென தனித்தனிக் கதைகளைச் சுமந்துகொண்டிருக்கின்றனர்.

லொஞ்சின் தண்டலுடைய தோணி கடலில் செல்லும்போது கடல் கொள்ளையர்களை எதிர்கொள்ள அவர்களைச் சமாளித்து வெற்றிகொள்வது சிறுகதையாக, ஒரு குறும்படத்துக்குரிய வேகத்துடன் நகர்கிறது (பக். 296).

சந்தனமாரி கோயிலின் கதையேகூட தனியொரு குறுநாவலாகவோ பெருநாவலாகவோ உருமாறத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது எனலாம்.

ஒட்டுமொத்த நாவலிலுமே காத்திரமான – முதன்மையான பாத்திரமென மதலேனைத்தான் கொள்ளலாம். மிக நுட்பமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள் `அல்லது வாழ்ந்திருக்கிறார்’ மதலேன். அவள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியும் மறக்க முடியாதவை. வீட்டுக்குள் புகுந்து தன்னுடைய கேவலமான விருப்பத்தையும் சபதத்தையும் பாதிரியார் பபிலோன் வெளியிடத் தொடங்கியதிலிருந்து சகலமும் விறுவிறுப்படைய, இறுதியில் முடிவுக் காட்சி வாசகர்களையும் சட்டென அறுத்தெறிந்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிஅற்புதமான துன்பியல் நாடகம்.

`அப்பா, நெலவுல யாருமே இருக்க மாட்டாங்ளாப்பா. அம்மாவ எதுக்குப்பா பெட்டியில வச்சி மூடுறாங்க. அப்பா அம்மா பெட்டியில மண்ணள்ளிப் போடுறாங்கப்பா. அம்மா ரெம்ப நல்லவ. அதாம் ஆண்டவரு அவள மோட்சத்துக்கு எடுத்துக்கிட்டாராம். அங்க வுள்ள நந்தவனத்துல அம்மாவும் பூவாயிருப்பாளாம. அப்பா இது பேச்சி போட்டியில ஜெயிச்சது. இது வகுப்புல மொதல்ல வந்ததுக்குப்பா. இது ஓட்டத்துல முதல்ல வந்ததுக்குப்பா. ராசாத்தி அம்மாயில்லியம்மா இதயெல்லாம் பாக்கிறதுக்கு. நீங்க தோணிக்கெல்லாம் போகாதீங்கப்பா. எங்கூடயே இருங்கப்பா. பபிலோன் மச்சாம் என்னய அங்கங்க கிள்ளுராங்கப்பா. பாவாட தாவணியில நா நல்லாயிருக்கனாப்பா. எனக்கு நீங்க போதும்பா, அம்மா வேண்டாம். கிறுக்கத்தானாயா நானா வேண்டாஞ்சாமி. அக்கா எதுக்கு பிலிப் மாமவா இப்புடி திட்டுனா. பாவம் பிலிப் மாமா. யூனிபார்மில நீங்க கம்பீரமா இருக்கீங்க. அத எதுக்கு எரிக்கிறீங்க அது யாரு போட்ட கடிதமுன்னு சொல்லிற்று எரிங்க.’ – இறுதிக்கட்டத்தில் மதலேனின் நனவோட்டமாகச் செல்கிற வரிகள் (பக். 633). கலங்க வைப்பவை.

மல்லிப்பூ செபஸ்தியார் மகள் கிரேசிக்கு சிரிப்பு நடிகர் சம்பந்தம் வேண்டாம் என்று சொன்னது கொற்கையெங்கும் பரவி நான்கு பேர் கூடுமிடமெல்லாம் அந்த சிரிப்பு நடிகர் பற்றிய பேச்சாய்க்கிடந்தது. (பக். 444). கிரேசியோ வேறொருவருக்கு மண முடிக்கப்பட்டு மணவாழ்விலும் தோற்று நொந்து முடிய, மீள உரையாடலாக இடம் பெறும் வரிகள்:

“மெட்ராசியில இருந்து யாரோ பாபுன்னாவ.. நம்ம ஊர்க்காரந்தாம். பழைய காங்கிரஸ்காரம் வந்து பொண்ணு கேட்டாம். மொதல்ல சரியின்னாவ. பொறவு அவன நேரில பார்த்திற்று முடியாதின்னுட்டா.’’ “எதுக்கு…?’’ “அவம் படங்கள்ல கோணங்கி மாரி நடிக்கிறானாம். சார்லஸ் தேட்டர்ல எதோ ஒரு படத்துல பாத்திருக்கா. அதே ஆளப் பாத்தவொடன இந்த கேணப்பயகூட நாந்தெருவுல எறங்கி நடந்தா எல்லாரும் என்னய கிண்டல் பண்ண மாட்டாங்களான்னு வேண்டவே வேண்டாமின்னுட்டா…’’ “எதுக்கு? நல்ல மனுசனாச்சே…’’ “அவ விருப்பத்துக்கே வுட்டுட்டோம்மா.’’’ (பக். 594, 595).

