November 29, 2021

கொரோனா காலம் முடியும் வரை குடிப் பக்கம் போகாதீங்க!

தமிழகத்திற்கும் கொரோனா வந்துவிட்டது என்ற செய்தி வந்தபோது என் நெருங்கிய நண்பன் ராஜகோபால், “இனிவரும் நாட்கள் கடினமானதாக இருக்கப்போகிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. இனி நம் சிந்தனை, செயல் எல்லாம் இந்த கொரோனா காலத்தை கடந்தும் நம் உயிரை தக்கவைத்துக்கொள்வது என்ற ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். உயிருடன் இருந்தால்தானே கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை சந்திக்க போகிறோம். இருந்தால் அப்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம். இப்போது அதைப் பற்றி எண்ண வேண்டாம்” என்றான்.

கொரோனா ஊரடங்கை தளர்த்தப்போகிறார்கள் என்ற தகவல் கசியத் தொடங்கியதும், என் அண்ணன் போன்றவரும் என் குழந்தைகளின் மருத்துவருமான டாக்டர் முருகன், தொலைப் பேசியில் அழைத்து, “இந்த சிக்கலுக்கு மருத்துவ உலகம் ஒரு தீர்வு கண்டுபிடிக்கும்வரை, உயிரை தக்கவைத்துக்கொள்வது என்பதில் மட்டும்தான் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வருமானம், வளர்ச்சி குறித்தெல்லாம் எண்ணி மன சஞ்சலம் அடையக்கூடாது. கொரோனா காலம் முடிந்தபிறகு அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். கவனமாக இருங்கள்” என்றார்.

சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் மா யுன் சமீபத்தில், “வணிகத்தில் இருப்பவர் களுக்கு என் அறிவுரை; இந்த 2020 ஆண்டு நாம் உயிரோடு பிழைப்பதற்கான ஆண்டு மட்டுமே. உங்கள் கனவுகளைப் பற்றியோ திட்டங்களைப் பற்றியோ பேசவே பேசாதீர்கள். எப்படியாவது உயிர்பிழைக்கப் பாருங்கள். உங்களால் உயிரோடிருக்க முடிந்தால், அதுதான் உங்கள் லாபம்; நீங்கள் இலாபத்தை ஈட்டிவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு குறைவுதான். எனவே, கொரோனாவா நாமா என ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற அலட்சியம் பலருக்கும் உருவாகி யிருக்கிறது. ஆனால், இதுவரையான வரலாறை வைத்து வரும் காலமும் இப்படித்தான் இருக்கும் என கணிக்க முடியாது. நம் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது கிருமியின் இயக்கம். பரவல் அதிகமாகி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடும்போது, இப்போது நோயாளிகளுக்கு கிடைக்கும் பலமான கவனிப்புகள் கிடைக்காது; மருத்துவரை சந்திப்பதே சாத்தியமில்லாமல் போகலாம். போனில் மாத்திரை பெயரை கேட்டு, அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்னும் நிலைகூட வரலாம். இப்போதே ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை முன்னால் நோயாளிகளுடன் காத்திருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், ஊழல் செய்தும் நட்டக் கணக்கு எழுதியும், அரசின் லாபத்தை எல்லாம் சுரண்டி எடுத்துவிட்ட நம் ஆட்சியாளர்கள், இப்போது அரசை நடத்த வழியின்றி, மக்களை குடிக்க வைத்து கஜானாவை நிரப்ப திட்டமிடுகிறார்கள். தாங்கள் செய்வதன் அபாயத்தை உணர்ந்தே, தங்கள் மேல் நம்பிக்கைவைத்து ஆட்சியை ஒப்படைத்த மக்களை, கொள்ளை நோய் கூடாரத்துக்குள் தள்ளப் போகிறார்கள்.

குடிமகன்களுக்கு என் வேண்டுகோள் எல்லாம் இதுதான். உங்கள் குழந்தைகள், மனைவி, குடும்பத்தினர் எல்லாம் கொரோனாவுக்கு எதிரான தங்கள் உயிரை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் உங்களை சார்ந்திருக்கிறார்கள். அவர்களை அரவணைத்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் நீங்களே அவர்களுக்கு நோயை பரப்புபவராக ஆகிவிடக் கூடாது. நீங்கள் குடிக்க போகும் ஒவ்வொரு முறையும், கிருமி உங்கள் வீட்டுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். கவனமாக இருங்கள்.

உங்கள் நலனில் அக்கறை இல்லாத அரசும் ஆட்சியாளர்களும் வருமானம் இன்றி வருந்தட்டும். மதுபானக் கடைகளை புறக்கணியுங்கள்.

கொரோனா காலம் முடியும்வரை காத்திருங்கள்; குடித்துக் கொள்ளலாம்.

தளவாய் சுந்தரம்