September 25, 2021

சட்ட மன்றமும்… மீடியா மன்றமும்…! ஆன் த ஸ்பார்ட் ரிப்போர்ட்

தமிழக சட்டமன்றம் வழக்கம்போல 10 மணிக்கு தொடங்கியது.

தென்காசி தொகுதியில் மின்சக்தி பூங்கா அமைக்கப்படுமா என முதல் கேள்வியை கேட்டிருந்த உறுப்பினர் சரத்குமார் அப்போது அவையில் இல்லை.

சட்டமன்றத்தின் உள்ளே கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது.

மீடியா மன்றம் அருகே வழக்கம்போல காரில் வந்து இறங்கினார் திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக உறுப்பினர்கள் புடை சூழ சிரித்தபடி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு போய் அமர்ந்தனர்.

வெளியே போலீசார் கயிறு பிடித்து அலார்ட் ஆனார்கள்…

முதல்வர் வருகை உறுதியானது…
TN-Assembly-
போலீசார் அலார்ட் ஆன சில நிமிடங்களில் முதல்வர் வந்து சேர்ந்தார்…

கேள்வி நேரம் முடிந்ததும் வழக்கம்போல முதல்வர் 110வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்…

அந்த அறிவிப்புகள் முடிந்ததும் முதல்வரை வாழ்த்தி அதிமுக ஆதரவு கட்சித்தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தார் கள்…அனைவரின் வாழ்த்தையும் முதல்வர் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

சபாநாயகரும் தன் பங்குக்கு முதல்வரை வாழ்த்த தொடங்க…

அவைக்குள் இருந்த திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலின் டிரேட் மார்க் சிரிப்புடன் அருகில் அமர்ந்திருந்த துரைமுருகனிடம் ஏதோ கூறியபடி சபாநாயகரின் வாழ்த்து வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
சபாநாயகர் வாழ்த்தி முடித்ததும்… அவையில் இருந்து முதல்வர் ஜெ., வெளியேறினார்…

முதல்வர் வெளியேறியதும்… மீண்டும் கேள்வி இல்லா கேள்வி நேரத்தில் பல உறுப்பினர்கள் எழுந்து பேசுவதற்கு அனுமதி கேட்டார்கள்… ஒரு சிலருக்கு அனுமதி அளித்த சபாநாயகர்… அவர்கள் பேச ஆரம்பித்ததும்… அதை எல்லாம் அனுமதிக்க முடியாது… அமருங்கள் என அடுத்த உறுப்பினரை பேச அழைத்தபடி இருந்தார்.
அப்போது திடீரென திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்திருக்க… அதை பார்த்த சபாநாயகர் … ‘‘என்ன துரைமுருகன் சொல்லுங்க…’’ என திமுக உறுப்பினர் துரைமுருகனோ சிரித்தபடியே ‘‘நா வெளியே போக எழுந்தேன்’’ என சொன்னதும்… அவையே சிரிப்பலையில் மூழ்கியது…

அவர் வெளியேறிய கொஞ்ச நேரத்தில் மு.க.ஸ்டாலினும் அவையில் இருந்து அறைக்கு திரும்பினார்…
சட்டமன்றத்துக்குள் இவை நடந்தபோது…


வெளியே மீடியா மன்றத்தில் பரபரப்பு கூடியது… கேமராக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன… போட்டோகிராபர்கள் வாசலுக்கு வெளியே தயார் ஆனார்கள்…

அதேநேரம் அவைக்கு உள்ளே அமர்ந்திருந்த திமுக உறுப்பினர்கள் ஒருவர் ஒருவராக வெளியே வந்து திமுக
உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்கள்.

