September 20, 2021

கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Christmas-Greetings-2015
கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு–பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சலுகையை 1974–ம் ஆண்டில் வழங்கியது தி.மு.க. ஆட்சி. இந்த சலுகையை மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கு நீட்டித்து 1975–ல் ஆணையிட்டது.

1989–ல் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், 1999–ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 2007–ல் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வகை செய்தது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை 2006–ல் ரத்து செய்தது.

செய்த பணிகள்
2010–ல் வள்ளுவர்கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு அன்னை தெரசா மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு 1968–ல் பேரறிஞர் அண்ணா தலைமையேற்று நடத்திய 2–ம் உலக மாநாட்டின்போது, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிலைகள் எடுத்து சிறப்பித்தது. நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இடம் நினைவிடமாக புதுப்பிக்கப்பட்டது. முல்லை பெரியாறு கட்டி முடித்த பென்னிகுவிவுக்கு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் சிலையெடுக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் விடுமுறையான டிசம்பர் 25–ந் தேதி அன்று மத்திய அரசின் சில அமைச்சகங்களுக்கும், மத்திய அரசுக்கு ஆதரவான சில அமைப்புகளுக்கும் தனித்தனியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளதால் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினரும் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் இந்துத்துவா கோட்பாட்டை புகுத்த தீவிரம் காட்டுவதுடன், நாடு முழுமைக்கும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர போவதாகவும் அறிவித்துள்ளனர். மத்திய அரசும், மற்றைய அமைப்புகளும் நாட்டு நலன் கருதி இத்தகைய அணுகு முறைகளை தவிர்த்திட வேண்டும். சிறுபான்மையினர் நலன்களை காத்திட வேண்டும்.”என்று அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”அன்பு, சமாதானம், இரக்கம் இவற்றின் புனிதவடிவமே இயேசு பிரான் ஆவார். மக்களை நேசித்து, அவர்களுக்காகவே தன் உயிரையும் தியாகம் செய்தார். அவர் செய்த தொண்டும், தியாகமும், போற்றப்பட வேண்டும். தனக்கென வாழாது, பிறருக்கென வாழ்க்கையை அர்பணிப்பவரை போற்றுவது தமிழ் பண்பாடு ஆகும்.

இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் குடும்பங்களில் அமைதி தவழ்ந்திட, ஒற்றுமையும், உயர்வும் ஏற்பட, மன நிம்மதியோடும், மகிழ்ச்சியுடனும், இருள் நீங்கி ஒளிமயமான வாழ்வு அமைந்திடவும், எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தே.மு.தி.க. சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.”என்று அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”அன்பு, கருணை மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தமிழகத்தில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்கும், ஏழை எளியோருக்கும் ஆற்றிய சேவை ஈடற்றது, உன்னதமானது. இந்தியாவில் மதவெறியை ஊக்குவித்து, மனிதாபிமானத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் சிதைக்கும் இந்துத்துவா சக்திகளின் அராஜகப்போக்கினை எதிர்கொண்டு முறியடிக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ்மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘கிறிஸ்தவ சமுதாய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி தவழட்டும். வளர்ச்சியும், வளமும் பெருகட்டும், தேசம் செழிக்கப்பட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்திய நாட்டில் வாழ்கிற சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் அனைவரும் டிசம்பர் 25–ந் தேதியை கிறிஸ்து பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த நாளின் முக்கியத்துவத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. பாரதீய ஜனதா அரசின் செயலை முறியடிப்பதற்கு மதசார்பற்ற அணிகள் ஓரணியில் திரள்வார்கள். கிறிஸ்துமஸ் விழாவை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கிற வகையில் சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.