October 21, 2021

கூகுளின் ஆர்குட் குளோஸ்!

கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், ”கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிறுவனங்களின் வளர்ச்சியால் ஆர்குட்டின் வளர்ச்சி தடைபட்டதால் ஆர்குட்டின் சேவையை நிறுத்தி கொள்ளும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
orkut
கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் என்ற சமூக வலைதளம் 2004 ஜன., 24ல் ஆர்குட் புயுக்கோக்டன் என்பவரால் தொடங்கப்பட்டது. அவரது பெயரே வலைதளத்துக்கு வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் அமெரிக்காவில் இருந்தது. பின் பிரேசிலுக்கு மாற்றப்பட்டது. நண்பர்களுக்குள் தகவல்கள் பரிமாற்றம், குறுந்தகவல், வீடியோ மற்றும் போட்டோ, சாட்டிங் ஆகியவை பரிமாற்றம் செய்யப்பட்டன.

2009 வரை ஆர்குட்’ வலைதளம் அசைக்க முடியாததாக இருந்தது. இந்நிலையில் ஆர்குட் காலத்தில், துவங்கப்பட்ட பேஸ்புக் பயனாளர்களை தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கியது. பேஸ்புக்கின் அசுர வளர்ச்சி, ‘ஆர்குட்’ வலைதளத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல், ஆர்குட்டில் பயனாளர்களின் கணக்கிற்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களது தகவல்கள் அடிக்கடி திருடப்பட்டன. ஷேரிங்’ வசதி கிடையாது. ஒரு தகவலை அனைவரும் பார்க்க முடியாது. பயன்படுத்துவதும் எளிதாக இல்லை.

இது போன்ற காரணங்களால் படிப்படியாக ஆர்குட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.அதே நேரத்தில் பேஸ்புக்கின் பயனாளர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 2012ல் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டது. தற்போது இதன் எண்ணிக்கை 128 கோடி. ஆர்குட் பயன்பாடு தொடர்ந்து குறைந்ததால், பேஸ்புக்கிற்கு போட்டியாக, 2011ல், ‘கூகுள் +’ என்ற சமூக வலைதளத்தை கூகுள் தொடங்கியது. இதுவும் பேஸ்புக்கிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இருப்பினும் ஆர்குட்டை விட, இதன் பயனாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். இதன் காரணமாக செப்., 30ம் தேதி, ஆர்குட் சமூக வலைதளம் நிரந்தரமாக மூடப்படுவதாக ‘கூகுள்’ நிறுவனம் அறிவித்தது. அதன்படி, இன்றுடன், ஆர்குட், தனது சேவையை முற்றிலும் நிறுத்தி்க்கொள்கிறது.