குடியரசு தலைவருக்கு –ஏன் இந்த கவலை? (இழு தள்ளு 1- by கதிர் )

தேர்தல் நடந்து புது உறுப்பினர்கள் பதவி ஏற்றதும் கூடுகின்ற முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்துவார். வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற கூட்டமும் அதே போல தொடங்கும். இது மரபு. உரையை தயார் செய்வது மத்திய அரசு. வாசிப்பது மட்டுமே ஜனாதிபதி வேலை. குடியரசு தினத்துக்கு முந்தைய மாலையில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார். இது நாட்டின் முதல் குடிமகன் நாட்டின் குடிமக்களுக்கு சொல்லும் செய்தி. இதை ஜனாதிபதியே எழுதிக் கொள்ளலாம். அரசின் ஒலி, ஒளி பரப்பும் கருவிகளான ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் மூலமாக கொண்டு சேர்க்கலாம். இந்த உரையும் உப்பு சப்பு இல்லாமல் பரிமாறப்படுவது மரபு.
The-Push & Pull-By Kathir 1
பிரணாப் முகர்ஜி அந்த மரபை தகர்த்திருக்கிறார்.

’அரசாங்கம் என்பது தர்ம சத்திரம் கிடையாது. பொது சொத்துக்களை இனாமாக அள்ளிக் கொடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து யாரும் மக்களை ஏமாற்றக் கூடாது. செய்ய முடிந்ததை மட்டும் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். பதவிக்கு வந்த பிறகு, மக்களின் பெயரால் அராஜகத்தை தூண்டும் செயல்களில் எவரும் ஈடுபடக் கூடாது. பொது வாழ்க்கையில் போலித் தனத்தை பார்த்துப் பார்த்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்பது ஆரோக்யமான மாற்றம். அதை தாமதமின்றி ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் தவறினால் விளைவுகள் விபரீதமாகி விடும்.’

இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார், பிரணாப்.

யாரை குறிவைத்து இந்த எச்சரிக்கை எறியப்பட்டிருக்கிறது?

அரசியல்வாதிகளை சொல்கிறார் என்பது புரிகிறது. ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைவர்களை குத்திக் காட்டுகிறார் என்று தெரிகிறது. எல்லா மாநில அரசுகளும் ஏதாவது சில இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மத்திய அரசும் ’நாம் அதில் பின்தங்கி விடக்கூடாதே’ என்ற கவலையில் புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. இலவசத்துக்கும் மானியத்துக்கும் இடையே இருப்பது மெல்லிய கோடுதானே.

ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் பெயரால் அராஜகத்தை தூண்டிவிடக் கூடாது என்ற வாக்கியம்தான் இலக்கை துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

மத்திய அரசுக்கு எதிராக அவர் உண்ணாவிரதம் என்ற தெருக்கூத்தை அரங்கேற்றி அரைகுறையாக முடித்த 36 மணி நேரத்துக்குள் ஜனாதிபதி உரை இறுதி வடிவம் பெற்றுள்ளது. ’தர்ணா பத்து நாள் தொடரும். குடியரசு தின அணிவகுப்பு பாதிக்கப்பட்டால் நான் பொறுப்பல்ல’ என கேஜ்ரிவால் அறிவித்தபோது டெல்லியில் பரவிய பதட்டம் பிரணாப் உரையில் தெளிவாகவே பிரதிபலிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள நிலைமைகளை ஜனாதிபதி உரை அக்கறையுடன் சுட்டிக் காட்டுகிறது என ஆம் ஆத்மி பிரமுகர்கள் சமாளிக்கிறார்கள். அதெல்லாம் கிடையாது; ஆம் ஆத்மியின் மோசடிகளை ஜனாதிபதி உரை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று காங்கிரஸ், பிஜேபி முக்கியஸ்தர்கள் குதூகலிக்கிறார்கள்.

ஆம் ஆத்மி உண்மையில் மோசடிப் பேர்வழிகளின் கூடாரமா? அரவிந்த் கேஜ்ரிவால் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டக்காரரா?

அப்படி தெரியவில்லை.

தட்டிக் கேட்க எவருமில்லை என்ற தைரியத்தில் ஊழலிலும் முறைகேடுகளிலும் திளைத்துக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்துக்கு ‘செக்’ வைக்க முன்வந்த ஒரு துணிச்சல்கார இளைஞர் அரவிந்த்;

அவரது நல்ல நோக்கம் நிறைவேற நம்மால் முடிந்ததை செய்வோம் என்ற அர்ப்பணிப்புடன் பின்னால் அணிதிரண்டவர்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள்;

என்று சராசரி மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்ட பிம்பம் அத்தனை சீக்கிரத்தில் முற்றிலுமாக கலைந்துவிடாது. ஆனால், அதற்கு உயிரூட்ட வேண்டிய தொடர் பொறுப்பு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இருக்கிறது. அதைத்தான் ஜனாதிபதி நினைவுபடுத்தி இருக்கிறார்.

