September 21, 2021

கூடங்குளத்தில் 3 , 4-வது அணு உலைகள் 2020-ல் செயல்படும்: மத்திய அரசு தகவல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷியா ஆதரவுடன் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு உள்ளது. இங்கு தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 உலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு மேலும் 2 உலைகள் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.தற்போது கூடங்குளத்தில் முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.1.22-க்கு விற்கப்படுகிறது. இதுவரை ரூ.366 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது.உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இங்கு 3, 4-வது அணு உலைகளை நிர்மாணிக்க பூர்வாங்க பணிகள் தொடங்கி இருக்கின்றன. மார்ச் மாதத்தில் அஸ்திவாரம் தோண்டும் பணியும், 2016-ம் ஆண்டில் கான்கிரீட் பணியும் தொடங்கும். இப்பணிகள் 72 மாதங்களில் நிறைவடையும். 3 மற்றும் 4-வது அணு உலைகள் ரூ. 39,746 கோடியில் அமைக்கப்படவுள்ளன.
koodankulam
இதை உறுதிப்படுத்தி பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அணுசக்தி துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர்,”கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறனுள்ள 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்துக்காக அனைத்து சட்ட ரீதியான அனுமதிகளும் பெறப்பட்டு உள்ளன. மேலும் இந்த 2 உலைகளின் கட்டுமான பணிகளுக்காக இடம் தயார் நிலையில் உள்ளது.

இந்த உலைகள் அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு அல்லது 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் இந்த 3 மற்றும் 4-வது அணு உலைகளை 2020-21-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.”என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.