October 25, 2021

கூடங்குளம் உலையில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி ஜனவரி 22–ந் தேதி தொடக்கம்!

கூடங்குளம் முதல் அணு உலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி வருகிற ஜனவரி 22–ந் தேதி தொடங்கும் என கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குனர் சுந்த‌ர் தெரிவித்துள்ளார்.
koodankulam
இந்திய அணுசக்தி கழகம் சார்பில் ரஷியாவின் ஒத்துழைப்புடன், தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் வாய்ந்த 2 அணு உலைகள் கூடங்குளத்தில் நிறுவப்பட்டு உள்ளன. இதில் முதல் உலையில் வர்த்தக ரீதியான மின் உற்பத்தி கடந்த அக்டோபர் 22–ந் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் உலையின் முதல் மற்றும் 2–ம் நிலைகளில் உள்ள டர்பைன் பிளேடுகள் மற்றும் டயாபிரேம் ஆகியவை சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த தேதியில் வர்த்தக ரீதியான மின் உற்பத்தியை தொடங்க முடியவில்லை.

இந்த டர்பைன் தொடர்பான பழுதுகள் அனைத்தும் டிசம்பர் 22–ந் தேதிக்கு முன் சீரமைக்கப்படும் என அணுசக்தி கழகம் சார்பில் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (சி.இ.ஆர்.சி.) அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகளுக்காக அணு உலை மூடப்பட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, வர்த்தக ரீதியாக உலை இயங்குவதற்கான நாளை (சி.ஓ.டி.) அறிவிக்குமுன், வெற்றிகரமான அணுஉலை சோதனை, டர்பைன்–ஜெனரேட்டர், பல்வேறு நிலைகளில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முறைகள் அனைத்தும் முழு திறனுடன் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

எனவே முதல் உலையில் சேதமடைந்துள்ள பொருட்கள் அனைத்தையும் 2–வது உலையில் இருந்து எடுத்து நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைய இன்னும் 7 முதல் 8 வாரங்கள் வரை ஆகும் என தெரிகிறது.எனவே, வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்க அடுத்த ஆண்டு ஜனவரி 22–ந் தேதி வரை ஆகும் என மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், அணுசக்தி கழகம் அளித்துள்ளது. இதை பெற்றுக்கொண்ட சி.இ.ஆர்.சி., இந்த கால நீட்டிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், சீரமைப்பு பணிகளின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை டிசம்பர் 30–ந் தேதி தாக்கல் செய்யுமாறும் அணுசக்தி கழகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.