September 20, 2021

சசி பெருமாள் படுகொலை குறித்து நீதி விசாரணை ? ஹைகோர்ட்டில் வைகோ வாதம்!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் டாஸ் மாக் கடையை அகற்றக் கோரி ஜூலை 31 ஆம் தேதி காந்தியவாதி சசிபெருமாள் அலைபேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தியபோது காவல்துறையினரும் தீ அணைப்புத் துறையினரும் அவரை வலுக்கட்டாயமாகக் கயிறுகளால் கட்டிக் கீழே இறக்கியபோது, அந்தக் கயிறு அவரது கழுத்தை இறுக்கியதால் அவர் சாகடிக்கப்பட்டார். எனவே, இது குறித்து ஹை கோர்ட் நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் சசிபெருமாள் மகன் விவேக் தொடுத்த வழக்கில் வைகோ தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொண்டு வாதாடினார்.
vaiko sasi body
நீதிபதி சுந்தரேஸ் அமர்வில் வைகோ எடுத்துரைத்த வாதம் இதுதான்: ”உண்ணாமலைக்கடை ஊரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 2012 அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியார் பிறந்த நாள் அன்று மதுபோதைக்கு எதிர்ப்பான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. 2013 ஜனவரி 12 ஆம் தேதி, அந்த அமைப்பினர் என்னைச் சந்தித்து கோரிக்கை கொடுத்து போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர். நானும் ஆதரவு அளிப்ப தாகக் கூறினேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தேன். சசிபெருமாள் அவர்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வந்தார்.

2013 பிப்ரவரி 24 ஆம் தேதியன்று சென்னை ஹைகோர்ட் உண்ணாமலைக் கடை டாஸ்மாக் கடையை அகற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தது. ஆனால், தமிழக அரசு அந்த ஆணையைச் செயல்படுத்தவில்லை. எனவே அந்தப் பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த 2015 ஜூன் 30 ஆம் தேதியன்று உண்ணாமலைக்கடையில் நடைபெற்ற உண்ணா விரத அறப்போராட்டத்தில் சசிபெருமாளும் கலந்து கொண்டார். ஒரு மணி நேரத்திற்குள் காவல் துறையினர் சசிபெருமாள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து உண்ணாவிரதப் பந்தலைப் பிய்த்து எறிந்தனர். மண்டபத்தில் அடைக்கப்பட்ட போதும் போராட்டக்காரர்கள் உண்ணா விரதத் தைக் கைவிடவில்லை. மறுநாளும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. அதன்பிறகு, டாஸ்மாக் கடையை ஜூலை 15 ஆம் தேதிக்குள் அகற்றி விடுவதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத் தைக் கைவிட்டனர்.

ஆனால், ஜூலை 25 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே போராட்டக் காரர்கள் அறிவித்தபடி ஜூலை 31 ஆம் தேதி சசிபெருமாள் அவர்கள் போராட்டத்தை நடத்திட 130 அடி உயரம் உள்ள அலைபேசிக் கோபுரத்தில் ஏறி உச்சிக்குச் சென்றார். காலை எட்டரை மணி முதல் நெருப்பு வெய்யிலில் அவர் அங்கே நின்றுகொண்டு இருந்தார். அப்போது, காவல்துறை வருவாய்த் துறை அதிகாரிகள் அவரைக் கேலியும் பரிகாசமும் செய்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடையை அகற்றி விடுகிறோம் என்று பகல் 12 மணிக்குள் அதிகாரிகள் சொல்லி இருந்தால் அவர் கீழே இறங்கி இருப்பார். ஆனால், பிற்பகல் 1.30 மணிக்குத் தான் டாஸ்மாக் கடையை அகற்றி விடுகின்றோம் என்ற அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு தீ அணைப்புத் துறை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அலைபேசி கோபுரத்தின் மீது ஏறி, சசிபெருமாள் உடலில் கயிறைக் கட்டி ஆடு மாடுகளை இழுப்பது போலப் பலவந்தமாக அவரைப் பிடித்துக் கீழே இழுத்தனர். இதில் கயிறு கழுத்தில் இறுக்கியதால் அவர் கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கழுத்தில் கயிறு இறுக்கியதால் இறந்து போனார் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. அவரது உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிபெருமாள் மரணம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் நான் ஆசாரி பள்ளம் மருத்துவ மனைக்கு விரைந்தேன். அங்கே நான் பார்த்தபோது அவரது உடை முழுதும் இரத்தத் தில் நனைந்து இருந்தது. ‘சசிபெருமாளை அதிகாரிகள் சாகடித்து விட்டனர்’ என்று செய்தியாளர்களிடம் சொன்னேன்.

இரவு ஏழு மணி அளவில் சசிபெருமாள் மகன் விவேக் என்னிடம் தொலைபேசியில் பேசினார். ‘இன்று இரவிலேயே அப்பா உடலைப் போஸ்ட்மார்ட்டம் செய்து விடு வோம் என்று கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்’ என்று சொன்னார்.

நான் உடனே காவல்துறை கண்காணிப்பாளரையும், மாவட்ட ஆட்சியரை என் உதவியாளர் மூலம் தொடர்பு கொண்டு, ‘குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல், மாலை ஆறு மணிக்கு மேல் போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது என்ற விதியை மீறிச் செய்தால் நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவேன்’ என எச்சரித்ததால், அந்த முயற்சி யைக் கைவிட்டனர். காவல்துறை எதற்காக இப்படி அவசரப்பட வேண்டும்?

சசிபெருமாள் கயிறு எடுத்துக் கொண்டு போனார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். உண்மைதான். தான் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக, கொச்சைக் கயிறு எடுத்துக் கொண்டு போனார். ஆனால் அவரது கழுத்தை இறுக்கியது அந்தக் கொச்சைக் கயிறு அல்ல. காவல்துறையினர் கொண்டு போன கயிறுதான்.

அன்று அங்கே நடந்தவை அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு ஆகி இருக்கின்றது. நான் ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று, உண்ணாமலைக் கடைக்குச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்து உண்மை அறிந்தேன். தமிழக அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால்தான் சசிபெருமாள் சாகடிக்கப்பட்டார். எனவே அவரது மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்”என்று வைகோ தமது வாதத்தை எடுத்துரைத்தார்.

இதன்பின்பு வழக்கு விசாரணை அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.