September 27, 2021

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஜெ. சொன்ன கதை!

அ.தி.மு.க. சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள காமன்வெல்த் அரங்கத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது இது தான்::
“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெத்தலகேம் என்ற இடத்தில் உதித்த ஒளி உலகெங்கும் பேரொளியாக சுடர் விடுவதை நமக்கு உணர்த்தும் நாள் இந்த கிறிஸ்துமஸ் திருநாள்.
jaya 22
அன்பின் உறைவிடமாக விளங்கியவர் ஏசு பிரான். எதிரிகள் அவரை சிலுவையில் அறைந்து இம்சித்த போது கூட, தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே, அவர்களை மன்னியும் என்று கூறியவர் ஏசு பிரான்.

இப்படிப்பட்ட அன்பின் உருவமான ஏசு பிரான் மண்ணில் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் திருநாள். அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகைத்தன்மை ஆகியவற்றை எல்லோருக்கும் தருகின்ற விழாவாக கிறிஸ்துமஸ் விழா அமைகின்றது.

ஒரு லட்சியத்தையோ, குறிக்கோளையோ அடைய வேண்டுமானால், உழைப்பு, எதையும் தாங்கும் இதயம், லட்சியக் கனவு ஆகியவை தேவைப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்குத் தேவைப்படுவது அசைக்க முடியாத நம்பிக்கை. “நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்” என்றார் ஏசு பிரான்.

இறை நம்பிக்கை என்பது மேலானது. நன்மைகள் அளிக்கக் கூடியது. துன்பங்களை தாங்கும் வலிமையை கொடுக்கக் கூடியது. ‘தான்’ என்ற அகந்தையை அழிக்க வல்லது. தன்னலத்தை தகர்த்தெறிவது. அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மையையும், மன அமைதியையும் அளிக்கக் கூடியது.

ஓர் ஊரில் புகழ் பெற்ற பாதிரியார் ஒருவர் இருந்தார். அவரைச் சந்திக்க மூன்று நபர்கள் வந்தார்கள். அதில் ஒருவருக்கு கண் தெரியாது. மற்றொருவருக்கு கால்கள் ஊனம். மூன்றாமவர் அவலட்சணமாக இருந்தார்.

முதலாமவர், “பார்வை கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

இரண்டாமவர், “என் கால்கள் குணமாகி நான் மற்றவர்களைப் போல நடக்க அருள் புரிய வேண்டும்” என்றார்.

மூன்றாமவர், “நான் சிகப்பாக மாறி அழகாகத் திகழ வேண்டும்” என்றார்.

பாதிரியார் இந்த மூவரையும் பார்த்து, “ஏசு பிரானை மனதில் இருத்தி புனித மிக்க ஜோர்டான் நதியில் நீங்கள் மூவரும் மூழ்கி எழுந்தால், உங்கள் மூவரின் குறைகளும் நீங்கி விடும். நீங்கள் நினைத்தது நடக்கும்” என்றார்.

பாதிரியாரிடம் நன்றி கூறி விடை பெற்ற அந்த மூவரும், ஜோர்டான் நதிக் கரையை அடைந்தனர்.

பார்வையற்றவரும், அழகில்லாதவரும் மனதில் மிகுந்த நம்பிக்கையுடன் ஜோர்டான் நதியில் மூழ்கி எழுந்தார்கள்.

சக்கர நாற்காலியில் இருந்த அந்த ஊனமுற்றவர், இந்த ஜோர்டான் நதியில் தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் மூழ்கி எழுகின்றனரே? அவர்களுடைய துன்பங்கள் அகன்று விடுகின்றனவா? என சிந்தித்தார். தயக்கத்துடன் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார். பின்னர், சரி மூழ்கிப் பார்க்கலாம், இதனால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது என்று நினைத்தார்.

அருகில் வந்த ஒருவரிடம், மிகுந்த தயக்கத்துடன், சக்கர நாற்காலியோடு தன்னை ஜோர்டான் நதியில் இறக்கி மீண்டும் கரைக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

நதியில் மூவரும் மூழ்கி எழுந்து கரை வந்து சேர்ந்தார்கள். பார்வையற்றவருக்கு பார்வை கிடைத்தது. அவலட்சணமாக இருந்தவர் அழகானார். ஆனால், அந்த ஊனமுற்றவருக்கு கால்கள் சரியாகவில்லை. மாறாக, அவரது சக்கர நாற்காலியின் சக்கரங்கள் மட்டும் புதிதாய் மாறியிருந்தன.

இந்தக் கதையிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், இறை நம்பிக்கை மிகவும் முக்கியம் என்பது தான். இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதிசயம் ஏற்படும். நம்பிக்கையை இழப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது. இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம் இருந்தால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

இந்த நம்பிக்கையைத் தான் ஏசு பெருமான் அவர்கள் வலியுறுத்துகிறார். இதை நாம் கடைபிடித்தால், நாம் கேட்டதை இறைவனிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நல்ல லட்சியங்களுக்காக வாழ வேண்டும்; வாழ்வில் நற்பணிகளை செய்ய வேண்டும்; அதற்காகத்தான் இறைவன் நமக்கு மனிதப் பிறவியை அளித்து இருக்கிறான்.

“அன்பு கூர்வதும், ஏசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது” என்கிறார் ஆண்ட்ரு முரே. நம் நலனுக்காக மட்டுமல்லாமல், மற்றவர் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உங்கள் அனைவர் வாழ்விலும் அன்பும், அமைதியும் தவழ இறைவன் அருள் பொழிய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று அவர் தெரிவித்தார்