October 16, 2021

கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ! –

“பீட்ஸாவும் பர்க்கரும் சாப்பிடும் இளைய தலைமுறையினர் பலருக்கும் கேழ்வரகு தொடங்கி சோளம், உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, கொள்ளு, எள், சோளம், மக்கா சோளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தானிய வகைகள் எதையும் தெரிவதில்லை.. நான் காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா, மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் கோவாவில் பயிரிடப்படுகிறது.
iddly jan 11
இந்த கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக் கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர் கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் –

கேழ்வரகு சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடும், வாய் துர்நாற்றம் எடுக்காமலும் இருக்கும். ஆகவே தான் அக்காலத்தில் எல்லாம் மக்கள் காலை வேளையில் கேழ்வரகை கஞ்சி போன்று கரைத்து சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது கேழ்வரகு சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம், கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாதது தான். மேலும் கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், இதனை இட்லிகளாக ஊற்றி சாப்பிடலாம்.

இங்கு கேழ்வரகை கோதுமை ரவையுடன் சேர்த்து எப்படி இட்லி செய்வதென்று பார்ப்போமா…

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1 கப்
கோதுமை ரவை – 1 கப்
கெட்டியான தயிர் – 3 கப்
கேரட் – 1 கப் (துருவியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
முந்திரி – சிறிது
வேர்க்கடலை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை ரவை, துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் தயிர் ஊற்றி, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து தாளித்து, கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை, இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ரெடி!!!

குறிப்பு: வேண்டுமானால், இத்துடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.