நாவலில் பெண்களின் வன்மத்துக்குப் பெரும் பங்கிருக்கிறது (ஆழிசூழ் உலகிலும்). பிலிப்பின் சித்தியான ரஞ்சிதத்தில் தொடங்கிப் பலரிடமும் இந்த வன்மம் வெவ்வேறு காரணந்தொட்டு வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது.

பிலிப் மீது ரஞ்சிதம்கொண்டிருந்த நிறைவேறா காமம், வாழ்நாளெல்லாம்- அவள் மண்ணுக்குப் போகும் வரையிலும் வன்மமாகத் தொடர்கிறது.
பிலிப்பின் தங்கை அருள்மொழி (தன்னை வளர்த்து ஆளாக்கிய சகோதரனின் மகளையே, தன் மகனுக்கு மணமுடித்தபோதிலும் வாழாவெட்டியாக்கிவிடுகிறாள்), மதலேனின் அக்கா திரேசா… ஏதோவொரு காரணம் பற்றிக் கடைசி வரை கனன்று கொண்டேயிருக்கிறது

இப்படிப்பட்ட ஒவ்வொருவரின் வன்மமும்; நாவலை நகர்த்திச் செல்வதிலும் இவை பெரும் பங்காற்றுகின்றன.
ரஞ்சிதத்தினுடைய அணையா காமம், பிலிப் கலிங்கராயனின் குடும்பத்தைச் சுற்றிச் சுற்றிப் பழிவாங்கிக் கொண்டிருக்க, பிலிப் கலிங்கராயனுடைய மகனான பாதிரி மரியதாஸ் கொண்ட காமத்தைக் கிரேசியின் மகளான கன்னியாஸ்திரி ரென்சி கழற்றியெறியும் விதம் சுருக்கெனப்படுகிறது.

மாறாக, நர்ஸ் பயிற்சி முடித்து அமெரிக்கா செல்லும் கனவில் இருக்கும் நாடார் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான ரேவதி, இரவில் பஸ்ஸில் தன்னைத் தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்யத் துரத்தும் சிலரை அடித்துத் துவைத்த பரதவனான ரேனால்டைத் தேடியலைகிறாள். ஒரு மெல்லிய தொடுதலை மறக்க முடியாமல் அமெரிக்கக் கனவையே துறந்துவிட்டு ரேனால்டையே மணம்புரிந்து கொற்கையில் பெரிய ஆளாகவும் மாறிவிடுகிறாள். ரேவதியின் முதலிரவு அனுபவம்கூட அவளைப் பேரழகியாகவே காட்டுகிறது.

மாதரசியுடனான உரையாடலில் கோபாலின் முன்கதை சொல்லப்படுகிறது (பக் 968). கோபாலின் கதையும் ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியே. இத்தனைக்கும் நடுவில் நண்பனின் ஆசையூட்டலால் விலைமாதுவைத் தேடிச் செல்லும் கோபால் பெறும் அனுபவம் பெரிய அதிர்ச்சி, வாசகர்களுக்கும். ஏதோவொரு வகையில் மாதரசிதான் கோபாலை மீட்கிறாள்.

ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கையேகூட கால மாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் சிறுகதையாக அமைந்துவிடுகிறது (பக் 725).
நாவலில் மதலேனுக்கு இணையாக மனதைத் தொடும் மற்றொரு பெண் பிளாவி. மிகச் சிறிய கதை. இதுவும் நினைவோட்டமாகத்தான் நாவலில் இடம் பெறுகிறது.

நாவலில் பிளாவி ஒரு சொல்கூட பேசுவதில்லை. பக்கத்துவீட்டில் குடிவரும் குடிமகனான கோலியாத்திடம் அவளையறியாமல் ஏற்பட்ட பாசமே காதலாகிறது. இருவரும் ஒருவரிகூட பேசிக்கொண்டதில்லை. தவிர்க்க முடியாத சூழலில் கோலியாத்திடம் காதலைத் தெரிவிக்கச் செல்ல எல்லாம் உடைந்துபடுகிறது. இரண்டே வாரங்கள். கோலியாத்தின் மடியில் உயிர்விடுகிறாள் பிளாவி (பக். 623).

