March 31, 2023

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!.

பரிமலை ஐயப்பன் கோயியில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடைபெற்றது. மற்ற விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இன்று பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் கோயிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.மீண்டும் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மகரவிளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஊர்வலமாக 12ஆம் தேதி புறப்படும்.

15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை படி பூஜை உட்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 20ஆம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்துக்குப் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. 31ஆம் தேதி முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எருமேலி கோழிக்கடவில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தரிசனத்துக்கு வரும்போது கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.