September 20, 2021

கெஜ்ரிவாலை கோமாளியாக்கப் போகும் நாள் தூரத்தில் இல்லை!

பாஜகவினர் அதிகமாக கெஜ்ரிவாலை விமர்சிக்கிறார்கள்,ஏனென்றால் ஆம் ஆத்மி பாஜகவுக்கு எதிராக வளர்கிறது என்கிறார்கள் பலர். இப்படிச் சொல்பவர்கள்தான் முதன்முதலில் அண்ணா ஹசாரேயின் போராட்டத்தையும், கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசத்தையும் ஹிந்துத்துவ மறைமுகச் செயல்பாடு என்று சொன்னவர்கள். ஆனால் தீவிர ஹிந்துத்துவர்கள் முதலிலிருந்தே ஹசாரேயின் போராட்டத்தை காங்கிரஸின் மறைமுகச் செயல்பாடு என்றார்கள். (நான் அதை ஏற்கவில்லை.) இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எல்லாரும் பார்க்கலாம். ஆம் ஆத்மியை காங்கிரஸின் மறைமுக அரசியல் என்று சொல்ல முடியுமோ முடியாதோ, நிச்சயம் ஹிந்துத்துவ அரசியல் மறைமுகச் செயல்பாடு என்று சொல்லவே முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது.இப்படி ஹிந்துத்துவத்தின் அரசியல் செயல்பாடுகள் அத்தனையுமே எதிர்க்கட்சிகளாலும் அவர்களால் பணம் கொடுக்கப்படும் ஊடகங்களாலும் பொய்யாகவும் தவறாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வெளிவருவதற்காக, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் ஹிந்துத்துவர்கள் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தை எதிராளிகள் திணித்துவிடுகிறார்கள். இந்த முறை அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே முழுமூச்சான எதிர்ப்பு. அதோடு கெஜ்ரிவாலின் தொடர் பொய் நாடகத்தை வெளிப்படுத்திக் காட்டவேண்டிய கட்டாயம்.
Arvind Kejriwal funny Picture
கெஜ்ரிவால் என்பதை மறந்துவிட்டுப் பார்த்தால், புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் அரசியல் செயல்பாட்டை யாருமே எதிர்க்கப் போவதில்லை. ஏனென்றால் இன்று ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு கட்சியும் ஊழலற்ற ஆட்சி என்பதைத்தான் கோஷமாகக் கொண்டிருக்கிறது. எனவே ஊழலற்ற ஆட்சி என்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அதை யார் சொல்கிறார்கள் என்பதில் உள்ளது பிரச்சினை. அதேபோலத்தான் கெஜ்ரிவால் முன்வைக்கும் கருத்துகளும்.

எந்த ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டாலும் அதன் கொள்கை என்ன, ஒவ்வொரு பிரச்சினையிலும் அதன் நிலைப்பாடு என்ன என்று கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கும் அரசியல் நோக்கர்கள் எல்லாம் கெஜ்ரிவாலிடம் அக்கேள்வியைக் கேட்பதில்லை. ஏன்? மிக எளிதான காரணங்கள். மோடி எதிர்ப்புக்கு காங்கிரஸ் ஒன்றே வழி என்றிருந்த நிலையில், பலவீனமாக காங்கிரஸ் பல்லைக்காட்டிக்கொண்டிருந்த நிலையில், ஊடகங்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் இந்த கெஜ்ரிவால். இவர் இல்லை என்றால் இந்த ஊடகங்களால் மோடி எதிர்ப்பை செய்யவே முடியாது என்ற நிலை உருவாகியிருக்கும். என்னதான் ஏமாற்றுக்காரர்களாய் பெரும்பாலான ஊடகக்காரர்கள் இருந்தாலும், அவர்களால்கூட மோடி எதிர்ப்பை முன்வைத்து காங்கிரஸை ஆதரிக்கமுடியவில்லை. எனவே கெஜ்ரிவாலைப் பிடித்துக்கொண்டார்கள்.

