December 4, 2021

குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை! – ரஜினி பேச்சு!

திருமதி லதா ரஜினிகாந்த் -ன் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா நடந்தது! லதா ரஜினிகாந்த் இந்த பயணத்தை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது . குழந்தை களுக்கான அமைதி (Peace For Children )என்ற அமைப்பினை அனைத்து ஊர்களிலும் தொடங்க இருக்கிறார்கள்..குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது அவர்களுக்கு எதனாலோ அல்லது யாராலோ  ஏற்படுகின்ற பிரச்னையோ எது நடந்தாலும் குழந்தைகள் சேமிப்பு அல்லது காப்பது என்ற பிரிவு உள்ளது .மிக விரைவில் ஒவ்வொரு ஊர்களிலும் நிறுவப்பட உள்ளது இந்த அமைப்பு. குழந்தைகளுக்கு  ஏற்படும் பிரச்சனைகள், குறைகள்,எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள Peace For Children அமைப்பின் மூலம் தெரிவிக்கலாம். தகவலை தெரிவிக்க troll free நம்பர் மற்றும் முகவரியை தெரிவித்தனர் .

இந்த அறிவிப்பு பலகையை திரு ரஜினிகாந்த் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திறந்து வைத்தனர் . இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,நடிகர் தனுஷ் ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சிம்ரன்,இயக்குநர் எஸ்பி முத்துராமன், சௌந்தர்யா ரஜினிகாந்த் ,ஐஸ்வர்யா தனுஷ், பாபி சிம்ஹா, ராகவா லாரன்ஸ், அனிருத் ,கலைப்புலி S தாணு போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், “மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் லதா ரஜினிகாந்துக்கு உள்ளது. அவர் ஒரு அரசனின் மனைவி. ஆனால் அனைத்து வேலைகளையும் தானே எடுத்துக்கொண்டு செய்கிறார். நான்கு பேர் சேர்ந்தால் ஒரு வீட்டை மாற்றலாம். நான்கு வீடு சேர்ந்தல் ஒரு தெருவை மாற்றலாம். நான்கு தெருக்கள் சேர்ந்தால் நாட்டையே மாற்றலாம். மாற்றம் நமக்கு உள்ளிருந்து ஏற்படவேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை கைவிட வேண்டும். கலியுகம் என்று சொல்வதைப் போல் நல்லது செய்தாலும் கூட கெட்டதாக தான் நினைக்கிறார்கள் . சுயநலம் குறைத்து, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்யலாம்.அது பெரிய மாற்றத்தை உருவாக்கும். லதா ரஜினி காந்தின் செயல்பாடுகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது”என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசிய போது, “குழந்தைகளின் நிம்மதியை பெரியவர்கள்தான் கெடுக்கிறார்கள். வீட்டில் தொடங்கி, பள்ளிக்கூடம், சமுதாயம் வரையில் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துக் கொண்டே உள்ளனர். அழகான பூக்களாக திகழும் குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்காக தீட்டப்படும் திட்டங்கள் சரியாக உள்ளன. இதற்காக பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் நமது மத்திய – மாநில அரசுகளுக்கு குழந்தைகள் மீது அக்கறை இல்லை. குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை. அப்படி கவனிக்காத நாடு எப்படி நல்ல நாடாக இருக்கும்.

குழந்தைகள் நலனுக்காக எனது மனைவி இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதனை கையில் எடுத்துள்ளன. அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லாத காரணத்தால்தான் பெரிய முதலாளி கள் குழந்தைகள் நலன் காக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

இதற்காக லதா செய்திருக்கும் காரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ரஜினியின் மனைவி லதா என்று சொல்லி கொண்டிருக்கும் காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினி என்று சொல்லும் காலம் வரவேண்டும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சேவையாகும்.

‘குழந்தைகளுக்கு அமைதி’ என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்பது லதாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அது இன்று நனவாகி உள்ளது. சாலைகளில் பிச்சையெடுக்கும் பிள்ளைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று உன்னை பிச்சை எடுக்க வைப்பது யார்? என்று விசாரணை நடத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கும்பலே உள்ளது. அரசாங்கமும், போலீசும் இவர்களை கவனிப்பதே இல்லை. சமூகம் கூட அவர்களை பார்த்துக்கொண்டு அப்படியே சென்று விடுகிறது.

குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களின் முகவரியை அழித்து தாய் – தந்தை இல்லாத அநாதை களாக ஆக்கி விடுகிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பிச்சைக்காரர்களாக, கிரிமினல்களாக, நோயாளிகளாக மாறி வாழ்க்கை முழுவதும் செத்து கொண்டே இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய குற்றம். கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்களோ? அதே தண்டனையை குழந்தைகளை கடத்தும் மாபியாக்களுக்கு வழங்க வேண்டும்” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.