நாவலில் வரும் மற்றொரு மௌனமான, புறக்கணிக்கப்பட்ட சோக சித்திரம் லிடியா (பக். 264, 788, 1066).

இன்னமும் நாவலுக்குள்ளே புதையலாகக் கிடக்கும் நிறைய கதைகளைத் தனித்தனியே விவரித்துச் செல்லலாம். வாசகனின் வாசிப்பு ஆர்வத்தைத் குலைத்துவிடுமோ என்ற அச்சம் தடுக்கிறது.

நாவலில் குடும்பங்களின் வீழ்ச்சியும் எழுச்சியும் இயல்பாக சித்திரிக்கப்படுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகள் உறுத்தாமல் தன்னியல்பாக வாசகனுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. நாவலின் போக்கில் அவன்களாக இருந்தவர்கள் எல்லாம், அவராக மாறும் மாற்றம் நெகிழ்வாக, உணர்ந்துகொள்ள முடியாத வகையில் நடைபெறுகிறது.

இளமையிலேயே விதவையாகிப் போன அம்மாவின் நிலை தெரிந்தும் அதைக்காட்டி இதைக்காட்டி மற்றவர்களை நம்ப வைத்து எல்லாப் புதுக்கணக்கையும் அம்மாவை வைத்தே ஆரம்பித்து அதை ஒரு பழக்கமாகவே தாத்தா (சண்முகவேல்) ஏற்படுத்தியிருந்தது ரமேஷின் எம்.பி.ஏ. மூளைக்கே எட்டாத பெரிய குடும்ப மேலாண்மை (பக். 997). இந்த ரமேஷ்தான் மதலேனின் மகள் சில்வியாவை மணக்கிறான்.

`நம்பளப் பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கான்வ’ `…’ `இப்படிச் சொல்லிச் சொல்லியே காரியத்தச் சாதிச்சுப் புடுவான்க’ – நாவலின் தொடக்கத்தில் என்ஜினை இறக்கும்போது கிலுக்குவின் கருத்தாக வெளிவரும் இந்த வரிகள், பரதவர் சமுதாயத்தின் வாக்குமூலமாக வெளிப்படுகிறது.
ஆங்காங்கே பரதவர் சமுதாயத்தின் குணங்களைச் சுட்டுவதான வரிகள்.
பர்னாந்துமார் கொண்டான் கொடுத்தான் வீடுகளில் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை. கட்டிக்கொடுத்த தங்கையையோ அக்காவையோ பார்க்க வந்தாலுமே கை நிறையப் பொருட்களோடு வருவார்கள்.

பெரும்பாலும் கை நனைப்பதில்லை. இதற்கு முற்றிலும் மாறாக இப்போதெல்லாம் அக்காமார் வீட்டோடு ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டு உறிஞ்சும் மச்சினர்களும் உண்டு. அதனாலேயே கொற்கையில் பல குடும்பங்கள் சீரழிந்த கதைகளும் உண்டு (பக். 1014).
அந்தக் காலத்திலிருந்தே பரதவர்களிடம் நிலவிவரும் பழக்கம் கோவில் காத்தல். வீட்டின் அன்றாடக் கவலையிலிருந்து விடுபட்டுக் கோவிலே கதியென்று கிடப்பது
(பக். 814).

பிலிப்பின் நினைவில் வரும் மருமகன் கிளாடியஸ் ரிபேராவின் சொற்கள், நாவல் மனிதர்களையும் சார்ந்த சமூகத்தையும் பற்றிய ரத்தினச் சுருக்கமான வரிகள் – `கடல்ல வேட்டையாடும் ஒரு சமூகம். இங்கு தனிமனித வெற்றிதான் எப்போதுமே குறி. ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்குக் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால், என் அயலானுக்குக் கிடைக்கக் கூடாது. காரணம் அடுத்தவன் வெற்றியைத் தாங்க முடியாது. ரத்தத்தோடு கலந்துபோன உணர்வு இது.

உற்பத்திக் காரணியில் நிலம் ஒரு பங்கை வகித்திருக்குமானால் ஒற்றுமையின் தேவை ஒருவேளை (இவர்களுக்குப்) புரிந்திருக்கலாம். ஒருவனுடைய வெற்றியை ஒத்துக்கொள்ளாத மற்றவன், இருவருமே தோற்கும்போது ஒன்றுபடுகிறான். தனக்குள் ஒன்றுபடாத ஒரு சமூகம் எப்படி நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் கத்தோலிக்கத்தைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டது என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிர்’ (பக். 1074).

