சசிகலா, இளவரசிக்கு சிறையில் வழங்கப்பட்டு வந்த கூடுதல் வசதிகள் அனைத்தையும் ரத்து !
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் தனி அறையுடன் 5ஸ்டார் ஓட்டல்போல வசதிகள் செய்து தரப்படுவதாகவும், இதற்காக சிறை அதிகாரிகளுக்குரூ.2 கோடி வரை லஞ்சம் கைமாறியது என்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இந்தவிவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிறைத்துறை டி.ஜி.பி. முதல் சிறை சூப்பிரண்ட், ஜெயிலர்கள் வரை மாற்றம் செய்யப்பட்டனர். இது பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது.
குறிப்பாக சிறையில் சசிகலா மற்றும் விஐபிக்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் பற்றியே விசாரித்த இந்தக்குழு அதற்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மையே என கூறியிருப்பதாக தெரிகிறது. அதே சமயத்தில் ரூ.2 கோடி லஞ்ச புகாருக்கு ஆதாரம் எதுவும் கிடைக்க வில்லை என்றும் கூறி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரூ.2 கோடி லஞ்சப் புகார் பற்றி தனியாக விசாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த அறிக்கையைத்தொடர்ந்து சசிகலா, இளவரசிக்கு சிறையில் வழங்கப்பட்டு வந்த கூடுதல் வசதிகள் அனைத்தையும் ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மற்ற கைதிகள் போலவே சாதாரண அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை உணவையே அவர்களும்சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது வரை தனி அறையில் சமைக்கப்பட்ட உணவையே அவர்கள் சாப்பிட்டு வந்தனர், அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. அத்துடன் இரண்டாவது தளத்தில் இருந்த சசிகலா,இளவரசி ஆகியோர் முதல்தளத்தில் உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இனி வருங்காலத்தில் சசிகலா உள்ளிட்ட எந்த ஒரு கைதிக்கும் விவிஐபி சலுகை அளிக்கக் கூடாது. சசிகலா தண்டனைக்காலம் முடியும் வரை சாதாரண கைதி போலவே நடத்தப்பட வேண்டும். அவரை சந்திக்க வருகிற பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்என்றும் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.வினய்குமார் கமிட்டி அறிக்கை யில் கூறப்பட்டுள்ள பிற பரிந்துரைகளை நிறைவேற்ற வும் அரசு உத்தரவிட்டுள்ளது.