October 20, 2021

கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்ப்போம்!

உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் போன்ற சூழலால் தற்போது கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன. அதற்கேற்ப மக்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவருகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய, பெரிய நகரங்களில் பெருகிவரும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வுக் கலாசாரத்தைத் திட்டமிட்டு வளர்க்கின்றன.
14- loans
மின்னணு சாதனங்களில் தொடங்கி மின்னும் தங்க நகைகள் வரையில் இப்படி தவணையில் விற்கப்படுகிறது. “0 சதவீதம்’ வட்டி, செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது, சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை (இ.எம்.ஐ) என்ற முறையிலும் கிடைக்கும் என்ற அறிவிப்பை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகின்றனர்.

இதுபோன்ற விளம்பரங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பத் தலைவரின் மனதிலும் “எப்படியாவது இதை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பணத்தை முன்தொகையாகப் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகைக்கு நுகர்வோரைக் கடன் சுமைக்குள் தள்ளுகின்றனர்.

இதற்காக நிரப்பப்படாத காசோலைகளைக் கொடுத்து, ஒப்பந்தத் தாளில் எழுதியிருப்பதைப் படித்துக்கூட பார்க்காமல் அவசரத்தில் கையெழுத்திடுவார்கள். அதன் பின்னர், பொருளை நமக்கு அளிக்கும்போது ஏதோ பெரிய லட்சியத்தை அடைந்தார்போல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அடுத்த மாதமே அது நீடிக்காது; காரணம் அடுத்த தவணை வந்துவிடுமே? இதற்காக குடும்ப பட்ஜெட்டில் தவணைக்கும் ஓர் இடம் ஒதுக்கவேண்டும்.

மாதச் சம்பளத்தில் தவணைக்கு ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டால் மீதிக்கு என்ன செய்வது என்று திட்டமிடுவதே கிடையாது. எப்படியோ, தவணை முடியும்வரை அந் நிறுவனத்திற்கு நாம் “கௌரவக் கடனாளியாக’த்தான் காட்சியளிப்போம்.

தவணை முறையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்கும்போது இருக்கும் மதிப்பு, வீட்டிற்கு வந்தவுடன் பாதியாகக் குறைந்துவிடுகிறது. இரு சக்கர வாகனம் வாங்கும்போது வாகனத்தின் மீதான மோகத்தின் காரணமாக அவர்கள் அளிக்கும் ஒப்பந்தப் பத்திரத்தை படித்துக்கூட பார்க்காமல் கையெழுத்திடுகிறோம். இதனால் ஏதோ ஒரு மாதம் தவணைத் தொகையைக் கட்டமுடியாமல் போனால், ஆட்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கும்போது வெட்கித் தலைகுனிந்து நிற்கும்நிலை ஏற்படுகிறது.

பொருள்களை வாங்கியவர்கள் தவணைத் தொகையை செலுத்தாதபோது அந் நிறுவனத்தின் ஆள்கள் மூலம் பொருளையோ, வாகனத்தையோ எடுத்துச்செல்லும் நிலை ஆங்காங்கே காணப்படுகிறது.

இதேபோன்று சில தனியார் வங்கிகள் தனிநபர் கடன், வியாபாரக் கடன், வீட்டுக் கடன், கார் வாங்கக் கடன் என பலவகைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடன்களை வாரிக் கொடுத்துவிட்டு, அவர்களை 12, 24, 36, 48 என்று மாதக் கணக்கில் கடனாளியாகவே வைத்திருக்கின்றனர்.

இதுபோன்ற கடன்களை அடைக்க தவணைக்கென நமது வருமானத்தில் அதிகபட்சம் 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

மாதச் சம்பளக்காரர்கள் தங்களுடைய மாதாந்திர வருமானமும் செலவும் இப்படியே இருக்கும் என்ற அனுமானத்தில் தவணைகளைத் திட்டமிட்டு வாங்குவதும் உண்டு. குடும்பத்தில் யாருக்காவது பெரும் தொகையை மருத்துவத்துக்காகச் செலவிட நேர்ந்தாலோ வேறு எதிர்பாராத பெருஞ்செலவு ஏற்பட்டாலோ தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதில் நிச்சயம் நெருக்கடி ஏற்படும்.

இதுபோன்று தவணையில் பொருள்களை வாங்கி, மகிழ்ச்சியை இழப்பதைக் காட்டிலும் சிறுகச்சிறுக சேமித்து, அதன்மூலம் தேவையானவற்றை வாங்கி மகிழ்வோம்…! கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்த்து தலைநிமிர்ந்து நிற்போம்…!

ஆர். குணசேகரன்