March 26, 2023

கைதானோர் தங்களது சொத்துகளை எழுதிக் கொடுத்தால் விடுதலை! – சவுதி அதிரடி

சவுதியின் அதிகாரமிக்க பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பல இளவரசர்கள், அமைச்சர்கள்,தொழிலதிபர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1000 கோடி டாலர் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் விடுதலைக்காக சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என்று சவுதி அரசு நிபந்தனை விதித்துள்ளது. அந்த நிபந்தனையை ஏற்று சிலர் தங்கள் வங்கிகளில் உள்ள பணம் மற்றும் பங்குகளை ஒப்படைத்து வருவதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த செய்தி உண்மைதானா என்பதை சவுதி அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்த செய்தி குறித்த எந்த தகவலும் அரசு இதுவரை வெளியிடவில்லை. கடந்த 2015ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி அரேபியா பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஊழலும் கருப்புப் பணமும்தான் என கூறப்பட்டது.

அதன் காரணமாக சவுதி அரேபியாவின் செல்வந்தர்கள் தங்கள் பணத்தை சொந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டும். வெளிநாடுகளில் உள்ள முதலீடுகளை தாய்நாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் தான் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஊழலுக்கு எதிராக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.