April 14, 2021

க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்!

தமிழ் பதிப்புலக முன்னணி பதிப்பாளரும் க்ரியா பதிப்பக ஆசிரியருமான ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப் பதிப்புலகத்தின் மூத்த ஆளுமையாக கருதப்பட்டவர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். தனது க்ரியா பதிப்பகம் மூலம் தற்கால தமிழுக்கான அகராதியை வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பதிப்புலகத்தில் பெரும் சாதனையாகக் கருதப்பட்ட இந்த அகராதி, எக்காலத்துக்கும் ஏற்ற பயன்படும் அகராதியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் தற்கால தமிழ் அகராதியை மேலும் விரிவாக்கி மூன்றாவது பதிப்பாக சமீபத்தில் படுக்கையிலிருந்தபடியே அதனை வெளியிட்டார். படுக்கையில் இருந்தபடியே அதற்கான பணிகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் மேற்கொண்டு வந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை எஸ்.ராமகிருஷ்ணன் (75) காலமானார். வருடைய மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.ராமகிருஷ்ணனின் தாய்மொழி தெலுங்கு மொழியாக இருந்தாலும் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தன்னை ஒரு தமிழராகவே கருதினார்.

லயோலா கல்லூரியில் சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் விளம்பரத்துறையில் பணியாற்றினார். பின்னர் தனது 30-வது வயதில் பதிப்புலகுக்கு வருகை தந்தார். அதன்பின் க்ரியா பதிப்பகத்தை 1974-ம் ஆண்டில் எஸ்.ராமகிருஷ்ணன் தொடங்கினார். சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின்கீழ் இப்பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 1978-ம் ஆண்டிலிருந்து இந்தி, வங்கமொழி, கன்னடம், என பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது.

மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் திருத்தப்பட்ட 3-ம் பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.