கெஜ்ரிவாலும் ஊடகங்களுக்கு இணையான பரபரப்பு அரசியலை நாள்தோறும் அரங்கேற்றிக் கொண்டிருந்தார். பதவி வேண்டாம் என்றார். காங்கிரஸ், பாஜக ஆதரவு வேண்டாம் என்று பாவப்பட்ட குழந்தைகள் மீது சத்தியம் செய்தார். கட்சியிலிருந்து ஒருவர் காஷ்மிர் விஷயம் பற்றிச் சொன்ன கருத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் விழித்தார். டெல்லியில் பெண்கள் பாதுகாப்புப் பற்றி மேடையெல்லாம் பேசியவர், தன் கட்சியைச் சேர்ந்தவர் ஒரு பெண்ணை நடத்திய விதத்தில் பாரம்பரிய அரசியல்முறைகளைக் கடைப்பிடித்து அவரைக் ‘கண்டித்தார்.’ இதையெல்லாம் இன்னொரு அரசியல்வாதி செய்திருந்தால், கிழித்து தோரணம் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள் ஊடகக்காரர்கள். செய்தது கெஜ்ரிவால் என்பதால், அவரை விட்டால் ஊடக அளவில் மோதி எதிர்ப்புக்கு ஆளில்லை என்பதால், இவையெல்லாம் பெரிய விஷயமாக இல்லாமல் போய்விட்டது. வேறெந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும் பரபரப்பு அரசியலைச் செய்தால் அதை ஸ்டண்ட் என்று வர்ணிக்கும் ஊடகங்களும் மோடிஎதிர்ப்புநடுநிலைஊடகநோக்கர்களும் வாய்ப்பொத்தி அந்த கெஜ்ரிவால் ஸ்டண்ட்டையெல்லாம் ‘ஆஹா பேஷ் பேஷ்’ அரசியலாக்கினார்கள்.

கெஜ்ரிவாலின் எளிமை உலகப்பிரசித்தி பெற்றதாக்கப்பட்டது. எப்பேற்பட்ட எளிமை? நாட்டு மக்களை எப்போதும் அவதிக்குள்ளாக்கும் எளிமை அது. ஒரு முதல்வர் மக்கள் நெருக்கடி நிறைந்த இடத்திலிருக்கும் வீடு ஒன்றில் அதுவும் சாதாரண அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார் என்பது நன்றாக எடுபடும் ஸ்டண்ட். அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார் கெஜ்ரிவால். இந்த ஊடகங்களும் அவர் பின்னே அலைந்தன. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு எத்தனை இன்னல் என்று யாருமே கேட்கவில்லை.

கெஜ்ரிவால் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஊடகங்கள் இதனைப் பிரமாதப்படுத்திவிட்டன. நாளை யாராவது ஒரு தீவிரவாதி கெஜ்ரிவாலைக் கடத்தினால் அதற்கு யார் பொறுப்பு? அவரையும் அவரைச் சுற்றியுள்ள மக்களையும் பிணைக் கைதிகளாக்கினால் அவர்களுக்கெல்லாம் யார் பொறுப்பு? தன்னை பயங்கரவாதி கடத்தினாலும் பரவாயில்லை என்று கெஜ்ரிவால் சொல்லலாம். ஆனால் அதை எப்படி ஓர் அரசால் ஏற்கமுடியும்? ஏற்கமுடியாது என்று தெரிந்துதான் கெஜ்ரிவால் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

ஒரு கல்யாண வீட்டுக்குப் போய்விட்டு, ‘நான் எளிமையானவன். எனக்கு கல்யாணச் சாப்பாடு வேண்டாம். புழுங்கல் அரிசி கஞ்சிதான் வேண்டும்’ என்று கேட்பதன் பெயரா எளிமை? அப்படி ஒரு கஞ்சியை திடீரென்று ஒரு கல்யாண வீட்டில் தயாரிப்பது எப்பேற்பட்ட எரிச்சல் தரும் செயல்! இல்லை, எனக்கு அதுகூட வேண்டாம், நான் பட்டினியாக இருக்கிறேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு பட்டினியாக இருப்பதுதான் எளிமையா? இந்தப் பட்டினி என்பது மற்றவர்களுக்குத் தரும் மனவதைக்கு என்ன பதில்?