அவைக்கு வெளியே போலீசார் வழக்கம்போல கயிறு இழுத்து அலார்ட் ஆக… முதல்வர் சட்டசபையில் இருந்து புறப்பட தயார் ஆகிறார் என்பது தெரிந்தது…சில வினாடிகளில் முதல்வரின் வாகன கான்வாய் அணிவகுப்பு புறப்பட… சிரித்தபடி கட்சியினரின் வாழ்த்து கோஷங்களை கேட்டபடி முதல்வர் ஜெ., சட்டசபையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

முதல்வரின் கார் புறப்பட்ட சில வினாடிகளில் திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலினை சுமந்து செல்ல அவருடைய கார் மீடியா மன்றம் அருகே வந்து தயாராக நிற்க… மீண்டும் மீடியா மன்றம் பரபரப்பானது…
ஏற்கனவே, சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு குறித்து திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க.ஸ்டாலினின் சகோதரருமான அழகிரியின் பேட்டி குறித்தும், 170 இடங்களில் திமுக பேட்டியிடும் என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவனின் பேட்டி குறித்தும் கேள்வி கேட்டு பரபரப்பு பதில்களை மு.க.ஸ்டாலினிடம் பெறலாம் என மீடியா மன்றத்தில் செய்தியாளர்கள் காத்திருக்க…

திமுக அறையில் இருந்து வந்த மு.க.ஸ்டாலினிடம் வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பு மிஸ் ஆகியிருந்தது…
எப்போதும் மீடியா மன்றம் நோக்கி வரும் மு.க.ஸ்டாலின்… ஏனோ வாசலில் இருந்து வெளியே வந்ததும் மீடியா மன்றம் பக்கம் கூட பார்வையை திருப்பாமல் வேக வேகமாக காருக்கு சென்றார்… கூடவே திமுக உறுப்பினர்கள் அரண் போல சென்றதால் செய்தியாளர்கள் யாரும் அவரிடம் கேள்வி எதையும் கேட்க முடியாத சூழல் ஏற்பட்டது.
காரில் ஏறி அமர்ந்த சில நொடிகளில் கார் வேகம் பிடித்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது…
எப்போதும் மீடியா மன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பேட்டி அளிக்கும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதால் இன்றைய கூட்டத்தில் பங்கு பெறவில்லை.
மொத்தத்தில் வழக்கமான நிகழ்வுகளோடு வேறு எந்த பரபரப்புகளும் இல்லாமல் இன்றைய சட்டமன்ற கூட்டம் நடந்து முடிந்தது…

பகீர் குற்றச்சாட்டுக்கள்… பரபரப்பு பேட்டிகள்… கோஷங்கள்… வெளிநடப்புகள் என எந்த சம்பவங்களும் கிடைக்காமல் மீடியா மன்றமும் தன் பணியை முடித்துக் கொண்டது..!

சட்டசபையில் அமைச்சரின்
மைனாரட்டி அரசு விளக்கம்

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியபோது கடந்த திமுக அரசை மைனாரட்டி திமுக அரசு என குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து கூச்சல் போட்டனர்.

அதோடு, அமைச்சர் பேசிய வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூச்சல்போட்டனர்.
அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கிட்டு ‘‘ மைனாரட்டி அரசை மைனாரட்டி அரசு என்றுதான் சொல்ல முடியும். ஒரு அரசு முழு மெஜாரட்டி பெற வேண்டுமானால் 117 இடங்களுக்கு மேல் பெற வேண்டும். ஆனால் நீங்கள் பெற்றதோ 90தான். கூட்டணியாக இருந்தாலும் கூட்டணி அரசு என்று சொல்லி யிருக்கலாம். நீங்களோ கூட்டணி கட்சியிடம் ஆதரவு கடிதம் மட்டும் பெற்றுக் கொண்டு மைனாரட்டியாக ஆட்சி நடத்தினீர்கள். அதனால் நீங்கள் மைனாரட்டி அரசுதான்… மைனாரட்டி அரசுதான் இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.அதோடு, இதேபோல இதே அவையில் கடந்த திமுக அரசை மைனாரட்டி அரசு என பலமுறை பேசியிருக்கிறோம். அப்போதெல்லாம் கோவப்படாத உறுப்பினர்கள் இப்போது ஏன் அப்படி கோபப்படுகிறார்கள் என்பது புரியவில்லை’’ என்றார்.

அமைச்சரின் விளக்கத்திற்கு பிறகு திமுக உறுப்பினர்கள் எதுவும் பேசமால் அமைதியானார்கள்.
இந்த பரபரப்பு கூச்சல் நடக்கும்போது அவையில் திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த உறுப்பினர் துரைமுருகன் இருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோடங்கி