September 25, 2021

கூகுளின் ஆன்ட்ராய்டு புதிய பதிப்பின் பெயர் ‘மார்ஷ்மல்லோ’!

ட்ரெண்ட் போர்ஸ் என்னும் ஆய்வு அமைப்பு, உலக அளவில் மொபைல் போன்கள் விற்பனை குறித்துத் தகவல் களைத் திரட்டி வருகிறது. 2015 ஆம் ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 30 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் விற்பனையான ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 1.9% கூடுதலாகும். இந்த ஆண்டு மொத்த விற்பனை 8.2% அதிகரிக்கும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில், 2014ல், ஸ்மார்ட் போன் விற்பனை 26.5% உயர்ந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு கூடுதல் விற்பனை அந்த அளவினை எட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Android-google
இதுவரை, பன்னாட்டளவில், சாம்சங் நிறுவனம் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில், ஆப்பிள் தன் புதிய ஐபோனை விற்பனைக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விற்பனை, மற்ற நிறுவனங்களை, எண்ணிக்கையில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டில், 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி, சீனாவின் ஹுவே நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விற்பனை இருக்கும். அதனை அடுத்து, ஸியாமியின் விற்பனை 7 கோடியாக இருக்கலாம்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆன்ட் ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1), கிட்காட் (4.4), லாலிபப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள்.

இந்த புதிய வெர்ஷனில் கைரேகையை பதிவு செய்யும் சென்சார்கள், அப்டேட் செய்யப்பட்ட பவர் சேவிங் மோடு, ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவும், அப்கிரேடு செய்யவும், பெர்மிஷன்களை ஸ்டிரீம்லைனில் காட்டும் புதிய வசதியும் உண்டு. சில ஆப்ஸ்களை இன்ட்ஸ்டால் செய்யும் போது பெர்மிஷன்களை வாங்க வேண்டியிருக்கும். புதிய பதிப்பில் முதலில் இன்ஸ்டால் செய்துவிட்டு தேவைப்படும்போது பெர்மிஷன்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கலாம்.

உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது. பல கருவிகளில் பழைய வெர்ஷன்கள் இருந்தாலும், அப்கிரேட் செய்ய முடியாத நிலை இருந்தாலும் இன்றளவும் தொடர்ந்து முன்னிலை யில் இருப்பது ஆன்ட்ராய்டு மட்டுமே.