இன்றைக்கும் பலருக்கும் ஏற்படுகிற அனுபவம், தோன்றுகிற சொற்கள், அமுதனுக்கு ஏற்படுகிறது. கொற்கையிலிருந்து சென்னைக்கு ரயிலில் செல்லும் அமுதனைத் தேடி வந்து கொஞ்சம் சீட்டை மாற்றிக்கொள்ள முடியுமா? என்கிறாள் ஒரு பெண். `அதெப்படி இத்தன பேரயும் வுட்டுட்டு எங்கிட்ட மட்டும்… இளிச்சவாயமின்னு எழுதி ஒட்டியிருக்கோ.’ (பக். 1083).

நாவல் முழுக்க பெண்களின் ஆதிக்கம்தான்.

நாவலில் மிக நுட்பமான பெண்கள் நிறைய. தன்னைவிட வயதில் இளையவனான கோபால் மீது ஈடுபாடு கொண்டு மணக்கும் மாதரசி, பேரும்புகழும் பெற்ற குடும்பத்தில் மருமகளாகியும் தன் குழந்தைகளை ஆளாக்குவதற்காகத் தன்னையே விற்றுக்கொண்டிருக்கும் பாக்கியம்,

மல்லிப்பூ செபஸ்தியாரின் மனைவியும் மதலேனின் மாமியாருமான வெரோணிக்கம் கர்டோசா, மௌனமாகவே கழிந்துவிடும் எழிலரசி…
நாவலில் வரும் பல பெண்களிடம் இயலாமையில் உழலும் ஒருவித ஒற்றுமையிருக்கிறது. மதலேன், சகோதரனாலேயே கணவன் வெட்டப்பட்டபோதிலும் தன் உடன் பிறந்தவனைக் காப்பாற்றி ஊரைவிட்டு வெளியேற்ற முனையும் சேசு பட்டங்கட்டியின் மகள் ரீத்தம்மா, சிஸ்டர் ரென்சி, அடக்கமாகவே வந்து மறையும் சலோமி… அதேவேளை பிறர் ஏற்கிறார்களோ மறுக்கிறார்களோ தீர்மானமாக முடிவெடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

மறுக்கப்படும் காதல்களும் நிறைய. நிக்கலஸ் மீது பிலிப்பின் மகள் பூங்கோதை கொண்ட காதல், பிலிப் மகன் ஜேம்ஸ் மீது விண்ணரசி கொண்ட காதல், குடிமகன் கோலியாத்திடம் பிளாவி கொண்ட காதல்…
நாவலில் வரும் அனைத்துப் பாத்திரங்களுக்கும் ஏற்றாலும் மறுத்தாலும் ஒருவித நியாயம் இருக்கிறது. அவ்வாறல்லாத ஒரே பாத்திரமாக வருவது பாதிரியார் பபிலோன் மட்டும் என்று குறிப்பிடலாம்.

நாவல் நெடுக வரலாற்றுச் செய்திகளும் கதாபாத்திரங்களே வெளிப் படுத்தும் தகவல்களாக இயல்பாக இடம் பெறுகின்றன. `திருநவேலி பக்கத்துல தாழையூத்துல சுண்ணாம்புக் கல் கண்டுபிடிச்சிருக்காம். பெரிய சிமெந்தி ஆலை வரப் போறதா பேச்சு இருந்திச்சி (பக். 495.)’ சாஸ்திரி செத்துப் போனாருன்னாவ (பக். 710).

அல்லாமல் நாவலில் அவ்வப்போது திடீர் திடீரென தகவல் தெரிவிக்கும் நோக்கில் ஆசிரியரின் கூற்றாக முளைக்கும் வரிகள், காலப் பொருத்தமின்றி, யாருடைய பேச்சிலுமில்லாமல், ஆற்றோட்டமான கதைப் போக்கிற்கு இடையே துருத்திக்கொண்டு நிற்கின்றன (பக். 133, 479, 481, 487, 510, 536, 920).

பிலிப் காலிங்கராயன் ரயிலிலேறும்போது தொடங்குகிற நாவல் – நீண்ட இடைவேளைக்குப் பிறகு – இன்றைய வாழ்க்கையை உணர்ந்துகொள்ளும்வேளையில் அவர் ரயிலிலிருந்து இறங்காமலேயே சட்டென (!) முடிந்துவிடுகிறது.

