September 29, 2021

குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் 13.6 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று சர்வதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னரே தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சில லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. குறிப்பாக 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்றளவும் அது முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
child labour 13
விவசாயம், செங்கல் சூளை, குவாரிகள், பட்டறைகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இதற்காக குழந்தைகள் கடத்தி வரப்படுவதாகவும் அவர்கள் பிச்சை எடுக்க வைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் குடும்பத்தினர் நடத்தும் ஆபத்தில்லாத தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பணிபுரியலாம் என்று குழந்தை தொழிலாளர் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இனி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்திற்கோ குடும்ப நிறுவனங்களுக்கோ உதவி செய்யலாம். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இருப்பினும் 14- 18 வயதிற்குப்பட்ட சிறுவர்கள் அபாயகரமான தொழில்களில் ஈடுபட அனுமதி கிடையாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த திருத்தப்பட்ட மசோதா வழிவகை செய்துள்ளது. அதேவேளையில், முதல் குற்றத்திற்கு பெற்றோர்களுக்கு எந்த தண்டனையும் அளிக்கப்படாது. வேலைக்கு அமர்த்துபவர்களே முதல் குற்றத்திற்கு பொறுப்பாவார். பெற்றோர்களை பொறுத்தவரை திரும்ப திரும்ப தவறு இழைத்தால் 10 ஆயிரம் வரை தண்டனை விதிக்கப்படலாம்.

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிக்கு விதிக்கப்படும் அபராதமானது தற்போதைய தொகையான 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். இரண்டாவது முறை சட்டத்தை மீறி குழந்தைகளை பணிக்கு சேர்த்தால் குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். அது மூன்றாண்டுகள் வரையில் நீட்டிக்கப்படலாம். மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

இதற்கிடையே, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 5 வயது முதல் 14 வயது குழந்தைகள் கொத்தடிமைகளாகவோ தொழிலாளர்களாகவோ நடத்தப்படுவதை கண்டால் பொதுமக்கள் உடனடியாக 1098 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குழந்தைகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன. மீட்கப்படும் குழந்தைகள், குழந்தைகள் நல குழு மூலம் பாதுகாக்கப்பட்டு அரசு காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..