October 18, 2021

கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரைக்கு போக பர்மிஷன் கிடைச்சாச்சு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேதார்நாத், பத்ரிநாத் புனித யாத்திரை வரும் 5ம் தேதி முதல் மீண்டும் தொடங்க முதல்வர் விஜய்பகுகுணா தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த செப்டம்பர் 11 ம் தேதி முதல் கேதார்நாத் கோயிலில் பூஜைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 - kedrinath.mini
உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனாத்ரி ஆகிய 4 புனித யாத்திரைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோடை காலத்தில் தொடங்கி பனிக்காலம் வரும் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் இந்தியா முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தொடர்ந்து இங்கு கனமழை பெய்தது. இதில் கங்கை மற்றும் யமுனை நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. சுமார் 3 லட்சம் பக்தர்கள் ஆங்காங்கு சிக்கினர்.
காட்டாற்று வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடித்து செல்லப்பட்டனர். சுமார் 6 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்தப் பேரழிவுக்கு பின்னர் கேதார்நாத் உள்ளிட்ட 4 யாத்திரைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் கங்கோத்ரி மற்றும் யமுனாத்ரி யாத்திரைகளை மீண்டும் தொடங்க மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், மற்றும் தங்கும் வசதிகள் மீண்டும் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் சீரமைப்பு, மற்றும் கேதார்நாத், பத்ரிநாத் செல்லும் பாதைகள் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த பாதைகள் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரைகளை மீண்டும் தொடங்குவது குறித்து முதல்வர் விஜய்பகுகுணா தலைமையில் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் வரும் 5ம் தேதி மீண்டும் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. கேதார்நாத்தில் சுமார் 100 பயணிகள் வரை தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக வழியில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் முன் அனுமதி பெற்று ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Yatra to Kedarnath-Badrinath to resume on October 5-
*******************************************************************
Pilgrimage to the famous Himalayan shrines of Kedarnath and Badrinath, suspended since the mid-June calamity in Uttarakhand, will resume on October 5 with the start of the Navratras. The decision was made at a meeting of Kedarnath-Badrinath temple committee chaired by Chief Minister Vijay Bahuguna on Monday.