March 23, 2023

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார்.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் விக்டோரியா கெளரி பேசிய வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி, அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ எதிர்ப்பு மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கொண்டிருப்பதால், அரசியல் சாசன அதிகாரமிக்க நீதிபதி பதவியில் அவரை நியமிக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என கூறி இருந்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து, திட்டமிட்டபடி விக்டோரியா கெளரி இன்று காலை கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல், மேலும் 4 பேர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த விக்டோரியா கெளரி உள்ளிட்ட 5 பேரை சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று அவர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், விக்டோரியா கெளரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 5 பேரும் பதவி ஏற்க இருந்த நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பதவி ஏற்புக்காக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை வழங்கிவிட்டதால் திட்டமிட்டபடி விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

டெயில் பீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் விக்டோரியா கெளரி. தனது இளங்கலை சட்டப் படிப்பை மதுரை சட்டக் கல்லூரியில் படித்து முடித்தார். இதையடுத்து கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய நிலையில் பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

இவர் நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. பாஜக மகளிரணி தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். இதனால் அக்கட்சியின் சிந்தாந்தத்தை ஒட்டி செயல்பட்டு வந்திருக்கிறார். பாஜகவிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துகள் இன்னும் சமூக வலைதளங்களில் அப்படியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.