நாவலில் மனித வாழ்வுகள் அலசப்படுகின்றன. அழகும் வக்கிரமும் பூண்டு கதைத் தலைவனாகக் காலம் நகர்கிறது. கடல்சார் வாழ்வு கரையிலும் கடலிலுமாக பதிவாகிறது.

கதாபாத்திரங்களில் எத்தனையோ பேர் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும். ஒரு கதாபாத்திரத்தில் இருவராக அல்லது ஒருவரே இரு கதாபாத்திரங்களாக. நிச்சயம் பலர், நிஜத்திலும் நாவலிலுமாக நினைவில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

கொற்கையின் வாழ்க்கை ஆவணமாகக் காணப்படும் இந்த நாவலில் எங்கே கற்பனை கலக்கிறது, யாரெல்லாம் கற்பனை மனிதர்கள், யாரெல்லாம் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர்கள், எங்கே இவர்கள் ஒன்றிணைகிறார்கள்? சற்றே கூடக் குறைய மனிதர்களின் கதை… ஏறத்தாழ நூறாண்டு காலக் கொற்கையின் சமூக, பொருளாதார, அரசியல், மத மாற்றங்கள்… மனிதர்களின் கதைகளாகப் பதிவாகியிருக்கிறது.

நாவலின் நிறைவில் தரப்பட்டுள்ள குடும்ப வரைபடம், உண்மையில் படித்து முடித்தபின் ஒருமுறை நிதானமாக நாவலை அசைபோட உதவியாக இருக்கிறது.

நாவலில் நிறைய தகவல்களும் குறிப்புகளும் செய்திகளும் இயல்பாக கதையோடியைந்து இடம் பெற்றிருப்பதும் நாவலின் பெரும் பலம். ஆனால், சில தருணங்களில் அதுவே பலவீனமாகவும் மாறிவிடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

ஆழிசூழ் உலகில் பலருக்கும் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை இந்த நாவலிலும். முதல் வாசிப்பில் நூற்றிச்சொச்சம் பக்கங்கள் தாண்டும் வரையிலும் பல விஷயங்களைக் கோர்வையாக உள்வாங்கிக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. நூலின் நிறைவில் வட்டாரச் சொல்லகராதி கொடுக்கப்பட்டிருந்தபோதிலும் படிக்கும்போதான ஓட்டம் இடறுகிறது. ஆனால், இதுபோன்ற முழுவதும் வட்டாரம் சார்ந்த நாவலில் இவையெல்லாமே தவிர்க்க முடியாததும்கூட.
Sahitya award Joe De Cruz. owl 18
என்ன காரணத்தாலோ இந்த நாவல், வாசகர்கள் அல்லது விமர்சகர்கள் இடையே உரிய கவனத்தைப் பெறவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனி்ல், தமிழ் (குழு) எழுத்தாள, பதிப்பக, விமர்சக உலகத்துக்கு ஒரு தனிப் புத்தியுண்டு. தான் விரும்பாததை, அல்லது விரும்பினாலும் வெளிப்படுத்திப் பேசப்பட்டுவிடக் கூடாது எனக் கருதும் நூல்களை முற்றிலுமாகக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிப் புதைத்துவிடுவது! (இன்றைய பெரிய எழுத்தாளர்கள் பலருக்கும் நேர்ந்திருப்பதுதான்).

பரவலாக வாசகர்கள் படிக்க இயலாமல் போயிருந்தால் விலையும் கூடுதலான பக்கங்களும் காரணங்களாக இருக்கக் கூடும் எனக் கருதலாம். ஆனால், விமர்சன, விவாத உலகம்? நாவல் வெளிவந்து ஓராண்டாகப் போகிறது. தமிழில்தான் இப்படியெல்லாம்கூட நேரிடுகிறது.

ஆழிசூழ் உலகு வெளிவந்தபோது அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டவர் ஜோ டி குரூஸ். அதுவேகூட இந்த நாவலை எழவிடாமல் செய்வதற்கான காரணியாகியிருக்குமோ என்னவோ?
ஆழிசூழ் உலகு நாவலை உள்ளிருந்து வீறிட்டெழுந்து உருவான நாவல் என்றால், கொற்கை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நாவல் என்று குறிப்பிடலாம். தமிழில் தவிர்க்க முடியாத, குறிப்பிடத் தக்க நாவல்.

_ எம். பாண்டியராஜன்,(http://nivimprajan.blogspot.in/2013/12/blog-post_18.html)
உயிர் எழுத்து,
டிச. 2010.