September 25, 2021

குற்றம் கடிதல் எனும் பாடம்! -திரைப் பார்வை

என்னுடைய பள்ளி பருவத்தில் நான் பள்ளிக்கூடத்தை மிகவும் நேசித்தேன். அட.. அப்படின்னா பய ரொம்ப படிப்பாளி போலனு நினைச்சுறாதீங்க.. மாப்ள பெஞ்சு மாப்ள பெஞ்சுனு ஒண்ணு இருக்கும்லா.. அதுல உட்கார்ந்திருக்கிற மக்கு மாப்பிள்ளைகளில் நானும் ஒருவன். பள்ளிக் கூடத்தை நேசித்தேன். ஆனால் வகுப்பறையையும் பிரம் பும் மிரட்டல் முழியுமாக இருக்கும் ஆசிரியர்களை வெறுத்தேன்.
cine sep 25
இன்று குற்றம் கடிதல் பார்த்தபோது செழியன் கதாப்பாத்திரம் எனக்கு என் பள்ளி காலத்தைதான் நினைவுபடுத்தியது. ஒரு சில படங்கள் மட்டுமே உங்களை உணர்வு ரீதியாக சிலிர்ப்புக் குள்ளாக்கும். அப்படியான படங்களில் ஒன்று குற்றம் கடிதல்.

படத்தின் துவக்க காட்சியில் ஆரம்பித்து படம் முடியும் வரை நம்மை உணர்வுகளால் கட்டிப் போடுகிறது. நள்ளிரவு நேரங்களில் லாரிகளை வழி மறிக்கும் பெண்கள் மற்றும் லாரி டிரைவர்கள் குறித்த கதைகள் ஓரளவுக்கு நாம் அறிந்தது தான். அப்படி ஒரு லாரியை வழிமறித்து ஏறிக் கொள்ளும் பெண் ஒருவர் தன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அப்போது லாரி டிரைவரின் பார்வை காமிர கோணம் இசை எல்லாம் சேர்ந்து ஐய் யையோ பலாத்கார காட்சி வைத்து பருத்திவீரன் ப்ரியாமணி போல் நம்மளை கதற விடுவாங்களோ என்று லைட்டா பீதி வந்தது.

நல்லவேளை.. இப்படி படம் நெடுக மசாலாத்தனங்களை புகுத்துவதற்கான வாய்ப்புகள் பல இருந்தும் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு அற்புதமாக கதை சொல்லி யிருக்கும் இயக்குனர் பிரம்மாவுக்கு பாராட்டுக்கள்.

தீவிர கிறிஸ்த்துவ குடும்பத்தைச் சேர்ந்த மெர்லின் என்ற ஆசிரியை அம்மாவின் எதிர்ப்பை மீறி மணிகண்டன் என்ற இளைஞரை காதல் மணம் புரிகிறார். திருமண விடுப்பு முடிந்து உற்சாகமும் வெட்கமுமாக பள்ளிக்கு செல்லும் முதல் நாளில் நடக்கும் ஒரு அறியாப்பிழை அவரை எப்படி துரத்துகிறது என்பதுதான் கதை.

ஆசிரியை மெர்லீனாக ராதிகா பிரஷிதா வாழ்ந்திருக்கிறார். அவரே பார்க்க பள்ளி மாணவி போல் தான் இருக்கிறார். ஒரு சிலருக்கு கண்கள் ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். இந்த பொண்ணுக்கு அப்படி ஒரு கண். அந்த கண்களால் உணர்வுகளை கொண்டு வருகிறார். குறும்பும் ரகளையுமாக வரும் சிறுவன் அஜய் சில நிமிடங்களே வந்தாலும் பார்வையாளர்களை கவர்கிறான்.

மௌனமொழிகளை மட்டுமே நடிப்பாக கொண்ட சிறுவனின் அம்மா சத்யாவிடம் மன்னிப்பு கேட்டு மெர்லின் காலில் விழும் காட்சியில் உருக வைக்கிறார். வில்லனாக பார்த்து பழகிய தோழர் உதயனாக வரும் பாவல் நவகீதனுக்கு இது குறிப்பிடும்படியான படம். தனித்துவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கணவராக வரும் சாய் ராஜ்குமார், பள்ளி முதல்வர் குலோத்துங்கன் உதயகுமார், அவரது மனைவி துர்கா, பாலியல் கல்வியின் அவசியம் குறித்து ஆர்வமாக விவா திக்கும் சக ஆசிரியை நிகிலா கேசவன் என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நீங்க அடிப்பட்டு கிடந்தாலும் நாங்க தான் உதவிக்கு வரணும்.. கார்ல போறவன் வர மாட்டான், “இருக்குற புள்ளையோட அருமைதான் உனக்குத் தெரியும், இல்லாத புள்ளையோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும்.. ” என வசனம் ஆங்காங்கே பளிச்சிடுகிறது.

குற்றம் செய்தவனின் நெஞ்சம் எப்படி கலங்கும் என்பதை கூத்துக்கலைஞர்களை வைத்து சொன்னது என, அம்மாவும் ஆசிரியையும் ஒண்ணு என்பதை சொல்லும் முத்தக்காட்சி, டிரை வர்கள் மீதான பொதுபுத்தியின் பிம்பத்தை தகர்க்கும் காட்சி, செய்திக்காக அலையும் மீடியாக் காரர்களின் வெறி, எலி மீதும் பரிதாபப்பட்டு உயிரோடு விட சொல்லும் மெர்லின், மகனை அடிக்க விரட்டும் அம்மா மன்னிக்கும் காட்சி என ஆங்காங்கே டைரக்டர் டச்.

பாரதியின் `சின்னஞ்சிறுகிளியே..’ பாடலும் காட்சி அமைப்பும் கவிதை. சங்கர் ரங்கராஜன் இசையும் மணிகண்டனின் கேமராவும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.

இந்த படத்தை வெறுமனே ஒரு சமூகப் பிரச்னையை பேசும் படமாக குறிப்பிட முடியாது. பாலியல் கல்வியின் அவசியத்தை, குழந்தைகளை அடிக்க கூடாது, மதவெறி தவிர்த்தல் என படம் முழுக்க ஒவ்வொரு சிறு காட்சியில் சமூகத்திற்கு தேவையான ஏதோ ஒரு செய்தியை சொல்லி செல்கிறது. இறுதி காட்சியில் மார்க்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை காட்சிப்படுத்திருப்பது மொத்த படத்திற்குமான சிறப்பு.

குற்றமே பகையாக மாறும் எனும் இந்த குற்றம் கடிதல் படமல்ல பாடம். சமூகத்தின் மீதான ஒரு அக்கறை கொண்ட ஒரு படத்தை கொடுத்த பெருமை இயக்குனர் பிரம்மாவுக்கும் அதன் தயாரிப் பாளர்கள் கிறிஸ்டி சிலுவப்பன், சதிஷ்குமாருக்கு என்றென்றும் உண்டு.

படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது உண்மையிலேயே ரொம்ப நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

இன்று தனியாக சென்று தான் படம் பார்த்தேன். நாளை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். நண்பர்களும்

தாராளமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்…!

-கார்ட்டூனிஸ்ட் பாலா