வெளிநாட்டு பெண்கள் வசிக்கும் வீடுகளுக்குள் சட்ட அமைச்சரே தன் கைத்தடிகளுடன் நள்ளிரவில் புகுந்து ரெய்டு நடத்தும் அடாவடித்தனம்;

ஊழல் போலீசுக்கு வக்காலத்து வாங்கும் சட்ட நிபுணர்கள் ஹரிஷ் சால்வே, அருண் ஜேட்லி ஆகியோர் முகங்களில் காரித் துப்ப ஆசைப்படுகிறேன் என்று அதே அமைச்சர் பிரகடனம் செய்யும் போக்கிரித்தனம்;

கருத்த தோல் கொண்ட கேரள நர்ஸ்களை பார்க்கும் ஆண்களுக்கு ‘சிஸ்டர்’ என்றுதான் கூப்பிடத் தோன்றும் என்று கீழ்த்தரமாக கிண்டல் செய்யும் எம்எல்ஏவின் பொறுக்கித்தனம்;

தனது ஆட்களின் தவறுகளை கண்டுகொள்ளாமல், தனக்கு கீழ்ப்படிய மறுத்த மூன்று போலீஸ்காரர்களை நீக்கு என்று போர்க்கொடி தூக்கி, 144 தடை உத்தரவை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக வீதியில் உண்ணாவிரதம் இருக்கும் முதல்வரின் அராஜகம்…

இதையெல்லாம் பார்த்தால் ஜனாதிபதிக்கு எப்படி இருக்கும்?

அரவிந்த் கேஜ்ரிவாலின் அவசரம் அவசியமில்லாதது. அரசியலில் பொறுமைதான் முதல் தேவை. அரசியல் சீர்திருத்தம் என்ற கோஷத்துடன் அன்னாவுடன் மேடை ஏறியவர் அவர். ’நீயும் கட்சி ஆரம்பித்துப் பார், தெரியும்’ என்று சிலர் சீண்டியதால், அன்னா வழியிலிருந்து விலகினார்.

‘தேர்தலில் நின்று பார், ஆட்சி நடத்திப்பார்’ என்ற சீண்டல்களால் இன்று முதல்வராக வந்திருக்கிறார்.

’மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மாநில அரசின் முதல்வராக இருந்து உன்னால் என்ன சாதிக்க முடியும்?’ என்று அடுத்த சவால் அவரை சீண்டியிருக்கிறது. ’பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்தால்தான் உண்மையான அதிகாரம் உன் கைக்கு வரும். அப்போதுதான் இந்த நாட்டின் சாதாரண ஜனங்களுக்காக நல்லது செய்ய முடியும்’ என்பது அதன் உள்ளர்த்தம்.

இந்த தூண்டிலிலும் கேஜ்ரிவால் என்ற மீன் சிக்கிவிடும் போல் தோன்றுகிறது.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவனாக அரவிந்த் கேஜ்ரிவாலை சித்தரிக்க அப்போதுதானே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய மக்களுக்கு இத்தனை காலமாக பழகிப்போன இன்னுமொரு சராசரி அரசியல்வாதியாக – ஒரே குட்டையில் ஊறிய… எட்செட்ரா – அவரை மாற்றுவதுதானே அவர்களின் நோக்கம்.

வங்காளிகள் மென்மையான மனம் படைத்தவர்கள். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள். சிறு வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பரந்துபட்ட தேச நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் சிந்திக்கப் பழகியவர்கள்.

ஆம் ஆத்மி என்ற கட்சியும் அதன் தலைவரும் பிரணாப் முகர்ஜிக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்த கூட்டம் உயர்த்திப் பிடித்திருக்கும் சமூக அரசியல் மாற்றம் என்ற பேனர் அவருக்கு முக்கியம். நாட்டின் மாண்புகளும் மரபுகளும் மதிப்பீடுகளும் வேகமாக சரிந்து விழுந்து கொண்டிருப்பதைப் பற்றிய அவரது கவலை இதற்குமுன் அவர் வகித்த பல்வேறு பொறுப்புகளின் போதும் வேறு வேறு மேடைகளில் வெளிப்பட்டிருக்கிறது.

அரசியல், நிர்வாக, நீதி நடைமுறைகளில் அரிதாகிப் போன பொதுநலன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு முதலான பண்புகளுக்கு புத்துயிரூட்ட காங்கிரஸ், பிஜேபி போன்ற மிகப்பெரிய கட்சிகளுக்கும் ஆம் ஆத்மியின் வெற்றி ஒரு நிர்ப்பந்த்த்தை உண்டாக்கும் என பிரணாப் எதிர்பார்க்கிறார்.

அவரைப் போலவே, இந்திய அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் நடுநிலையாளர்களும் அம் ஆத்மி என்ற அரசியல் பரிசோதனை வெற்றி அடைய வேண்டுமென்று விரும்புகிறார்கள். அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நேர்மையாளர்கள் அதற்காக பிரார்த்திக்கிறார்கள். அன்னா ஹசாரேயின் பாசறையில் இணைந்து பணியாற்றி, தேர்தல் பாதைக்கு கேஜ்ரிவால் திரும்பியதும் அவருடன் உறவை துண்டித்துக் கொண்ட கிரண் பேடி போன்றவர்களும்கூட ஆம் ஆத்மி தோல்வி அடைவதை விரும்பமாட்டார்கள்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு புரிந்தால் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

(கதிர் In குமுதம் ரிப்போர்ட்டர் 06.02.2014)