March 31, 2023

கூகுள் நிறுவனத்தில் பாலியல் குற்றச்சாட்டு: பலர் பணி நீக்கம்!

சர்வதேச அளவில் ’மீ டூ’விவகாரம் பெரும் புயலை கிளப்பி வரும் சூழ்நிலையில் கடந்த 2 வருடங்களில் பாலியல் புகார்களுக்கு உள்ளான 13 மூத்த அதிகாரிகள் உள்பட 48 ஊழியர்களை இதுவரை பணிநீக்கம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதுமே மீடூ விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தில் நடந்த பாலியல் புகார்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கூகுள் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் சிலர் பாலியல் புகாருக்கு ஆளானதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அவர்களை பாதுகாக்கும் வகையில் நீண்ட விடுமுறை அளித்து கூகுள் நிறுவனம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு நிர்வாகி ரூபின், கடந்த 2014ஆம் ஆண்டு சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாருக்கு உள்ளானார். இதனால் அவர் நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. மேலும் இந்த விவகாரத் தால் ரூபினுக்கும் அவரது மனைவிக்கும் பிரிவு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதனை ரூபின் தரப்பு மறுத்தது. தனிப்பட்ட காரணங்களால் அவர் நீண்ட விடுமுறையில் சென்றதாகவும் அவர் மீது யாரும் பாலியல் புகார் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சில விளக்கங்களை அளித்துள்ளார். அதில்,”கூகுள் நிறுவனத்தில் பாலியல் புகார் தொடர்பான விஷயங்களில் கடந்த 2015ஆம் ஆண்டே திட்டவட்டமான முடிவுகளை நிறுவனம் எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”உயரதிகாரிகள் யாருக்கும், சக ஊழியர்களுடன் பாலியல் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் இங்கு பணியாற்றமுடியாது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூபின் பற்றி வந்துள்ள செய்திகள் குறித்து படிக்க கடினமாக உள்ளது. அந்த பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கிய 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மிக மூத்த நிர்வாகிகள். அவர்களுக்கு பணி நீக்கத்துக்கு பிந்தைய நிதி உதவியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்