September 18, 2021

கோயில்களில் சினிமா ஷூட்டிங் நடத்தினால் ‘கிரிமினல்’ ஆக்‌ஷன்! அறநிலையத்துறை எச்சரிக்கை

இந்து அற நிலைய கட்டுப்பட்டில் உள்ள கோயில்களில் சினிமா ஷூட்டிங் நடத்தினால் ‘கிரிமினல்’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
cine sep 4
திரைப்படத்தில் கோயில் காட்சியை வைத்தால் அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்த ‘சென்டிமென்ட்’ காரணமாக பெரும்பாலான பழைய திரைப்படங்களில் கோயில் காட்சிகள் இடம் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது, அந்த கோயிலின் புராதன சின்னங்கள் சேதமடைந்தன. கோயில் ஆகம விதிகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்தியதால் கோயில் வளாகம் அசுத்தமானது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோயில்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஒருமித்த குரல் பக்தர்களிடம் இருந்து எழுந்ததால், இந்து கோயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக தடை விதித்தது.

கோயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, திரைப்படத்துறையினர் கோயில் மாதிரி ‘செட்’ அமைத்து படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர். ஒரு சில திரைப்பட தயாரிப்பாளர்கள் கோயில் செட் அமைப்பதற்கு ஆகும் செலவுகளை கருத்தில் கொண்டு, திருவிடைமருதூர், திருப்புவனம், தஞ்சை உள்பட கிராமங்களில் உள்ள ஊர்களில் இந்து கோயில்களில் சினிமா படப்பிடிப்புகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தினர், “தமிழ்நாட்டில் 320 பெரிய கோயில்கள் உள்பட மொத்தம் 38 ஆயிரம் இந்து கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில்களில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு 15 ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. எனவே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதாக வெளி வரும் தகவல் தவறானவை.தினங்கள், தர்மகர்த்தாக் கள், ஊர் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தான் பெரிய திரை (சினிமா), சின்னத்திரை (நாடகம்) படபிடிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், நாங்கள் தலையிட முடியாது.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டாலும், ரகசியமாக படப்பிடிப்பு நடத்தி, அந்த காட்சி திரையில் வெளி வந்தாலும் சம்பந்தப்பட்ட திரைப்பட துறையினர் மீது ‘கிரிமினல்’ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்