September 25, 2021

குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை!

அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது.
drunk+driving.aantha
இந்நிலையில் தமிழகத் தலைநகரில் கடந்த ஆண்டு குடித்து விட்டு போதையுடன் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் வெறும் 16,881 பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். ஆனால் இந்தாண்டு இந்த எண்ணிக்கை 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.அதாவது இந்தாண்டு நவம்பர் மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57,962 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாதனை(!) படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்,” சென்னையில் இந்தாண்டு இதுவரை 57,962 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கியுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1,201 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றங்கள் மூலம் 204 பேரின் ஓட்டுநர் உரிமங்களும், போக்குவரத்து அதிகாரிகளால் 997 பேரின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போலீஸாரின் தீவிர பரிசோதனை மற்றும் இரவு ரோந்துப் பணிகள் காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் பலர் சிக்குகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்தாண்டு 10 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன.

நவம்பர் மாதம் வரை 1,146 பெரிய விபத்துகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு 1,300 பெரிய வபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்தாண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெறும் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன” என்று போலீஸார் தெரிவித்தனர்.