எளிமை என்பது இந்த இரண்டுமே இல்லை. ஆனால் இதை நகலெடுத்த எளிமைகளைத்தான் கெஜ்ரிவால் பார்த்துப் பார்த்துச் செய்தார். திடீரென்று இவர் மெட்ரோவில் வருவார். அவரைப் பாதுகாப்பதற்குள் பாதுகாப்பு வீரர்களுக்குத் தாவு தீர்ந்துவிடும். ‘வராத வராதன்னு சொன்னேன். வந்தான் செத்தான்’ என்று சொல்ல இதென்னா குருதிப்புனல் படமா? எந்த ஒருவரையும் அப்படி விடமுடியாது. எனவே அவர் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவரைப் பாதுகாப்பார்கள். ‘முடி வெட்ட வெட்ட வளருதுன்னுதானே சாமிக்கு மொட்டை போடறீங்க’ என்று தனிப்பட்ட அர்ப்பணிப்பைக் கேள்வி கேட்கும் கருப்புச் சட்டைக்காரர்கள், எதைக் கேட்கவேண்டுமோ அதை விட்டுவிட்டு, இந்த கெஜ்ரிவால் கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கெஜ்ரிவாலின் எளிமைக்கு இன்னொரு உதாரணம், ஒரு பேட்டிக்காக இந்தியா டுடே அமர்த்திக்கொடுத்த விமானத்தில் பறந்தது. உண்மை எளிமைவாதி, ‘அப்படி நான் பேட்டி கொடுத்து உலக சரித்திரமோ இந்திய வரலாறோ மாறிவிடப் போவதில்லை, நான் டிரயினில் வந்தபிறகு பேட்டி வைத்துக்கொண்டால் போதும்’ என்றல்லவா சொல்லிருக்க வேண்டும்? ஒருவேளை வேறு ஒருவரின் பணம் என்றால் எளிமை தேவையில்லையா? ஒருவேளை கெஜ்ரிவால் எளிமை என்பது ஒரு பிராண்டாகிறதா?

எளிமை என்பது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எப்படி செல்கிறீர்கள் என்பதில் இல்லை. அது அரசின் செயல்பாட்டில் உள்ளது. 49 நாள்களில் அதைச் செய்யவில்லை.

கெஜ்ரிவாலின் நாடகங்கள் தினம் தினம் வந்தவண்ணம் உள்ளன. மற்ற இந்திய அரசியல் கட்சிகள் செய்தனவற்றையே இவரும் செய்கிறார், கூடவே எளிமை புதுமை என்று சேர்த்துக்கொண்டு பேசுகிறார். ஊடகங்கள் மோதிக்காக இவரை ஏற்றிவிடுகின்றன.

லோக்பால் நிறைவேறவில்லை என்ற பொய்க்காரணம் சொல்லி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் லோக்பாலை இங்கே தாக்கல் செய்யலாமா வேண்டாமா என்பதற்கான விவாதத்தில்தான் தோற்றிருந்தார். அதற்கே ராஜினாமா. எளிமையான நேர்மையான ஆட்சிக்கு வேண்டியது உறுதி. எத்தனையோ இடர்கள் வரத்தான் செய்யும். அதை மீறித்தான் நீங்கள் நாட்டை முன்னேற்ற முடியும். இப்படி எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்வேன் என்ற விளையாட்டை வைத்து நாட்டை இன்னும் குட்டிச்சுவராக்க மட்டுமே முடியும். ஒருவகையில் கெஜ்ரிவாலின் தோல்வி, மாற்று அரசியல் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களை இன்னும் ஏமாற்றம் கொள்ளச் செய்யும். இனிவரும் புதிய நிஜமான மாற்று அரசியலின் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கச் செய்யும். நீண்டகால நோக்கில் கெஜ்ரிவால் சாதிக்கப்போவது இதைத்தான்.

இன்றைய மோதி எதிர்ப்புக்காக கெஜ்ரிவாலை முன்னிறுத்தும் ஊடகங்களே கெஜ்ரிவாலை கோமாளியாக்கப் போகும் நாள் தூரத்தில் இல்லை. அண்ணா ஹசாரே இப்படித்தான் ஹீரோவாக்கப்பட்ட ஊடகத்தாலேயே கோமாளியாக்கப்பட்டார்.

நன்றி:www.tamilpaper.net/?p=8633