September 26, 2021

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி யுவராஜ் சரண்!

கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் அந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு ஆகியவற்றில் போலீசாரால் 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த யுவராஜ் இன்று காலை நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
yuvaraj oct 11
கோகுல்ராஜ் கொலை வழக்கு, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்ற வாளியாகக் கருதப்படும் யுவராஜ் எங்கு இருக்கிறார்; எப்போது சரண் அடைவார் என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது. ஆனால், அவர் வெளியில் இருந்தபடி ஆடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை தொடர்பாகவும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

அதே சமயம் யுவராஜை தீவிரமாகத் தேடிவந்த சிபிசிஐடி போலீசார், சேலம் ஆவாரம் பாளையத்தில் உள்ள யுவராஜின் வீடு, சங்ககிரியில் உள்ள அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

அப்போது யுவராஜ் மனைவி பயன்படுத்திய செல்பேசி, உறவினரிடம் இருந்த செல்பேசி, யுவராஜின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், கணினியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை சிபிசிஐடி போலீஸார் எடுத்துச் சென்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், யுவராஜ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல் அனுப்பியிருந்தார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தார்.