September 17, 2021

கிளம்பிட்டேன்ய்யா.. தலைவர் ஆணைப்படிக் கிளம்பிட்டேன்! – ஸ்டாலின் தகவல்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்றும் மக்கள் பணியில் தி.மு.க., கழகத்தின் அரணாகத் தமிழ் மக்கள்” என்பதைப் பறைசாற்றும் ‘நமக்கு நாமே’ எனும் விடியல் மீட்புப் பயணத்தைத் தென்கோடி குமரி முனையில் இன்று தொடங்க இருக்கிறேன். கடந்த நாற்பதாண்டு காலப் பொது வாழ்க்கையில், தலைவர் கலைஞர் அவர்களின் ஆணையின் பேரில், எத்தனையோ பயணங்கள், சுற்றுப்பயணங்கள், போராட்டங்கள், மறக்க முடியாத மாநாடுகள், நினைவில் நிற்கும் விழாக்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக் கிறோம். எனினும் நெடியதோர் இந்தப் பயணம் உற்சாகத்தையும் பேரார்வத்தையும் என் மனதுக்குள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.
stalin with car
பயணத்திட்டத்தை அறிவித்தது முதலே, தி.மு.க.வின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்களும், செயல் வீரர்களும் மேற்கொண்டு வரும் களப்பணிகளும் திட்டமிடலில் அவர்கள் காட்டும் ஆர்வமும் எனது உற்சாகத்தை இரட்டிப்பாக்குகின்றன. கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்களிடம் இருந்து வெளிப்படும் நல்லெண்ணமும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நம் பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கச்செய்கின்றன.

குமரியில் தொடங்கி திருச்சி வரையிலும் முதல் கட்டமாக 13 நாட்களில் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்கப் போகிறோம்; அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறியப் போகிறோம் என்ற செய்தி என்னுள் மகிழ்ச்சியைக் கரைபுரளச் செய்கிறது.

மக்கள் நம்மிடம் தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தங்கள் இன்னல்களையும் பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை தி.மு.க.விற்கு தான் உண்டு என்று நம்புகிறார்கள். அவர்களின் துயரத்தைத் துடைக்கும் இடத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் இல்லை என்பதை உணர்ந்ததால், ஆட்சியின் மீதான நம்பிக்கையை எப்போதோ அவர்கள் இழந்துவிட்டார் கள்.

தமிழகம் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் நேரத்தில் நாம் மகத்தானதொரு மக்கள் சந்திப்பைத் தொடங்குகிறோம். ஜனநாயகம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டுவிட்ட, தமிழகத்தின் இருண்ட காலம் இது. நிர்வாக இயந்திரம் முழுமையாக முடங்கி, அனைத்துத் துறைகளும் செயல் இழந்துவிட்ட நிலைமை. தொழில் துறையில் வரலாறு காணாத தேக்கம் லட்சக்கணக்கான தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் திண்டாடிக் கொண்டிருக்கும் தருணம்.

எங்கும் ஊழல், எல்லாவற்றுக்கும் கமிஷன், லஞ்சம் இல்லாமல் அரசாங்கத்தின் ஒரு கடை நிலை ஊழியர் நியமனம்கூட நடைபெறாது, எந்தக்கோப்பும் நகராது என்ற எழுதப்படாத விதி நடை முறைக்கு வந்துவிட்ட காலம் இது. கமிஷனும் லஞ்சமும் அமைச்சர்களின் முழு நேரத் தொழிலாகவே இப்போது மாறிவிட்டது. இந்த ஆட்சியின் சாதனை ஒன்றே ஒன்று தான், டாஸ்மாக் கடைகளை வீதி வீதியாக திறந்துவிட்டது.

இதன்மூலம், தொழில் துறையினரையும் மக்களையும் சொல்லொணாத் துன்பத்துக்கு இந்த அரசு தள்ளிவிட்டது. அவர்களின் துயர் துடைக்கவே, நேசக்கரம் நீட்டவே, இந்த முக்கியமான கால கட்டத்தில், அண்ணாவின் கூற்றுப்படி, மக்களை நாடிச்செல்கிறோம். வளர்ச்சி வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றம் வெளிப்படையான நிர்வாகம் என்ற நாற்பெரும் முழக்கங்களை மக்களிடம் முன்வைக்கப்போகிறோம். நமது இந்த வாக்குறுதிகள் நம்மால் மட்டுமே நிறைவேற்ற சாத்தியமானவை.

தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலங்களில் அவற்றை நாம் சாதித்தும் காட்டி இருக்கிறோம். பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நாம் ஒரு போதும் தந்தது இல்லை, தந்த எந்த வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் போனதில்லை என்ற நம் வரலாற்றைத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நன்றாக அறிவார்கள்.

தேர்தல் அறிக்கைகளில் சொன்னதை எல்லாம் செய்திருக்கிறோம். சொல்லாததையும் மக்கள் நன்மைக்காகச் செய்து நல்லாட்சி நடத்தி இருக்கிறோம் என்பது நம் வரலாறு. தி.மு.க. என்றுமே மக்களின் இயக்கம். நான் எப்போதுமே உங்களில் ஒருவன். விடியலை மீட்பதற்கான மக்கள் எழுச்சிப் பயணத்தில் வணிகர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவச் செல்வங்கள், சுயஉதவிக்குழுக்கள், தொழில்முனைவோர், தொழிலாளர் கள், நெசவாளர்கள் என பல தரப்பினரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறப்போகிறேன். அவர்களின் கருத்தை, வேதனையை, ஏக்கத்தை தலைவர் கலைஞரின் பிரதிநிதியாக நின்று கேட்டறியப் போகிறேன்.

புதிய தொழில்கள், நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான செயல்பாடு, புதிய வேலை வாய்ப் புகளுக்கான திட்டங்கள் என மக்களின் தேவைகளைக் கேட்டறிவோம். ஏமாற்றத்துக்கு ஆளாகி யுள்ள மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைப்போம். சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி மாற்றத்தைத் தடுத்துவிடலாம் என்ற மாயக்கனவுகளையும் சதி வலைகளையும் மக்கள் முறியடிப்பார்கள். நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தில் நடைபோடத் தயாராகுங்கள். கலந்துரை யாடுவோம். மக்கள் கவலையைப்போக்க களமிறங்குவோம். விடியலை மீட்போம். தமிழகத்தை மீட்டெடுப்போம்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.