October 25, 2021

சபரிமலை கோயிலுக்கு லேடீஸ் வரப்படாதா..ஏன்? சுப்ரீம் கோர்ட் கொஸ்டின்!

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக செல்கிறார்கள். சபரிமலை கோவிலுக்குள் 10–ல் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் செல்ல பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.அநேகமாக இந்தியாவிலுள்ள பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை வைத்திருக்கிறார்கள்.. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்று கொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, “கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி. அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கும்.இந்நிலையில் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு மற்றும் 5 பெண் வக்கீல்கள் சபரிமலை கோவிலுக்குள் வயது கட்டுப்பாடு இன்றி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று 2006–ம் ஆண்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
sabarimalai
அந்த மனுவில்,:10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்வது அபச்சாரமான காரியம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. 1987–ம் ஆண்டில் ஜெயமாலா என்ற கன்னட நடிகை கோவிலுக்குள் நுழைந்து விக்கிரகத்தை தொட்டதாக பின்னாளில் அவர் கூறியபோது அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெற்றன. விக்கிரகத்தை சுத்திகரணம் செய்யும் வகையில் கோவிலில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. கேரளா இந்து பொது வழிபாட்டு தலங்கள் (பிரவேச அனுமதி) சட்டம் 1965 அடிப்படையில் 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோவிலில் பிரவேசம் செய்வது தடை செய்யப்பட்டது. கேரளா ஐகோர்ட்டு 1991–ம் ஆண்டில் கோவில் நிர்வாகத்தின் இந்த தடையை அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது.

பெண்கள் மீது விதிக்கப்படும் தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது இந்து மதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சடங்கும் கிடையாது. இதுபோன்ற தடைகள் இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். மூலஸ்தானத்தில் (கர்ப்பக்கிரகத்தில்) நுழைவதற்குத்தான் தடை விதிக்க முடியுமே தவிர பாலின அடிப்படையில் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்க முடியாது. எனவே கேரள அரசாங்கம் பிறப்பித்துள்ள இந்த தடை அரசியல்சட்டத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள சமத்துவக் கொள்கைக்கு எதிரானது. எனவே வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான இந்த தடையை நீக்கவும் அனைவரும் சமம் என்ற வகையில் நெறிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சபரிமலை கோவில் நிர்வாகம் தரப்பில் மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் மற்றும் கேரள அரசாங்கம் தரப்பில் வக்கீல் லிஸ் மாத்யூ ஆகியோர் ஆஜரானார்கள்.

பொதுவாக 41 நாட்கள் விரதம் இருந்து மலையின் உச்சியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் மாதவிலக்கு நிற்காத பெண்கள் கோவிலுக்கு அத்தனை கடுமையான விரதம் இருந்து செல்லமுடியாத நிலையில் இருப்பதால் அவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் வாதாடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள்,”கடந்த 1,500 ஆண்டுகளாக எந்த பெண்ணும் இந்த கோவிலுக்குள் போகவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதாவது காட்ட முடியுமா? கோவிலுக்கு பெண்கள் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையாகும். அவர்கள் போகலாம் அல்லது போகாமலும் இருக்கலாம். ஆனால் அவர்கள் போகவேண்டும் எனும்போது எந்த அடிப்படையில் அவர்களை தடுக்க முடியும்? வயது, பாலினம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் அதிகாரம் இருந்தால் ஒழிய, அவர்களை கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது.”என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பாக கேரள அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் விசாரணையை ஜனவரி 18–ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.